கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.
இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.
மனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.
கூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்கும் éமிக்குமாய் குதிப்பு நடக்கும். பணிக்கப்பாலும் பறப்பு நடக்கும்.
நிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே 'சத்ஜெய" களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில்(1997) 'ஜெயசிக்குறு" ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்பயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக்களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.
ஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து 'இடனறிந்து" துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.
அத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.
திவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித்தலைவியாய்வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம்! உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி விலக்கல்ல.
மருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.
25.05.2000 'சட்" சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம்! ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள். 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்"
'தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்" என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.
'நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்."
புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.
அகநிலா
நன்றி - எரிமலை Feb-2005