Showing posts with label லெப்.கேணல். Show all posts
Showing posts with label லெப்.கேணல். Show all posts

Wednesday, October 03, 2007

லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்



இம்ரான்-பாண்டியன்
யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி

பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்)
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988
(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)

இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.

எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.

சுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.

கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.

அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.

அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.

கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான "இம்ரான்-பாண்டியன்" பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.

இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.

Tuesday, September 25, 2007

லெப்டினன் கேணல் திலீபன்

லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987


தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும் -தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்



'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.

இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். 'ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! - சபேசன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)


திலீபன் பாடல்!

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே

வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்

அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.

தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு

கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.

நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்

தீட்சண்யன்
15.9.94

Tuesday, October 10, 2006

லெப்.கேணல்.மணிவண்ணன்


"நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசிவரை சண்டை பிடிப்பன்." அவன் சொன்னது போலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான்... அந்த அமைதியான போர்வீரன் "வெற்றி அல்லது வெற்றிக்காக
வீழ்தல்" என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.
அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன.

ஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள்.

19.08.2006இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன.

கொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் சுதாகரித்துக் கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். விசேட கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான்.

எறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை.வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங் காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும்.

மணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது.

இன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு துருப்புக்காவும் கவசவாகனம் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய இராணுவச் சிப்பாய்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து இராணுவத்தின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் துவம்சம் செய்யப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது.

ஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். விசேட கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப்போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல.ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் பாச உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது.

1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் உக்கிரமாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் மூர்க்கமாகச் சண்டையிட்டன. விசேட கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. "நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்" இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. "20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான்

20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன்எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் துருப்புக் காவிகளும் அவர்களுடன் சேர்ந்து துருப்புக்களும் முன்னகர்ந்தன. டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரிதன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின்சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான்.

அவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவசடாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் விசேட கவசஎதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது.

நவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது.

26.09.1998இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப் படுத்தினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். துண்டாடப் பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் துருப்புக்களும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டைஅதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் ஆவணி - புரட்டாதி, 2006தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப் படுத்தினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். துண்டாடப் பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் துருப்புக்களும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டைஅதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப் படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் துவம்சம்செய்தனர். தங்கள் துப்பாக்கிகளில் சன்னங்கள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர். இறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண் பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது.

மணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி,சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் கணம்வரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை.

ஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள்புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. மணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான் "நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்." அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.

ச.புரட்சிமாறன்

Quelle - விடுதலைப்புலிகள் (ஆவணி - புரட்டாதி, 2006)

Thursday, July 27, 2006

லெப்.கேணல்.வீரமணி

சுப்பரமணியம் வடிவேல்
வவுனியா
தாயின் மடியில் - 12.7.1975
மண்ணின் மடியில் - 24.5.2006


சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.

வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டு விடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான்.

மூத்த தளபதி கேணல் பால்ராஜ் சொல்கிறார், "புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்" என்று. அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது. இராணுவ அவதானிப்பு நிலையங்கள், தொடர் ரோந்துகள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக் கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் இராணுவச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டு பிடிப்பதே சிரமமான பணியாயிருந்தது. நெருங்க விடாது வெளியே செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவம் தாக்கிக் கொண்டிருந்தான். இந்த நிலமையில் இராணுவத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள் நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப் பட்டான்.

வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி (அதை இங்கே குறிப்பிடுவது வேவு இரகசியத்தை அம்பலமாக்கிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது) உள்ளே அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளே போக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்று விட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றி வளைக்கப் பட்டு அடி வாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது.

கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை.செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவு வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் அடி வாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டு சென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி.

எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு இராணுவத்தைப் பிடித்து விட்டதாகவும் அவர்கள் மயங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்த போது அந்த இராணுவத்தினர் என்பது எங்கள் வீரமணியும் சகவேவுவீரனும் என்பது தெரியவந்தது.

வெளியே வேவுக்கு அனுப்பிய வீரமணி கிளிநொச்சியில் உள் நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் பெறுமதி வாய்ந்த தகவல்களோடும் சகிக்க முடியாத வாழ்வு அனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வெளி வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக் கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.

செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான். அவனைப் பெற்றவள் அறியக் கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இரு நாளும் தளத்தைச் சுற்றிப் பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்ற போது முடியாமல் போனதாம். ஒவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித் துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும், தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டு வந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.

