Showing posts with label மேஜர். Show all posts
Showing posts with label மேஜர். Show all posts

Wednesday, November 18, 2009

கடற்புலி மேஜர் தமிழ்வேந்தினி

இயற்பெயர்: கந்தையா விஜய கலா
செல்லப் பெயர்: கலா
வீர ஜனனம் : 20-05-1982
வீரமரணம் : 24-05-2007

நிரந்தர முகவரி : வண்ணான்கேணி பளை.
தற்காலிக முகவரி : புன்னை நீராவி, விசுவமடு.

பங்குபற்றிய இறுதித்தாக்குதல்:
நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதல் 24.05.2007

தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது 1996 இல்,
ஒரு இலட்சிய நெருப்பாய் சென்றவள், கடற்புலியாக உருவெடுத்து களம் பல கண்ட சிறந்த போராளி..!!

நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்பாகத்தான் தன் குடும்பத்தினரோடு விடுமுறையில் வந்து குதூகலமாக இருந்து சென்றாள்.
அம்மாவின் கையால் உணவுண்டு,  அண்ணனோடும் தம்பியோடும் சண்டை பிடித்து விளையாடி.. சின்னச் சின்ன சந்தோஷங்களில் மகிழ்ந்திருந்தாள்.

வீட்டின் முன்புறம் அண்ணனின் முழு நீள உருவப்படம் ஒன்று வைக்கப் பட்டு இருந்தது. அதன் அருகில் சென்று "எனக்கும் இப்படி ஒரு படம் சொல்லி அண்ணனுக்கு பக்கத்தில் வையடா, தம்பி" என்று கூறிவிட்டு அம்மாக்குச் சொல்லாதே, இப்போ இல்லை பிறகு.." என்றாளாம்.
அம்மாவின் ஆசைப்படி சேலை உடுத்து, பொட்டிட்டு, தலையில் பூமாலை சூடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. விடைபெறும் நாளும் வந்தது. கண்ணீருடன் கண்கள் விடைபெற, அம்மா கேட்டாள் "குஞ்சு எப்ப இனி வருவாய்?" புன்னகையுடன்  "ம்ம்ம்.. இனி வந்தால் புதுக்குடியிருப்பு பேஸ் இற்கு பக்கத்தில வீடு எடுத்துத் தருவன். அங்கு தான் இருக்க வேண்டும். விசுவமடு வேண்டாம்.." என்று விட்டு அன்னையை கட்டியணைத்து முத்தமிட்டுச் சென்றாள்.  பிறகு வரவில்லை.

நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத் தளம் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: 34 கடற்படையினர் பலி

Thursday, 24 May 2007
யாழ். தீவகம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் மேற்குப்புறத் தீவுகளின் தொலைவில் உள்ள நெடுந்தீவின் தென்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் 2006 இல் அமைத்த கடற்படைத்தளத்தின் மீது 24.05.2007 அதிகாலை கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ  தாக்குதல் அணிகள் படகுகளில் சென்று அதிகாலை 12.45 மணிக்கு நெடுந்தீவுப்பகுதியின் தெற்குக்கரையில் தரையிறங்கின. நெடுந்தீவு தெற்கு வெல்லைப்பகுதியில் தரையிறங்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், அதிகாலை 1.05 மணிக்கு உயர்பாதுகாப்பு அமைப்புகளுடன் இருந்த கடற்படைத்தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடக்கினர்.
தொடர்ச்சியாக கடற்புலிகள், கடற்படைத் தளத்தின்மீது தீவிரமாக நடத்திய தாக்குதலையடுத்து அதிகாலை 2.45 மணிக்கு தளத்தை முற்றாக தாக்கியழித்தனர். அப்போது அப்பகுதி சிறிலங்கா கடற்படையினர் டோராப் பீரங்கிப்படகுகள், நீருந்து விசைப்படகுகளில் வந்தன. இவற்றுக்கு எதிராகவும் கடற்புலிகள் தாக்குதலை தொடுத்தனர். அந்த தாக்குதலின் போது டோராப் பீரங்கிப்படகு ஒன்று கரையோர முருகைக்கற்பாறைகளில் மோதி முற்றாக சேதமடைந்தது.

மேலும் இரண்டு பீரங்கிப்படகுகள் சேதமாக்கப் பட்டன. இதனையடுத்து தளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கடற்புலிகள் அங்கிருந்த கடற்படையினரின் 50 கலிபர் துப்பாக்கி - 01, பிகே எல்எம்ஜி துப்பாக்கிகள் - 02, ஆர்பிஜி - 01, ரி-56 ரக துப்பாக்கிகள்-2 உட்பட போர் ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கடற்படைத்தளத்தில் 34 கடற்படையினரைத் தாக்கி கொன்றழித்த  கடற்புலிகள்,  சிறிலங்கா கடற்படையினரின் பெரும் பாதுகாப்புப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடற்படைத் தென்பகுதித்தளத்தை வெற்றிகரமாக தகர்த்து அழித்தனர். இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்புலிகள் 4 பேரில் மேஜர் தமிழ்வேந்தினியும் ஒருவர் ஆவார்.

வித்துடல் பெட்டி பூட்டப்பட்ட நிலையில் அவள் வீட்டிற்கு
தமிழ்வேந்தினி...!
கதறி அழுத சுற்றங்கள்... அன்னையின் கண்ணீர் என அவள் எதையும் பார்க்கவில்லை. வெற்றி பெற்ற சந்தோஷத்தோடு,  தமிழீழக் கனவோடு, உறங்குகின்றாள்.  இல்லை, தமிழீழ மூச்சோடு மண்ணில் கலந்து, விருட்சமாகி,  எம் நெஞ்சில் வாழும் மாவீரர்களில் ஒருவராய் சுடராகி விட்டாள்.

அவளின் அன்புத்தம்பி அண்ணனின் அருகில் அக்காவிற்கு படம் வைத்து, பூமாலை சூட்டினான். அக்காவின் வழி செல்ல மனம் துடித்தாலும் அன்னையின் உடல்நிலைக்காக கட்டுப்பட்டு, இன்று முகாமில் செய்வதறியாது தவிக்கும், ஒரு அப்பாவி இளைஞனாக.., அக்காவை எண்ணிப் பெருமைப்படும் ஒரு தம்பியாக.., அங்கு அல்லற்படுகின்றான்.

Wednesday, July 26, 2006

கடற்கரும்புலி மேஜர் நித்தியா

கடற்கரும்புலி மேஜர் நித்தியா
(செல்வராசா தயாளினி )யாழ்ப்பாணம்
16.09.2001 பருத்தித்துறைக் கடற்பரப்பில் கப்பல்
தொடரணி மீதான கரும்புலித் தாக்குதல்.


சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல், களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பயிற்சி செய்வார். களம் செல்வார்.
காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார்.
மறுபடி பயிற்சி, சண்டை, காயம்,......., ......., என்று ஒரு தொடர் சங்கிலி.

அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல், அன்பான அணி முதல்வியாகவே தனது முதற் களமான 1992ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காப்பரண்கள் மீதான தாக்குதலில் தொடங்கி, 1997இல் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை வரை எம்மோடிருந்தார். பயிற்சி செய்தால், தூரம் நடந்தால் கால் வீங்கும் என்று தெரிந்து கொண்டே சளைக்காமல் எல்லாவற்றிலும் ஈடுபட்ட நித்தியாவினுள் கரும்புலிக் கனவு மொட்டவிழ்ந்து வாசம் வீசியபோது, எங்களுக்குத் தெரிந்துவிட, “என்ன நித்தியா, கரும்புலிப் பயிற்சி செய்யிற நிலைமையிலா நீ இருக்கிறாய்” என்ற நண்பிகளின் அக்கறையான கேள்விக்கும் சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டு, அவர் போய்விட்டார்.

-மலைமகள் -

படம் : அருச்சுனா
Quelle - விடுதலைப்புலிகள்-ஆனி, ஆடி 2006

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை/நைற்றிங்கேள்
(சத்தியவாணி துரைராசா) பூநகரி, மன்னார்.
22.02.1998 பருத்தித்துறைக் கடற்பகுதியில் பபதா
தரையிறங்கு கலம் மீதான தாக்குதல்.


நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறண் எல்.எம்.ஜியும் ஒரு ஆர்.பி.ஜியும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலும் பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை. நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.

1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப் படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ஆகாய கடல் வெளிச்சமர் பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த ராங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப் பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா)
வரும். எங்கு ராங்க் இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப் பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”
கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”
அதிர்ச்சி தரும் பதில்.

“எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,
“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”

என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.

-மலைமகள் -

படம் : அருச்சுனா
Quelle - விடுதலைப்புலிகள்-ஆனி, ஆடி 2006

Tuesday, November 22, 2005

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

வீரமரணம் - 11.04.2000

ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை... தன்தாயை நேசித்தது போலவே... தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்.....

தாய்:- ‘என்ரபிள்ளை... என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது... இப்ப.... இப்ப... அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்... என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு...

மகன்:- ‘அம்மா....... என்னை எங்கையும் தேடவேண்டாம்... நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.........’

குரல்:- அவன் தன்னுடையதும்...தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டுகண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.

அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்...அவன் மென்மையாய்... புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது... தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட....... தேசியத்தலைவரையும்......... போராளிகளையும்........ மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ......... தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்...

‘தேசத்தைச் செதுக்கியவர்களே........
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச்
செதுக்குகின்றோம்.
செதுக்கப்படாமலும் இன்னும் சிலர்
வெளித்தெரியாமலும்... எங்கள் மனதில் மட்டும்.
உண்ணாமல் பசிகிடந்து... உறங்காமல் விழித்திருந்து
கால்வலிக்க காடுதாண்டி
கைகள்வலிக்க கடல் தாண்டி
ஈழம் வேண்டிடப்போனீர்... நாம்...
இதயம் விம்மிட நிற்கின்றோம்...
என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்....

தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்துகொண்ட அறிவுக்குமரன், தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை, கௌரவமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்.

அவன் முதலில் கந்தகப்பொதிசுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனைபண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில், 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.

அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறானபோது, இவன்மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.

1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்... ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க.... அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவதுபோல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்... அறிவுறுத்தலோடும்... ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.

அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்துதான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத்தளத்தையும்.... எதிரியின் ஆ.ஐ.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும், தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.

மீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொருகளமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறது, எதிரி கடுமையான எதிர்ப்புக்காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம்மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.

கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.

அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டுவந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை. எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர்பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்கமுடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.

இப்போது தாக்குதலுக்கு தலைமைதாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். "நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ" அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப்பார்க்கிறான். "நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்லவேணும். அது, இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்"

சிறிது நேரத்தில், அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே, அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு, எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியேவந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்.

இளமையை இதமான உணர்வுகளை
இனியசுகங்களை ஒதுக்கியவர்களே....
தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள்
பெயரைச்செதுக்குகின்றோம்...
செதுக்கப்படாமலும்... இன்னும்சிலர்
வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’

அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்று, ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்.... வேவுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது... கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்... காயம் மாறமுன்பு... மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்...

10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்லவேண்டும்... அங்கும் அவனது கடமைகள் இருந்தன... அன்று - முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க... கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.

திருமலையில்... அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.... இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும், கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்... அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு... அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது... அவனுக்குள் ஆனந்தம்... மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்... அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்... அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்.

11.04.2000 அன்று.... கடலிலே படகு அறிவுக்குமரனையும், துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக்கொண்டு விரைகிறது... அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன..

(உயிர்கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்... பாடல்வரிகள் ஓய...)

கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது... அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்... அறிவுக்குமரனோடு... துணைப்படைவீரன் ஜோன்சனும், அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்... அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்.... கவிதைகளை, பாடல்களை, சம்பவங்களை புலிகளின்குரல் நேயர்களுக்காக எழுதினான்... தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும், சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின.

அறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன.

சி. கண்ணம்மா.

Friday, November 18, 2005

கடற்கரும்புலி மேஜர் சந்தனா

வீரமரணம் - 20.06.2000

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

"அடிக்கடி வீட்டை வா மோனை" என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் "கிட்டடியில வந்திடுவன் அம்மா" அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா. தனது இனத்தின் விடுதலை வேண்டிப் போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீராங்கனைகளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான விசேட பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள். எதிரியின் அதிஸ்ரம், அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் அவன் தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் "என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்" என்று.

தன் நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிக் கணங்கள் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள். அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு "நான் திரும்பி வரமாட்டன்" இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் "திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா" என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.

26- 06- 2000 அன்று
யாழ் குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது 'உகண' கப்பல். கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின. கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்தது 'உகண' கப்பல். பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே லாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற் றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானேந்திரன். மேஜர் ஆரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய 5 காவிய நாயகர்களும் கடலில் சங்கமமாகினர்.

Friday, May 13, 2005

மேஜர் சோதியா

மைக்கேல் வசந்தி
கரவெட்டி, யாழ்பாணம்.
மகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி


பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.

நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

சோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.

ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.

விடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.

அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.

காடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.

எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.

சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.

உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை... நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.

கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.

கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.

கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.

கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா... அதுதான் எங்கள் சோதியாக்கா.

பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...

காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.

உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.

அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.

வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.

சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.

உங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.

- விசாலி -

Saturday, July 03, 2004

கரும்புலி மேஜர் டாம்போ

காசிப்பிள்ளை தயாபரன்
நாச்சிக்குடா மன்னார்
17.8.1967 - 19.3.1991


1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.

"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். "எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்" களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்" சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். "நானும் கொஞ்சதூரம் வாறன்" நண்பன் கூற, "வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்"

கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.

மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.

கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். "டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்" என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று.... மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.

"நான் போறன், வருவனோ தெரியாது" என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.

டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்... அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன - அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்.... நினைத்துப்பார்க்கிறோம்....

"வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா... சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.

இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.

நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.

நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது...


ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

- கதிரவன் -

Friday, July 02, 2004

கரும்புலி மேஜர் சிறீவாணி

சாந்தினி சின்னத்தம்பி
மட்டக்களப்பு
23.11.75 - 5.7.2000


அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது.

அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.

அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே.

அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும், தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது.

அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் ஸ்ரீவாணி.

அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம், சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது, அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து, தாயாய் அரவணைக்கும் இயல்பு, அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள்.

சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?!

அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் 'கழுதாவளை' கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே.

அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்... அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு, அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன.

மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல், வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி.

"வண்டு" அவளை இப்படித்தான் செல்லமாக எல்லோரும் அழைத்துக் கொள்வார்கள். அது அவளுக்கு பொருத்தமாக வைக்கப்பட்ட காரணப் பெயர். சின்ன உருவம், திருதிருவென விழித்தபடியும், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டும் துடியாட்டமாய் திரிகின்ற அந்த குறுப்புக்காரியின் செல்லப் பெயராக அது நிலைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவள் 'வண்டக்கா' என்றுதான் எல்லோருக்கும் அறிமுகம்.

எல்லாப் போராளிகளையும் தன் சொந்தங்கள் என நினைத்துக் கொள்ளும் அவள் சண்டையில் அல்லது மற்ற எந்தச் சூழ்நிலை என்றாலும் ஒவ்வொரு போராளிகளையும் அவதானமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வாள். அவளின் வாழ்க்கையே அதிகம் வேவு நடவடிக்கைகளிலேயே கழிந்தது. வேவு எடுக்கின்ற நாட்களிலும் அவளின் துடியாட்டத்திற்கும், கலகலப்பிற்கும் குறைவே இல்லை.

இரவு வேவிற்காய்ச் செல்வதற்கு முன் ஓய்வாக கிடைக்கின்ற சிறு நேரத்திற்குள்ளும், எதிரியின் பிரதேசத்திற்குள்ளும் அருகில் இருக்கின்ற குளம் ஒன்றிற்குச் சென்று தாமரைக் கிழங்கு தோண்டிக் கொண்டு வந்து அதைச் சுட்டு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழ்வதில் அவளுக்கோர் திருப்தி. தாமரைக் கிழங்கிற்காகச் சென்றால் இராணுவத்தின் பாதுங்கித் தாக்கும் அணியோ, அல்லது வேவு அணியோ அவர்களைக் கண்டு தாக்குதம் சந்தர்பங்கள் இருந்தாலும் அதை முறியடித்து அந்தக் கிழங்குகளை எடுத்து வந்து சாப்பிடுவது அவளிற்கு ஒரு சவாலைப் போல விளையாட்டாகவே நினைத்து தோழிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்.

இருளே இல்லாத நிலவு நாட்களில் கூட வேவிற்காக அவள் சென்று வந்திருக்கிறாள். வேவு பார்ப்பது, பாதை எடுப்பது இப்படி எதுவென்றாலும் அவளும் அந்தப் பணிகளில் ஒருத்தியாக முன்னிற்பாள். சரியான துணிச்சல்க்காரி. எல்லாவற்றையும் விட அவளுக்குள்ளேயே குமுறுகின்ற தேசப்பற்று, அதை விரைவாக வென்றுவிட வேண்டும் என்கின்ற ஆர்வம், நினைத்ததை உறுதியாக செயற்படுத்தி விட வெண்டும் என்கிற தீவிர எண்ணம் எல்லாம்தான் அவளை அவளின் பக்கத்தில் வேகமாகிக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து தாக்குதல் அணிகள் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டபோது இவள் வேவு அணியோடு இணைந்தே வந்திருந்தாள். மட்டக்களப்பின் காட்டுப்பாதைகள் வழி எம் - 70 துப்பாக்கியைத் தோளிலே சுமந்தபடி அலைந்து திரிந்த அவளது பாதங்கள் பல களத்தில் கலந்து கொண்ட அவளின் கால்கள் யாழ். களமுனைகளிலும் நடந்தன. யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயேதான் அவள் கரும்புலியாக வேண்டு என்ற விருப்பத்தை தலைவருக்குத் தெரிவித்தாள்.

ஒருநாள்.....

இவள் நிற்கின்ற முகாமிலே அணிகள் ஒன்றானபோது சிறு பிரிவாய் இன்னுமொரு அணியும் ஒன்றாகி இருந்தது. "வண்டு" அருகில் நிற்பவர்களிடம் இரகசியமாக கேட்டு அவர்கள் எந்த அணியினரென தெரிந்து கொண்டாள். அவர்கள்தான் கரும்புலி அணிக்குத் தெரிவாகி இருப்பவர்கள் என்று அறிந்ததும் உடனேயே அந்த அணியோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிற்குள் நெடுநாளாய்ப் பூட்டி வைத்திருக்கும் இலட்சியம் அதுதானே... ஆனால், அவளது வேண்டுதல்களை அப்போது யாரும் ஆதரிக்கவில்லை. மிகச் சிறிய தோற்றம். சண்டைகளில் முதிர்ச்சி பெறாத நிலை இப்படி எவ்வளவோ காரணங்களைக் கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை.

"கரும்புலியாய்ப் போய் நிறையச் சாதனைகள் செய்யவேணும்" இந்த உறுதியில் சிறிதும் குறையாது இருந்தாள். அன்றில் இருந்து தலைவரின் அனுமதியைப் பெற்று ஆரம்பமான அவளின் கரும்புலியான பணிகள் பல களங்களிலும் தொடர்ந்தன.

