Tuesday, June 29, 2004

மேஜர் மாதவன்



நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான்.

மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.

பழகிய மனங்களில் இவன் ஒரு அழியாச்சுடர். அல்லது ஞாபகச்சிற்பம்.
தொண்ணுhறுகளின் முன்பாதிக்கால நாட்களில், மாதவன் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக நடுவப்பணியகத்தில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அங்கே வரும் கலைஞர்களுடன் பழகுவதிலும் அவர்களுடன் ஒரு போராளியாக உறவாடுவதிலும், கலைகளைப் பயில்வதிலும் முன்மாதிரியாக இருந்தான். எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பது மாதவனின் தனி அடையாளம். எதிலும் எப்போதும் ஓய்வோ, சோர்வோ இல்லாத வேக உழைப்பு இவனுடையது.

மாதவன் இறுக்கமானவன். அதேவேளையில் அமைதியானவன். இளகிய இதயமுடையவன். மாதவன் தன் போராட்டச் செயற்பாடுகளினூடு ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. 'தாயகக் கனவு' வீடியோப்படத்தில் தன் வாழ்வுடன் இணைந்த பாத்திரமாக போராளிப்பாத்திரமேற்று நடித்திருந்தான். தாயக விடுதலைப் பாடல்களில் 'கரும்புலிகள்' ஒலிநாடாவில் 'தலைகள் குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா' என்ற பாடல் அவனது முதற்பாடலாக அமைந்து, எல்லோர் வாயிலும் அது ஒலித்தது. பின்னர் 'முல்லைப்போர்' இசை நாடாவிலும் அவன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. 'தேசத்தின் புயல்கள்' பாகம்-1 இசை நாடாவில், தானே எழுதி போராளிக் கலைஞர்களுடன் பாடிய 'கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்' என்ற பாடல் எங்கும் எல்லோராலும் நன்கு பேசப்பட்டது. இப்படியாக வந்ததற்கும்; இருந்ததற்கும்; சென்றதற்கும் கணிசமான சுவடுகளை விடுதலைப் போராட்டத்தில் பதித்துவிட்டு களத்தில் அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி வெளியே குயிலெனப்பாடி, நதியென ஆடித்திரிந்த அந்த விடுதலைப் பறவையின் நினைவுடன் இந்த மண்ணும் அதன் வரலாறும் இருக்கும்.

காற்றில் எழுதிய பாடலாக, நம் நினைவின் பெரும் பெருக்காக, எங்கள் முற்றங்களில் பூக்கும் மலராக மாதவன் என்றும் கலந்திருப்பான்.

nantri-erimalai - 2001