Monday, December 08, 2003
வீரவேங்கை பகீன்
அன்னலிங்கம் பகீரதன்
மண்டைதீவு
வீரமரணம்-18.05.1984
வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.
ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் கிடக்கு.. போய்ப் படடா" என்று அதட்டிவிட்டு அயர்கிறார் அந்தப் பொறுப்பாளர்.
ஆனால் 18.05.1984 அன்று புதிய சாதனை படைத்து மண்ணின் விடியலுக்கு மறைந்தார் வீரவேங்கை பகீன். எந்த சயனைட் மீது சந்தேகப்பட்டாரோ அந்த சயனைட் அருந்தி எதிரியிடம் பிடிபட்டு விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரிய இலட்சியத்திற்கு அமைய வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சயனைட் அருந்தி களப்பலியான முதல் வீரவேங்கையாக வரலாற்றில் பதிந்து கொண்டார்.
அன்னலிங்கம் பகீரதன் இது வீரவேங்கை பகீனின் சொந்தப்பெயர். மண்டைதீவைச் சேர்ந்தவர். குடும்பச் சூழல் காரணமாக ஜேர்மனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளவிலா பற்றும் விசுவாசமும் மிக்க பகீன் ஜேர்மனியில் வசித்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வேலை செய்தார்.
பின்னர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்தவாறும் தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழீழம் சிங்களக் காடையர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தாங்கிக் கொள்ள முடியாத இந்த வேங்கை பறந்து வந்தது தாயகம் நோக்கி. தாயகத்தில் தலைவனின் அணியில் இணைநது பணியாற்றியது.
1983-1984 காலகட்டம் தமிழீழ வரலாற்றில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் தமிழீழத் தேசமெங்கும் சிங்களத்தின் கொடும் படைகளும், காட்டிக் கொடுப்போரும் நிறைந்த காலகட்டம். யார் வல்லவர், நல்லவர், நயவஞ்சகர் என்பது பிரித்தறிய முடியாத காலம். ஒரு விடுதலைப் போராளி இனங்கண்டு தரமறிந்து தன் செய்கருமம் ஆற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. சுற்றும் சிறீலங்கா இராணுவ வல்லூறுகளுக்கு மத்தியில் தனது உந்துருளியில் சுழன்று பணியாற்றினார் பகீன்.
18.05.1984 அன்று அமைப்பின் அரசியல் பிரச்சார வேலைகளுக்காக வல்வெட்டித்துறையில் இவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை முற்றுகையிட்டது சிங்கள இராணுவம். நிராயுதபாணியாய் நின்ற நிலையிலும் நிலை கலங்காத இளவேங்கை வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து பாவனை செய்யத் தொடங்கினார். ஆனால் சிறீலங்கா இராணுவத்தால் இனங்காணப்பட்டு விட்டார். வெறிக்கூச்சலுடன் சூழந்து கொண்டனர் சிறீலங்காப் படைகள். தன்னைச் சித்திரவதை செய்து அமைப்பின் இரகசியங்களைக் கறந்து விடக் கூடாது, அதனால் விடுதலைக்குக் கேடாக தான் அமைந்து விடக்கூடாது என்ற கடுகதியில் சயனைட் அருந்தி ஈழத்தாயின் மடியை முதன் முதல் சயனைட் அருந்தி முத்தமிடுகிறார்.
"இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" என்று யாழ் மீட்ட வீரன் கேணல் கிட்டு ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். ஆம் எங்கள் பகீனும் இன்று விடியலின் துருவ நட்சத்திரங்களில் ஒன்றாய் அமைந்து பதினேழு வருடங்கள் கடந்து போயின. எனினும் பல ஆயிரம் பகீன்களின் பயணங்கள் இலட்சியத்தை நோக்கி நகருகின்றன.