அனைத்து ஆயுதங்களையும் சிறப்பான முறையில் கையாளக் கூடியவளும் சிறந்த நீச்சல்காரியாகவும் திகழ்ந்த ஸ்ரீவாணி அதிகமான களங்களிற்கு 'லோ' வுடனேயே சென்று வந்தாள்.

"நான் எல்லாப் பொசிசனில் இருந்தும் 'லோ' வால அடிச்சிட்டன்" இப்படிக் கூறினாலும் அவளும் அந்த ஆயுதமும் நிறைய தேசத்திற்கு செய்து காட்டவேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவள் வார்ததைகளில் யாருக்கும் தெரியாமல் மெல்லியதாய் இழையோடும்.

கரும்புலியாய் இணைந்து இலக்குத் தேடி அலைந்த நாட்களில் ஆனையிறவு தளத்தினுள் இலக்கிற்காக வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாள்.

மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைக்கேணி இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவி மணல் பிரதேசத்திலும் கால்தடம் படாது நடந்து சென்று, சின்னச் சின்ன நாவல் மரங்களையும் கன்னாப் பற்றைகளையும் மறைப்பாக்கி மணல் திட்டுக்களில் மறைவாகத் தங்கியிருந்து, கொண்டு சென்ற சிறிதளவு தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்து, நாக்கு நனைத்து உலர் உணவுப் பைகளோடே ஐந்தாறு நாட்களின் பசிப் பொழுதுகளைப் போக்கி, இராணுவ முகாமிற்குள்ளேயே இநருந்து வேவுத் தகவல்களைத் திரட்டி மீளுகின்ற சிரமமான பணியது.

ஸ்ரீவாணிக்கு அந்தப் பணியே நன்கு பிடித்திருந்தது. மண்ணிற்காகச் சுமந்து கொள்கின்ற ஒவ்வொரு துன்பங்களும் இன்பமானவைகள் தானே... சுமைகளைச் சுகமாக நிதை;த பின் சுமப்பது அவளிற்கு சிரமமானதாக இருக்கவில்லை.

அந்த ஆனையிறவின் வேவிற்காக அலைந்த நாட்களில் ஒரு நாள் முன்னரங்குகளால் ஊடுருவி உள்நுளைந்த போது எதிரி விழிப்படைந்து விட்டான்.

அவர்கள் முன்னணி நிலைகளிலிருந்து, சில காலடி து}ரம் நடந்திருப்பார்கள் காவலரண்களில் இருந்து செறிவான சூடுகள் அவர்களை நோக்கி வந்தன. நிதானித்து எதிர்ச் சூடுகளை வழங்கி நிலைமைக்கு ஏற்றவாறு நிலையெடுத்துக் கொள்ள நேர அவகாசம் இருக்கவில்லை. எதிர்பாராத இந்தக் தாக்குதலினால் அணி நிலை குலைந்து போயிருந்தது.

தாக்குதலின் எதிர்ச் சூடுகளை வழங்கிய படி இவளும் இன்னும் இரு போராளிகளும் சற்றத் து}ரம் தள்ளி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒரு தோழிக்கு காலில் ரவை பட்டிருந்தது. அவளால் காலை எடுத்து வைக்கவோ அசைக்கவே முடியாது இருந்தது. பல தடவை முயற்சி செய்து பார்த்தாள். அதுவும் பலனளிக்கவில்லை.

இந்தக் களச் சூழலில் அணியின் மற்றவர்களைத் தேடுவதற்கும் எதிரியின் நிலைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறிவதற்கும் ஸ்ரீவாணி தனித்து ஒருத்தியாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்தவித தயக்கமும் இல்லாது கடும் சிக்கல் நிறைந்த இராணுவப் பிரதேசத்தினுள் தன் தேடுதலை நடாத்தி இன்னுமொரு போராளியையும் கண்டு கொண்டாள்.

அதன் பின்னும், அங்கே நிற்பவர்கள் ஒவ்வொருவரினதும் செயற்பாடும் மிக முக்கியமானதாய் இருந்தது. இராணுவப் பிரதேசத்தைக் கடந்து விழுப்புண் பட்ட போராளியை கவனமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ரவை பட்ட காலில் பெரிதான சிதைவை ஏற்படுத்தி இருந்தது. எலும்பை உடைத்து தசைகள் வெளியே தெரிய இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அந்தப் புண்ணுடன் எழுந்து நடக்க முடியாது தவழ்ந்து செல்வதென்றாலும் தவழ்கின்ற போது காயப்பட்ட இந்தக் காலை வெப்பில் கொடிகள் பிய்த்திழுக்கும். தடிக்குச்சிகளும் மண்ணும் காயத்தோடு உரசி வேதனையை இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு தடவையும் காயம் பட்ட அந்தப் போராளி தவழ்கின்ற போதும் அவளுடன் வர மறுக்கின்ற காலை கையால் இழுத்தபடி நகரும் அந்தப் போராளியின் நிலை வேதனையாய் இருந்தது.

ஸ்ரீவாணி அந்தப் போராளிக்காக தானும் அந்தப் போராளியைப் போலவே தவழ்ந்து வந்தாள். தோழியின் கால் சிக்குப்படுகின்ற நேரங்களில் அவற்றில் நோவேற்படாது பக்குவமாய்த் து}க்கி விட்டபடி தொடர்ந்தாள். காயப்பட்ட போராளியின் ஆயுதமும் வேறு பொருட்களும் சேர்த்து ஸ்ரீவாணிக்கு பாரம் அதிகமானாலும் அவள் மற்றவர்களுக்காக உதவுகின்ற செய்கையிலிருந்து தளரவில்லை. அந்த மணற் பிரதேசத்தில் அவ்வளவு அவ்வளவு பொருட்களோடும் காயபட்ட தோழிக்காகத் தவழ்ந்து வருவது சுலபமானதாக இருக்கவில்லை.

பெருங்கடலில் இறங்கி நடக்கத் தொடங்கிய போது இவளின் குறைந்த உயரம் இடையிடையே தண்ணீரில் மூழ்கி எழத்தான் செய்தது.

இரவிரவாக தண்ணீருக்குள்ளால் நகர்ந்து கரையை வந்தடைந்த போது காயப்பட்ட போராளி நினைவிழந்து இருந்தாள்.

எல்லோரதும் விறைத்த உடல்கள் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் அவர்கள் போய்ச்சேர வேண்டிய தூரமோ அதிகமாய் இருந்தது. காயப்பட்ட போராளிக்கு முதலுதவி செய்ய வேண்டும். நிலைமையை உடன் கட்டளை மையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். தொலைத் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைத் தொடர்பு சாதனம் தண்ணீர் பட்டதால் செயலற்றுப் போயிருந்தது. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் விரைவாகச் செயற்படாவிட்டால் சக தோழியின் நிலை ஆபத்தாகிவிடும் என்பதை அந்தச் சூழல் தெளிவு படுத்திக் கொண்டிருந்தது.

