Friday, October 31, 2008

கப்டன் மயூரன்

இயற்பெயர்: பாலசபாபதி
செல்லப் பெயர்: சபா
பிறப்பு: 01-11-1971.
வீரமரணம்: 11-11-1993

தந்தை: சபாபதிப்பிள்ளை தியாகராஜா,
தாய்: சிவகாமசுந்தரி தியாகராஜா.
பிறப்பிடம்: ஆத்தியடி, பருத்தித்துறை

பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: பூநகரி தவளைப் பாய்ச்சல்

தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது
1987- தை

இணைவதற்கு தூண்டு கோலாக அமைந்த சம்பவம்
யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியம். மற்றும் சகோதரான் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும் அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும் அசைக்க முடியாத உறுதியும்!

போராட்டத்தில் இணைந்தவுடனான ஆரம்ப பயிற்சி
போராளிகளின் பாலை(காடும் காடு சார்ந்த நிலமும்)நில வாழ்வுடனான போராட்டப் பயிற்சி.

இணைந்திருந்த பயிற்சிக் குழு
ஆரம்பத்தில் கிட்டுமாமா தலைமை.
பின்னர் வீரமரணம் அடையும் வரை சொர்ணம் தலைமை.

பணியாற்றிய குழு
'ஓ' குறூப் அல்லது 'சைவர்' குறூப் எனப்பட்டது.

போராட்ட காலம் முழுவதும் வாழ்ந்தது தலைவரின் அருகாமை.
தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி... விளையாடி... அதனோடு மண்ணிற்காய் போராடி வாழ்ந்தவன் மயூரன். தலைவரின் குழந்தைகள் அவனால் அவ்வப்போது தாலாட்டி உணவூட்டப்பட்ட கதைகளும் உண்டு.

மென்மையான உள்ளம், தளராத மனவுறுதி, தன்னிகரற்ற துணிச்சல் இவற்றிற்கு அவன் உதாரணமானவன்.

1988 காலப்பகுதிகளில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களில் பெரும்பாலும் மயூரன் பங்குபற்றி இருந்தான். ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகள் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், மயூரன் தனியாக நின்று 70க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும் காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பிய கதைகள் சக போராளிகளால் சிலாகித்துப் பேசப்பட்ட சேதிகளாக ஒலித்துக் கொண்டிருந்தன.

காட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவனும் முக்கியமானவன். போராளிகளிற்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தான். அதற்காகவே தோழர்கள் இவனைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருக்கும்.

கையினால் அவனாற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளிற்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தான்.

அம்மா, அப்பா, அண்ணாக்கள், அக்காக்கள், தங்கை... என்ற பெரும் உறவுகளுடன் உறவாடி வாழ்ந்த இனிய வாழ்க்கையின் நினைவுகள் அவனுக்குள் எப்பவும் ஒளிந்து கிடந்தன! இதனால் எப்போவாவது கிடைக்கும் அருமையான தனிமையில்.. பிரிவுத் துயரில் தோய்ந்து தொலைந்து போயிருக்கிறான். அது தலைவருக்கும் தெரிந்ததால் அவனை அவ்வப்போது உறவுகளைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்திருக்கிறார்.

மோட்டார் வாகனம் எப்பவும் அவனின் பயணத் துணையாக இருந்தது.

கப்டன் மயூரன் பங்கு பற்றிய முக்கிய தாக்குதல்கள்
* இதயபூமி
* ஆகாய கடல் வழிச்சமர்
* ஆனையிறவுச்சமர்.
* மண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர். (1991)
* பூநகரி 2வது சமர்.
* பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர்(1993 கார்த்திகை)

அவனின் இறுதிச் சமரான இந்தச் சமருக்கு அவன் செல்ல விரும்பிய போது "இப்போ அவசரப்பட வேண்டாம்" என்று தலைவரால் அறிவுறுத்தப் பட்டதும், "இல்லை நான் போகப்போகிறேன்" என்று பிடிவாதமாக விருப்பப்பட்டு அவன் சென்றதும் நெஞ்சில் பதியும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.

பூநகரித் தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த மாபெரும் முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று காற்றும் தீயும் கலந்த கானக வெளியில் மூச்சும் வாழ்வும் நம் மண்ணிற்கே என்று கரைந்து போன உத்தமர்களில் மயூரனும் கலந்து மாவீரன் ஆனான்!!

கப்டன் மயூரன் வீரமரணம்: 1993 கார்த்திகை 11ம் நாள்.
பூநகரி தவளைப்பாய்ச்சல் வெற்றிச் சமர்.


அவனது மரணத்தின் பின் அவனின் இளைய சகோதரி சந்திரா.இரவீந்திரன் அவர்கள் லண்டனிலிருந்து ஷஎரிமலை இதழுக்கு எழுதிய கவிதை வரிகள்

'கடல் கொந்தளித்தது...
ஜனங்களின் மனங்களைப் போல...
பனிக்காற்று உடலைத் துளைத்தது...
கூரிய ஊசிகளைப் போல...
மேகம் நிலவுக்கு விடைகொடுத்து
மூளியாய் இருண்டு கிடந்தது!
வலது கண் அடிக்கடி துடித்தது..!
கனவுகள் திரைகளாய் தூக்கத்தை மறைத்தது!
இதயம் தாய் மண்ணை நினைத்துத் தவித்தது!
நாழிகள் மரத்தனமாய் ஓட மறுத்தது..!
மின்னல் கோடிட்டு இடிகள் முழங்கின..!
கம்பிகளுடாய் சேதிகள் வந்தன..!
களத்தில்.. அவன் காவியமானான் என்று...!!
கடலும் காற்றும் பனியும் மேகமும்...
நிலவும் உலக ஒலிகளும்...
எங்கோ ஒரு அந்தந்தத்தில் அடைந்து போயின!
ஸ்தம்பித்த பூமியில்... ஜில்லிட்ட குருதியில்...
`சபா´ என்ற கூவலின் நீண்ட கேவல்..!
மௌனத்தின் விறைப்பில் ஏமாந்த கோபத்தில்...
´மயூரன்` என்ற விநோதமான விக்கல்..!

என் இனிய உடன் பிறப்பே..!
என் ஆசைத் தம்பியே..!
அழகிய அந்த ஈழ பூமியில்....
நீ எங்கே உறைந்து கொண்டாய்..?

கடல் கடந்து...வான்பறந்து...
மலை தாண்டி... மண்குதித்து...
படை மீறி வந்தாலும்...
நானுன்னை இனி எங்கு தேடுவேன்..!?
தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்!?
கொடிய பசியுடன் கூடவே தோழருமாய்...
திடுமென்று என் வாசலைத் தட்டிய போதெல்லாம்
நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும்
ருசியென்று உண்பாயே!
ஒரு கையில் சுமையேந்தி...
மறு கையால் உதவி செய்வாய்!
பிறர் கஷ்டம் பொறுக்காத...
தூயவனே... மயூரா...!
நானுன்னை இனி எங்கு தேடுவேன்...?
தம்பி... நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்..!?'

கப்டன் மயூரனின் இளைய அக்கா
சந்திரா இரவீந்திரன்.