ஐம்பதாவது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பஸ் விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான்.

ஓயாத அலை - 02 இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத யுத்தகளமும் இல்லை, இவன் வேவுபார்க்காத இராணுவத் தளமும் இல்லை.

ஒரு போராளி சொன்னான். "என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லி விட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப் போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு "அத்தஉசப்பாங்" என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்க வைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கு இடையில என்னையும் இழுத்துக் கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான். இது நடந்தது 1997இல்.

கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்த போது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் இராணுவம் அவனைச் சல்லடை போட்டுத் தேடியது. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒருபற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்க மாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று "குஷிக்" குணத்தோடு தளத்தைச் சல்லடை போட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.

" மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சு போய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்து கொண்டிருந்தம். ஆமி றோட்டால ஷரக்ரரில போனவங்கள், நிப்பாட்டிப் போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சு கொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப் பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் "அறுவார் நித்திரை கொள்ளவும் விடாங்கள் போல கிடக்கு." எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந்தடியள இழுத்துக் கொண்டு போய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.

"வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப் போட்டுத்தான் சாவான். சொல்லிப் போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் "ச்சா வீணா இழந்திட்டம்.

வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக் கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் யுத்தகளத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.

வேறொரு போராளி சொன்னான், "மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்று விட்டோம். இராணுவத்தின் தடைக்குள் போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போக வேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டு விட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டு விட்டு சுற்றி வளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டு விட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணிசுற்றி வளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒருமார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண ஓடுங்கடா தடைக்குள்ள" என்று விட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம் போய் புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்ல வேண்டியதாய் காலம் சபித்து விட்டது.

"கேடு கெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் பலி கொள்ள முடியாமல் வெட்கம் கெட்ட தனமாய் கடற்கரையில் பலி கொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவு வரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடு போடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்து நிற்க. பிள்ளையார் தன்கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியது போன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன்குறிப்புப் புத்தகத்தில் வேவுத் தகவல் வரைந்து கொண்டு வருவான். எதையென்று சொல்வது. "

Quelle - viduthalaipulikal

Thursday, May 12, 2005

லெப்.கேணல் நவம் - டடி

செல்லப்பெருமாள் அருமைராசா
கொக்குத்தொடுவாய் முல்லை
2.2.1961-15.5.1989
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி


இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின் மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான்.

எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது வார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை நட்சத்திரமாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் பிரதேசத்தில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை நேசித்த.... வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

அதிதியாக வந்தோரால் அகதியாக ஆக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் பிரதேசங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது இராணுவ முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது பிதேசத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிப்பாகச் செய்யலாம். பாரண்ம் அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும்ää அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலைää மணலாறு என விஸ்தரித்;து வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களானää எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்து விடவில்லை. அவ்வப்போது மணலாறு பிரதேசத்தில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான்.

Wednesday, May 11, 2005

லெப்.கேணல் மல்லி - அமுதன்

சின்னத்தம்பி பத்மநாதன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி


லெப்.கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எனும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன.1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான்.1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற மூயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவிவரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

Saturday, May 07, 2005

லெப் கேணல் அமுதசுரபி

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா
சின்னப்பு நந்தினி
யாழ்பாணம்.
26-10-2001
கடற்புலிகளின் மகளீர் படையணித் துணைத் தளபதி

 தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத் தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப் பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் தாக்குதலை நடாத்தத் தொடங்கினோம். முறையான போடுää ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டுää பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூடää போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடா நாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர 'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும்ää சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டாளர்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்ணிமை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார் படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால்ää அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப் பெடுத்து திறமையாகச் செய்வார்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு விழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணித்தவாறு.

களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்டு அசைய மறுக்க, படகைக் கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப் பேச்சின்றி எம்மை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர எதிரிப் படகு, வந்து எமது படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்து வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப் படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது.

அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய்,ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

Sunday, May 01, 2005

லெப்டினன்ட் கேணல் ஜீவன்

பிள்ளையான் சந்திரமோகன்
கதிரவெளி, மட்டக்களப்பு.
மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி


கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.

கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.
#####
அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி.

இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப் படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்ää அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாறää சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்துää பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும்ää சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

87இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."

சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.

"ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்."

இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதிää தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"

அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.

தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."

புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.

"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"

இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.

"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்."

இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போலää பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.
#####
ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம்.

பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

- இராசமைந்தன் -

Saturday, April 30, 2005

லெப்டினன்ட் கேணல் மனோஜ்

பாலசிங்கம் வசந்தகுமார்
உப்பாறு, திருகோணமலை.
5.2.1971 - 11.12.2001

பாலத்தோப்பூர் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு

தலைநகர் உளற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே உப்பாற்று மண்ணை காப்பதற்கு மட்டுமல்லாமல், தமிழீழ மண்ணை பாதுகாப்பதற்க்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி.
தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் இவனோ தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் தமிழினத்தை காக்கப் புறப்பட்டான்.

எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்ச்சிகளை தன்சக போராளிகளுடன் மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணாதிசயங்களும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும்.

குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப்பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற வரிவிலக்கணத்தை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர்.

எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இந்த புண்ணிய இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டு பிடிக்க வருடக் கணக்காயின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டு பிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார்.

மற்றும் எதிரியுடன் சண்டை செய்வது என்றால் பூனைக்கு கொண்டாட்டம் எலிக்கு மரணம் போல் அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது.அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்ச்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர்.

ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிரு;தது.

மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான சிங்கள இராணுத்தின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 வருடங்களாகிவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை உதாசீனம் செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார்.

அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை தழுவிக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரண்ணாவிடம் இருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது.

இவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை யாழ்வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் பொலிஸ் நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் பொலிஸ் நிலையதாக்குதல், கந்தளாய் கடவாணை றோட் அம்புஸ் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித்தாக்குதல், மூதூர் பாலத்தோப்பூர் இராணுவப் புலனாய்வுப்பிரிவு முகாமே இறுதிமுகாமாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்ச்சி நெறிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார்.

நள்ளிரவில் தொடங்கிய யுத்தத்தின் சத்தங்களே எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று.

ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சு10ரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை.

வீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்த சிங்கம் 11.12.2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு துப்பாக்கி முனையில் தன் உயிரை நீத்து ஈழமண்ணை முத்தமிட்டு மூன்று போராளிகளுடன் ஓர் இமயமலை தரை சாய்ந்தது. அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள்.

உங்கள் ஞாபகமாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் "லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம்.

செல்வி ஜீவி
தலைநகர் மகளீர் படையணி


நன்றி: பாலசிங்கம் கமலநாதன்(லெப்.கேணல் மனோஜின் சகோதரன்)

Wednesday, April 27, 2005

லெப்.கேணல்.சாந்தகுமாரி/ஜெயசுதா

சூசையப்பு மொறாயஸ் ரமணி
மன்னார்
மண்ணின் மடியில் 06.10.2000

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.

புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.

இம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசங்களை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி கேணல். யாழினி (விதுஸா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டாh . சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி கேணல் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத்திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற சந்தோசத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.

இவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் சூசையப்பு தம்பதிகளுக்கு 1972ம் ஆண்டு 7ம் மாதம் 19ம் திகதி மகளாய்ப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் றமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக பாசமுடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் என்பவர் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.

இவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளி அனுபவமோ படிப்புவாசமோ பெரியளவில் அறியாதவர். ஆனால் அனுபவத்தால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ வொரு காவலரணாகச் சென்று எல்லாப்போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.

பயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ் கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித்தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ்தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட 'தவளை' நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவைகருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.

1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப்போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.

'இடிமுழக்கம்' என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01,02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப்போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரைகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும அவ விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை அவதானிப்பதுமாக கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.

சாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், "என்ன சாந்தகுமாரி? கையில் காயமா?" எனக் கேட்டபடி அருகில் வந்தார்.

"ஒன்றும் இல்லையக்கா" என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் "ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்" என்றார் தன் வழமையான சிரிப்புடன.

தன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பிரதேசத்துக்கும், எமது பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை அவதானிப்பு இடத்தில் இருந்து அவதானித்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.

சூரியகதிர் - 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் - 01 நடைபெற்ற காலப்பகுதியில் சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி முல்லைத்தள மீட்பின் பின் அங்குள்ள கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01,02,03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பிரதேசம் மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பிரதேசம் மீது தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதலோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்வான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.

ஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, "அப்பாடா! இப்பத்தான் நிம்மதி" என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் அனுபவத்தால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் அனுபவமே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.

இவ் வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத்தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பிரதேசத்திற்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.

இவர் சிறந்த துப்பாக்கிச்சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.

இவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி- பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக்காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.

இவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.

வோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தாh பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப்பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் "நத்தாருக்கு என்ன விசேடம்" எனக் கேட்க,
"பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்" என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.

உலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.

அந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்த எமது பிரதேசத்துள் நுழைய, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவா ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை அதிகாரியோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.

ஓயாத அலைகள் - 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஆர்வத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச்சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே கள முனைக்குச் சென்றார்.

2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு பிரதான பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் நித்திரைக்குச் செல்வார்.

ஓயாதஅலைகள் - 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் உக்கிரமாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.

நாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.

முதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, "அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ" என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பிரதேசத்தை மீட்கவேண்டும் என்ற ஆக்ரோசத்துடன் முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.

மன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரியின் இழப்பு எம் தேசத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்கொண்டிருக்கின்றன.

-மகிழ்நிலா-

Wednesday, November 24, 2004

லெப்.கேணல்.குமுதன்

குமுதன் - தவராஜதுரை
உடுத்துறை
- 16-09-2001

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்ட மாவட்டம் யாழ். மாவட்டம். இம்மாவட்டம் வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் மாவட்டமாகும். இங்கே வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராஜதுரை - அன்னலட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர் நாகேஸ்வரன்.

நாகேஸ்வரன்தான் சிரேஷ்ட புதல்வன். இவனுக்குப் பின் முன்று தம்பிமாரும், நான்கு தங்கைகளுமாக அன்புடன் வளர்ந்து வந்தான். சகோதரங்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவான். நாகேஸ்வரன் தன் ஆரம்பக்கல்வியை யாழ். ஆழியவளை சி.சி.த.க.கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஆறு வரை கற்றான். படிப்பிலே மிகவும் கெட்டிக்காரன். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி கலை நிகழ்விலும் சரி நல்ல கெட்டிக்காரன் தான். அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் இவனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பாடசாலையில் அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வான். ஆனால் படிப்பை இடையிலே நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

நாகேஸ்வரனின் பரம்பரை குடும்பத்தொழில் கடற்றொழிலாக இருந்தது. இவன் சிறுவயதிலே நன்றாக நீந்துவான். புலிக்குட்டிக்குப் பாய்ச்சலும் மீன்குஞ்சுக்கு நீச்சலும் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்றொரு பழமொழி உண்டு. அதுபோல இவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க யாரேனும் தேவையில்லை தானே. சிறுவயதிலே தந்தையுடன் சேர்ந்து கடலிலே தொழிலுக்குச் செல்வான். சிறுவயதிலே குடும்பப்பாரம் இவனது கையிலே இருந்தது. அதனால், கடற்றொழிலில் அனுபவமுள்ள இளைஞனாக வளர்ந்து வந்தான். தந்தைக்கு உறுதுணையாக இருந்து பொருளாதார வளத்தைப் பெருக்க உழைத்தவன் நாகேஸ்வரன்.

நாகேஸ்வரன் கலை ஆர்வம் கொண்ட இளைஞனாக வளர்ந்துவந்தான். தற்காப்புக்கலைகளில் பயிற்சி பெற்று பரிசில்கள் பெற்றிருக்கிறான். மற்றும் விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் உள்ளவன். இவனது பகுதியிலுள்ள செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தில் ஒரு விளையாட்டு வீரன். காற்பந்தாட்டம் ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு சிறப்புப்பரிசுகளைமயும் பெற்றுக்கொண்டான். அத்துடன் கிராமிய கலைவடிவான கூத்து வடிவ நிகழ்வுகளிலும் கலைஞனாக நடித்திருக்கிறான். குறிப்பாக காத்தவராயன் கூத்துநிகழ்வில் காத்தவராயன் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியிலே நல்ல பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைவிட கட்டுமரம் வலித்தல், நீச்சல், தலையணை சண்டை அனைத்திலும் பங்குபற்றுவான். நாகேஸ்வரன் மிகுந்த துணிவும், உறுதியும் கொண்ட இளைஞன். தனது சுயமுயற்சியால் தனித்து கடற்தொழில் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறான்.

இப்படியாக கடற்றொழிலில் இவனது இளமைக்காலம் போய்க் கொண்டிருக்கும் வேளையில் கடலிலே சிறிலங்கா இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் இடம்பெறும். அப்போதெல்லாம் இவன் தனது கட்டுமரத்தை கடலிலே விட்டுவிட்டு நீந்திக்கரை சேருவான். இவ்வாறு பல தடவை இராணுவத்திடம் பிடிபடாமல் தப்பிவந்திருக்கிறான். எனின் இவன் வீரமுள்ளவன் தான் என்று சொல்லாம்.