இந்தத் தகவல்களைச் சொல்லி உடனே முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட தூ}ரம் பயணிக்க வேண்டியிருந்தது. இத்தனை உடற் சோர்வுகளோடும் ஸ்ரீவாணிதான் அந்த நீண்ட து}ரத்தை விரைவாய் ஓடிச் சென்றடைந்து நிலைமையைச் சொல்லி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உரிய நேரத்தில் உதவினாள்.

இப்படி எந்த நேரத்திலும் சோராதவள், எவ்வளவு இறுக்கத்திலும் சளைக்காதவள், தேச விடுதலையென்ற ஒன்றையே மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருப்பவள், மற்றவர்களின் துன்பங்களுக்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் காரணங்களைத் தீர்ப்பதற்கு உழைத்துக் கொண்டிருப்பவள், அதனால்தானே தனக்கு எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் மற்றவர்களின் வேதனைகளை, துன்பங்கைளப் போக்குவதற்கு போரை விரைவாய் முடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனையிறவுக் களத்திற்கு அவளோடு களமாடச் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற ஏக்கம் நெடுநாளாய் நெஞ்சுக்குள் உறங்காமல் இருந்தது.

அவர்களைப் பிரிந்து அவள் சாதனை புரிந்து விட்டு வந்திருந்த நாட்களில் அவளின் முகத்தில் மலர்ச்சியே இருக்கவில்லை. சோகம் சூழ்ந்து வாடிப்பொய் இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பூப்பறித்து வந்து மாலை தொடுத்து அவர்களுக்குச் சூட்டிய பின்னர்தான் வழமையான பயிற்சிப் பணிகளில் ஈடுபடுவாள்.

பலவர்ணப் பூக்களிலும் மாலை மிக அழகாகக் கட்டுவாள், தன் கூடவே இருக்கின்ற போராளிகளுக்கும் மாலை கட்டப் பழக்குவாள். (இப்போது அவள் மாலை கட்டப் பழக்கிய தோழிகள் அவளின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டுகின்றனர்.) அந்த தோழிகளின் நினைவினிலேயே மூழ்கியிருப்பவள் நெஞ்சுக்குள் விடுதலைக் கனவின் கனதி இன்னும் அதிகமானது.

அவள் நினைத்து வந்த இலட்சியத்திற்காக உழைக்க வேண்டும். கூடவே அவளோடு களமாடிப் போனவர்களின் விடுதலைக் கனவையும் சுமக்க வேண்டும். அதற்காக தான் ஒவ்வொரு சண்டைகளிலும் தவறாது பங்கெடுத்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வாள்.

ஸ்ரீவாணி கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முன்னும் கரும்புலிகள் அணியில் இணைந்து செயற்படத் தொடங்கிய நாட்களிலும் அவள் பல சண்டைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியுள்ளாள்.

அவள் கரும்புலியாகக் கலந்து கொண்ட இறுதித் தாக்குதல் பளை ஆட்டிலறித் தளங்கள் மீதான கரும்புலித் தாக்குதலாகும். பதினொரு ஆட்டிலறிகளைத் தகர்த்து புதியதொரு பரிமாணத்தை ஓயாத அலைகள் - 3 காலப்பகுதியில் ஏற்படுத்திய கரும்புலிகள் அணியில் ஸ்ரீவாணியும் ஒருத்தி. அவள் அந்தத் தாக்குதலுக்கு "லோ" வோடுதான் சென்றிருந்தாள்.

அணிகள் வேகமாக அந்தத் தளப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இவளின் இலக்குத் தவறாத சூடு மிக முக்கியமானது. கரும்புலி மேஜர் சுதாஜினி இக் களத்தில் வீரச்சாவடைய அவளது பணியை இவளே ஏற்றுத் தொடர்ந்தாள். முதல் பெண் தரைக் கரும்புலி வீரச்சாவடைந்த தாண்டிக்குளச் சண்டை தொடக்கம் கரும்புலிகள் அணி கலந்து கொண்ட அதிகமான தாக்குதல்களில் இவளும் பங்கெடுத்திருக்கிறாள். ஆனால், இந்தக் களத்தில்;தான் களம் ஏற்படுத்திய வீரவடுவாக வெடியதிர்வுகள் பாரிய உடற்தாக்கத்தை விளைவித்திருந்தது. காதுகளிற்குள்ளிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் தனது இயல்பான சமநிலையை இழந்திருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஸ்ரீவாணி தொடர்ந்தும் தன் பணிகளில் விரைவானபடியே இருந்தாள்.

தனது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்ககையை போராட்டத்தில் கழித்தவள், அவளிற்கு இந்தக் களச் சூழல் புதிதாக இருக்கவில்லை, களத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு களங்களிலும் அவள் சென்று வருகின்ற போது வீரத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துவிட்டே வந்தாள்.

அவளது வாழ்க்கையில் ஐந்து வருடங்களைக் கரும்புலியாய்க் கடந்தவள், நீண்ட நாட்களாக அவளின் (கரும்புலிக்கான) இலக்கிற்கான காத்திருப்பு, அதற்காக அவள் பெற்றுக் கொண்டிருந்த கடுமையான பயிற்சிகள் எல்லாமே அவளிற்குள் இந்த வைரமான உறுதியை வெளிக்காட்டின.

"நிறையச் செய்ய வேணும், தேசம் எதிர்பார்ப்பது போல சாதிக்க வேணும். அதற்குப் பிறகுதான் கதைக்கவேணும்"

இதுதான் அவள் தனது அடக்கமான வீரத்திற்கு கூறுகின்ற முன்னுரைகள், அவள் தன்னைப்பற்றி தான் சென்ற தாக்குதல்கள் பற்றி யாரோடும் பேசியதில்லை. தன் கூட இந்தவர்களைப் பற்றியே எப்போதும் போசிக் கொள்வாள்.

ஓயாமல் வீசிக் கொண்டிருந்த இந்தப் புயல் ஓய்ந்துவிடப் போகின்றதை யாருமே எதிர்பார்த்திராத அந்த நாள்.

வழமைபோல முகமலர்ச்சியோடு கறுப்பு வரிச் சீருடையோடு எல்லாத் தோழிகளுடனும் சிரித்துக் கலகலத்த படி இருக்கிறாள். 05.07.2000 அன்று கரும்புலிகள் நாளல்லவா...? கூட இருந்தவர்களை நினைத்து அஞ்சலிப்தற்காய் அந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள். நிகழ்வோடு ஒன்றாய் எல்லோரையும் போலவே அவளும் மெய்சிலிர்த்துப் போயிருந்தாள்.

அந்தக் கணத்தில்தான் எதிர்பாராத விபத்து அங்கே நிகழ்ந்து விடுகிறது. சாதாரண காயம் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவளிற்குத் தெரியும்... நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட காயமென்று. தன் சாவின் விளிம்பைத் தெரிந்து கொண்டும் சாதிக்கத் துடிக்கின்ற கரும்புலியல்லவா அவள். சாவு நெருங்கி விட்டது, அவள் நினைத்தது போல களத்தில் சாதிக்கவில்லையே... களத்திலேயே தன்சாவு வரவில்லையே... என்ற ஏக்கம் முகத்தில் வாட்டமாய் இருந்தது.

விழிகள் எதையோ ஆர்வமாகத் தேடின. அவள் அருகில் நின்ற தோழியிடம் சத்தமற்ற குரலில் "அண்ணாட்டச் சொல்லுங்கோ நான் பொய்சன் எடுத்துக் கிடந்துதான் காயப்பட்டனான் என்று..." அந்த இறுதிக் கணத்திலும் தலைவரிற்கு இறுதியாக இந்தச் செய்தியைத்தான் சொல்லி விட்டாள்.

காயப்பட்டதிலிருந்து அவள் மூச்சு வாழ்ந்த ஒரு சில மணி நேரத்திற்குள் அவள் திரும்பத் திரும்ப உச்சரித்த வார்த்தைகள் இரண்டு, ஒன்று அவள் இதயம் முழுவதும் சுமக்கின்ற தலைவனை, மற்றது அவள் பார்க்கத் துடித்த ஆசைத் தம்பியை.

தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்

Tuesday, June 29, 2004

மேஜர் மாதவன்



நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான்.

மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.

பழகிய மனங்களில் இவன் ஒரு அழியாச்சுடர். அல்லது ஞாபகச்சிற்பம்.
தொண்ணுhறுகளின் முன்பாதிக்கால நாட்களில், மாதவன் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக நடுவப்பணியகத்தில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அங்கே வரும் கலைஞர்களுடன் பழகுவதிலும் அவர்களுடன் ஒரு போராளியாக உறவாடுவதிலும், கலைகளைப் பயில்வதிலும் முன்மாதிரியாக இருந்தான். எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பது மாதவனின் தனி அடையாளம். எதிலும் எப்போதும் ஓய்வோ, சோர்வோ இல்லாத வேக உழைப்பு இவனுடையது.

மாதவன் இறுக்கமானவன். அதேவேளையில் அமைதியானவன். இளகிய இதயமுடையவன். மாதவன் தன் போராட்டச் செயற்பாடுகளினூடு ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. 'தாயகக் கனவு' வீடியோப்படத்தில் தன் வாழ்வுடன் இணைந்த பாத்திரமாக போராளிப்பாத்திரமேற்று நடித்திருந்தான். தாயக விடுதலைப் பாடல்களில் 'கரும்புலிகள்' ஒலிநாடாவில் 'தலைகள் குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா' என்ற பாடல் அவனது முதற்பாடலாக அமைந்து, எல்லோர் வாயிலும் அது ஒலித்தது. பின்னர் 'முல்லைப்போர்' இசை நாடாவிலும் அவன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. 'தேசத்தின் புயல்கள்' பாகம்-1 இசை நாடாவில், தானே எழுதி போராளிக் கலைஞர்களுடன் பாடிய 'கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்' என்ற பாடல் எங்கும் எல்லோராலும் நன்கு பேசப்பட்டது. இப்படியாக வந்ததற்கும்; இருந்ததற்கும்; சென்றதற்கும் கணிசமான சுவடுகளை விடுதலைப் போராட்டத்தில் பதித்துவிட்டு களத்தில் அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி வெளியே குயிலெனப்பாடி, நதியென ஆடித்திரிந்த அந்த விடுதலைப் பறவையின் நினைவுடன் இந்த மண்ணும் அதன் வரலாறும் இருக்கும்.

காற்றில் எழுதிய பாடலாக, நம் நினைவின் பெரும் பெருக்காக, எங்கள் முற்றங்களில் பூக்கும் மலராக மாதவன் என்றும் கலந்திருப்பான்.

nantri-erimalai - 2001

Monday, June 28, 2004

மேஜர் ஆதித்தன்



ஆண்டு 1983, யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இருபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.
'என்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ' பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள். பருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி மேஜர் ஆதித்தன்.

சின்னவயதில் இருந்தே வயதுக்குமீறிய பொறுப்புக்களையும், அவனது அளவைவிட பெரிய அளவில் துன்பங்களையும், துயரங்களையும் தன் தோள்களில் தாங்கி வளர்ந்தவன்தான் கரும்புலி மேஜர் ஆதித்தன்.

இவனைப் பற்றிச் சொல்லும்பொழுது வார்த்தைகள்கூட ஈரமாகும். சின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து விட்டான். உடலில் வலுவற்ற நிலையிலும் பிள்ளைகளுக்காக இயந்திரமாய் எஸ்ரேட்டில் கூலி வேலை செய்கிறாள் தாய். தமையன் ஒருவன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். சின்னண்ணனும் இவனைப் போலவே பாடசாலைக்குச் செல்லும் சிறுவன். இந்த நிலையில் நோயின் பிடி இறுக்கியதால் படுக்கையில் விழுந்துவிடுகிறாள் தாய். தங்களைக் காத்த தாயைக் காக்க இந்தச் சிறுவர்களால் என்ன செய்யமுடியும்? அண்ணனும் தம்பியும் சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். அண்ணன் எப்படியோ எங்கோ ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்துகொண்டான். இவனும் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். நாட்கள் கழிகின்றன.

தாயின் நினைவுடனும், நெஞ்சு நிறையக் கனத்த சுமையுடனும் பொழுதைக் கழிக்கும் சுதாகரனுக்கு (ஆதித்தனுக்கு) அன்று ஒரு புதிய திருப்புமுனையான நாள். வேலை முடிந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டு வானொலி ஒன்று தனது செய்திகளுக்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது செவ்வி ஒன்றை ஒலிபரப்புகிறது. தனது புலன்கள் யாவற்றையும் அந்தக் குரலை நோக்கித் திருப்பிய சுதாகரனுக்கு, அந்தத் தலைவனின் ஒவ வொரு சொல்லும் புதிய தெண்பாய், நம்பிக்கையின் ஒளியாய் அவனுள் சுடர்விடத் தொடங்குகின்றது.