கடற்கரையோரம் வீடு அமைந்துள்ளதால் கடற்கரையோரங்களிலே இவனது சகோதரங்களுடன் நின்று விளையாடுவான். அவர்களுடன் தானும் சிறுபிள்ளையாக மாறி மகிழ்வுடன் விளையாடுவான்.

1991ல் வெற்றிலைக்கேணியில் இராணுவம் ஆக்கிரமித்திருந்தவேளையில் மக்கள் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவனது குடும்பம் செம்பியன்பற்று பகுதியில் இருந்தது. தாயக மண்ணில் சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருந்த காலத்தில் நாகேஸ்வரன் தன்னை உணர்ந்து தாய்நாட்டின் விடுதலைக்கு வலுச்சேர்க்க விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொள்கிறான்.

இவன் கடற்புலிப் போராளிகள் அணியிலே இணைந்து கொள்கிறான். இவனது ஆரம்ப, அடிப்படைப்பயிற்சிகளை வேகமான முறையில் எடுத்து முடித்துக்கொண்டான். பயிற்சிப் பாசறையிலே பயிற்சி ஆசிரியர்களோடும் போராளிகளோடும் அன்பாய் பழகினான். பயிற்சி முகாமில் இவனது திறமையால் பரிசுகளையும் பெற்று நல்லதொரு வீரனாக உருவெடுக்கிறான். அங்கே தனது பெயரை குமுதன் என்று மாற்றிக்கொண்டான். குமுதனின் மிடுக்கான தோற்றமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையம் அஞ்சா நெஞ்சமும் இன்னும் நினைவில் நிற்கின்றன.

குமுதன் கனரக பயிற்சிமுதல் கட்டளை அதிகாரி பயிற்சி வரை பெற்றிருந்தான். ஏற்கனவே கடல் அனுபவமுள்ள குமுதன் கடற்சண்டையிலே சிறந்ததொரு கடற்புலி வீரனென்றால் அதுமிகையாகாது. பல கடற்சண்டைகளிலே போராடிய வீரன். கடற்பயிற்சிகள் யாவும் இனவனுக்கு விருப்பமானவை. தலைவரிடமும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறான். நீச்சல், வேக நீச்சல், கட்டுமரம் வலித்தல், படகு ஓட்டம், வேக ஓட்டம் இப்படி பல விளையாட்டுக்களில் இவன் தனது முத்திரையைப் பதித்துவைத்திருக்கிறான். சிறு வயது முதல் கடல் அன்னையோடு குமுதனுக்கு இருந்த தொடர்பு இக்காலங்களில் அதிகமாக இருந்தது. நீலஉரியணிந்த வீரப்புலியாய் நீந்தித்திரிவான் குமுதன்.

16-09-2001 அன்று பருத்தித்துறை கடலிலே நடந்த பீரங்கிப்படகுத் தாக்குதலிலும் இவனது பணி முதன்மையாக இருந்தது. கடலிலே நடந்த சமரின்போது எதிரியின் குண்டுபட்டு கடலன்னையின் மடிமீது தலை சாய்ந்தான் லெப்.கேணல் குமுதனாக. தமிழீழ மண்ணிலே உறைந்துவிட்டான்.

கடலிலே மீனைப்போல நீந்தித்திரிந்த வரிப்புலி ஒன்று கடல்தாயின் விடிவிற்காய் தன் உயிரை தியாகம் செய்துவிட்டது. இந்த விடுதலை வீரனின் வீர உணர்வுகளை தமிழீழம் என்றமே மறக்காது. மாவீரர்கள் மரணத்தின் பின்பும் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சிரஞ்சீவிகள்.

'மானுட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம், மதம், மொழி கடந்து நேற்றுப்போல் இன்றும் நாளையும் என்றென்றும் எதிலும் உயிர்வாழ்வர்"

- போராளி நளாயினி -

Sunday, November 14, 2004

லெப்.கேணல் பாண்டியன்

செல்லத்துரை சிறிகரன்
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்

லெப்.கேணல் ஜொனி

விக்கினேஸ்வரன் விஜயகுமார்
பருத்தித்துறை
21.05.1962 - 13.03.1988

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார்.

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (16.03.06) லெப்.கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

Sunday, June 27, 2004

லெப்டினன் கேணல் சுபன்



மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.

1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால் பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

'சுபன்' தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேட கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

nantri-Erimalai-2001