'தமிழருக்கான போராட்டம்', அவர்களுக்கான தலைவன் எதையுமே இதுவரை அறிந்திராத அவன், இப்போது அந்தத் தலைவன் மீதும் அவரது கொள்கை மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு தாயிடம் செல்கின்றான். தான் யாழ்ப்பாணம் செல்வதாகக் கூறி அனுமதி பெற்றுச்சென்று தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக்கொள்கின்றான்.

பயிற்சி முடித்தவன் சண்டைக் களங்களில் தன் திறமையைக் காட்டினான். ஜெயசிக்குறுவில் ஓர் நாள் எதிரியின் இறுக்கமான முற்றுகைக்குள் சிக்கியபோதும் தன் அணியினை திறமையாக வழிநடத்தி முற்றுகையை உடைத்து வெளிவந்தான் ஆதித்தன்.

எனினும் தேசத்துக்காக செய்யவேண்டிய உயரிய பங்களிப்புப் பற்றியே அவனது மனம் தினமும் அங்கலாய்த்தது. தான் கரும்புலியாய் போக எண்ணித் தனது விருப்பத்தை தலைவருக்கு கடிதமாய் அனுப்பினான்.

சில காலத்தின் பின் கடிதமொன்று வந்தது தாயிடமிருந்து. 'மகனே எங்களை ஒருக்கா வந்து பாத்திட்டுப்போ' அட்டை கடித்து இரத்தம் கசியும் காலுடன், மறுநாளும் வேலைக்குப் போகும் அந்தத் தாய் கூறுவாள். 'மகனே நான் கஸ்ரப்படுகிறது உங்களுக்காகத்தான், நீங்க நல்லா இருக்கோணும், எனக்கு அது போதும்' அதே தாய் அழைக்கிறாள் தன் கடைக்குட்டியை ஒருதடவை பார்ப்பதற்கு,

அன்று மாலையே, அவன் நேசித்த விசுவாசித்த தலைவனிடம் இருந்து பதில்க் கடிதம் வருகிறது, கரும்புலி அணியில் ஆதித்தனை இணைத்துக்கொள்வதாக. நீண்ட சிந்தனையின்பின் கரும்புலிப் பணிக்கு தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்து, அதற்கான பயிற்சிக்குச் செல்கிறான். பயிற்சி முடிந்தபின் இவனது இலக்கு மணலாற்றில். பயிற்சி எடுக்கப்பட்டது. ஆனால், திட்டம் கைவிடப்பட்டது. பின் யாழில் ஓர் இலக்கு, இலக்குத்தேடி இருளில் சென்றவனை இராணுவ வீரன் கட்டிப்பிடிக்க நொடிப்பொழுதில் அவனைத் தாக்கிவிட்டு மீண்டுவந்தான் ஆதித்தன். அதுவே ஒரு வீரக்கதை. பின்னர் அவனுக்கு இறுதி இலக்கொன்று கிடைக்கிறது. சென்றான் சென்றார்கள் திரும்பி வரவேயில்லை. செய்திமட்டும் வந்தது.
அவன் கையளித்து விடைபெறுகின்ற இறுதிநேரம் சொன்னான். 'மச்சான், அண்ணை எங்களைப் போகச்சொல்லி விடைகொடுத்தநேரம். அண்ணையின்ர முகம் வாடிப்போய் இருந்திச்சு, அதை நினைக்க மனசுக்கு கஸ்ரமாக இருக்கு. அண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். அதைப் பார்த்து அண்ணை சிரிக்கேக்கதான் என்ர மனமும் ஆறுதலடையும்.' என்று

nantri-erimalai-2001

Thursday, February 19, 2004

மேஜர் மாறன்

சின்னத்துரை சுகுமாரன் - வவுனிக்குளம்
23.6.1960 - 26.6.1989


பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.

சிறுவயதிலேயே ஒழுக்கமும், இரக்க சுபாவமுடைய இவன். ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரிலேயே முடித்துக் கொண்டு உயர் வகுப்புப் பயில மத்தியமகாவித்தியாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அப்பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்கும் பொழுது மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்த மாறன் சக மாணவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொண்டான்.

தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி நயவஞ்சகமாக தமிழின விரோதச்சட்டங்களைப் பிரகடனப்படுத்தி ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுகள் இறங்கியிருந்த அக்காலகட்டத்தில், தனது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த மாறன் பல வழிமுறைகளைக் கைக்கொண்டான். கலை நிகழ்ச்சிகளிற்கூடாகவும், கட்டுரை வடிவங்களிலும், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணினான். அத்துடன் சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைக்குட்பட்ட நிலையிலும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கிக் கொண்டிருந்த சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கினான்.

சிங்கள இனவாதப் பிடியிலிருந்தும், பிற்போக்குத் தமிழ் தலைமைகளிலிருந்தும் தமிழீழ சமூகம் விடுவிக்கப்பட்டு ஒரு புரட்சிகரத் தலைமையினால் வழிநடத்தப்படும்போதுதான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சமூகஒடுக்குமுறைகளையும் களைந்தெறிய முடியும் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையை எடுத்துக்கூறிய மாறன் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் தன்னையும் இணைத்துக் கொண்டான்.

கிளிநொச்சி மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தபோது மக்கள் மீது அவன் வைத்திருந்த நேசமும், அக்கறையும் அவனை ஒரு சிறந்த போராளியாக மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களே மாறனின் கவனத்தை விசேடமாக ஈர்த்தன. அம்மக்களின் நல்வாழ்விற்காக மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்கள வெறியர்களின் காடைத்தனங்களால் தமது சொந்தக் கிராமங்களைவிட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட தமிழ் மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்களுக்கு சரியான முறையில் மாறன் செயல் வடிவம் கொடுத்தான். மேலும் மக்களுக்கிடையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை சரியான கோணத்திலிருந்து அணுகி அதனைத் தீர்த்து வைக்க மாறன் கையாளும் அணுகுமுறைகள் மக்கள் மத்தியிலிருந்த அவனது மதிப்பை மேலும் உயர்த்தியது. எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றைத் தீர்த்துவைக்க முற்படுகின்ற பொழுது அப்பிரச்சினைகளின் தோற்றம், அதற்கான காரணங்கள், அக்காரணிகளைத் தோற்றுவிக்கும் சமூகப்பின்னணிஎன்பனவற்றை ஆராய்ந்த பின்பே தீர்ப்புக்களை வழங்குவான்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்கெனப் புறப்பட்டு பிழையான தலைமைகளால் வழி நடாத்தப்பட்டு, திசை மாறி சமூகவிரோத சக்திகளாகிய சில அமைப்புக்களால் மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிய வேளையில், அவதானத்துடன் அதேவேளையில் தீர்க்கமுடன் மக்களை அச்சக்திகளிடம் இருந்து காத்தான்.
அமைதிப்படை என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்த வந்த இந்திய அரசின் வஞ்சக நோக்கத்தை எமது மக்களிற்கும், உலகத்திற்கும் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கப் பாடுபட்டான்.
இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்த காலகட்டத்தில் எமது கருத்துக்களையும், உண்மைச் செய்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமது இயக்கத்தால் வெளியிடப்படும் 'உணர்வு', 'சுதந்திரப்பறவைகள்' ஆகிய பத்திரிகைகளின் உருவாக்கத்திற்கும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுடைய பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவதுடன் அவைகளுக்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளான். வவுனியா, கிளிநொச்சி, முல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்தில் பெண்களுக்கிடையில் அரசியல்ரீதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணி எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குகொள்ள வைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான்.

இவ்வாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சரியான முறையில் செயற்படுத்திய வேலைத்திறனும், மக்கள் மீது குறிப்பாக சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் மீது மாறன் காட்டிய நேசமும் அவனை வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளனாக உயர்த்தியது.

26.06.1989 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பன்றிக்கெய்த குளம் என்னும் இடத்தில் வன்னிப்பிராந்திய அரசியற் பொறுப்பாளர் மேஜர் மாறன் உட்பட லெப். நித்திலா(மகளிர் படைப்பிரிவு), லெப். அருள், சுதன், மகேந்தி, சபா, பொபி, அகிலன், கேசவன், அச்சுதன், நவம், விஜயன், முரளி, ரூபன் ஆகிய 14 விடுதலைப் புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

Wednesday, October 29, 2003

மேஜர் வெற்றியரசன்

ஆனந் செல்லையா - மன்னார் பேசாலை

மன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா தம்பதிகளின் மூன்றாவது செல்வப் புதல்வனாக பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந் என்று பெயரிட்டனர். இவன் தனது ஆரம்பக் கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது இராணுவ அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10. 08. 1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான். இவன் ஆரம்ப இராணுவ பயிற்சியை கெனடி-1 இராணுவப் பயிற்சிப் பாசறையில் பெற்றான். பயிற்சி முடிந்து இவர்களின் அணி, சூரியக்கதிர் எதிர் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.

அங்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்து முடித்த பின்னர் ஓயாத அலைகள்-1 சமரிற்கு இவர்களது அணி அனுப்பப்பட்டது. அதில் இவனும் ஒருவனாக நின்று சமராடினான். இவன் முகத்தின் மென்மையான சிரிப்பு யாரையும் சிரித்து மயக்கி விடுவான். இப்படியாக இவனின் வாழ்வும் போய்க்கொண்டிருந்த போது, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் உருவாக்கம் பெற்ற விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியில் தானும் இணைய வேண்டும் என்று பொறுப்பாளரிடம் கேட்டான். இவனது விருப்பிற்கு அமைய இவனை அப்பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் பொறுப்பாளர். இவனது திறமைக்கு அமைய விசேட ஆயுதம் ஒன்றிற்கான பயிற்சியைப் பெற்றான். அவ்வாயுதத்துடன் சென்று பல களங்கள் கண்டவன். மீண்டும் பொறுப்பாளரிடம் கேட்டு ஆர். பி. எம் உடன் சண்டைக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றான். பின் ஆயுதத்தை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றான். பின் அவ்வாயுதத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்று ஓயாத அலைகள்-2 சமர்க்களத்தில் திறம்படச் செயற்பட்ட இவனுக்கு தேசியத் தலைவர் பரிசினை வழங்கினார். பின் இவன் ஒரு அணிப் பொறுப்பாளனாக விடப்பட்டான்.

இவன் வீட்டில் சகோதரர்களை எப்படி அரவணைப்பானோ அவ்வாறு தான் தனது போராளிகளையும் அரவணைப்பான். எந் நேரமும் சண்டைக்குப் போக வேண்டும் என்ற துடிதுடிப்போடுதான் செயற்பட்டுக் கொண்டிருப்பான். இவன் விளையாட்டிலும் சிறப்பாகச் செயற்படுவான். பம்பல் அடிப்பதில் இவனிற்கு நிகர் யாரும் இல்லை. இவன் ஊராக்கள் யாரையும் கண்டால் ~ஊரான்| என்று சொல்லி கட்டிப்பிடித்து முத்தமிடுவான்.

இவ்வாறு இருக்கும் போது இவன் காதில் ~மச்சான் நீ சண்டைக்குப் போகப் போகிறாய்| என்ற செய்தி விழுகிறது. இவன் முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் ~உண்மையோடா மச்சான்| என்ற வண்ணம் இருக்க, இவனது பொறுப்பாளர் அழைத்து ~வெற்றி நாளைக்கு வெளிக்கிட வேணும். hPமை ஒழுங்குபடுத்து. ஓம் அண்ணை ஒழுங்குபடுத்திறன்| என்ற வண்ணம் போராளிகளைக் கூப்பிட்டுக் கதைத்தான். பின் இவனது அணியுடன் சமரிற்குப் புறப்பட்டான். வரலாற்றுப்புகழ் மிக்க இத்தாவில் சமரில் முதன் முதலாக இராணுவ ரக் ஒன்றைத் தகர்த்தான். பின்னர் அணிகளை ஒழுங்குபடுத்தி இளங்கீரன் அண்ணையிடம் தெரியப்படுத்தினான். பின் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுத்த வண்ணம் திறமையாகச் செயற்பட்டான். அம் மண் மீட்கப்பட்டது. இவனை நெடுங்கேணி மண் அழைத்தது. அங்கு எல்லையில் ஊடுருவி பதுங்கித் தாக்குதல் நடத்த வந்த இராணுவத்தை எதிர்த்து சமர் செய்யும் போது மார்பில் காயமடைந்தான். காயடைந்த பின்னரும் கூட சளைக்காது சமராடினான். பின் மருத்துவமனைக்கு சென்று மறுநாள் இவன் தமிழீழ மண்ணிற்காய் தான் நேசித்த மக்களிற்காய்வீரச்சாவை அணைத்துக் கொள்கிறான்.

உன் பணி தொடரும் எங்கள் பாதச் சுவடுகள். இனி நீ நிம்மதியாய் உறங்கு.

பிரதியாக்கம்: போராளி பகலவன்

Monday, October 06, 2003

மேஜர் நாயகன்

பேரம்பலம் யோகேஸ்வரன்.

இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புப் அனுப்பப்பட்டான். சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன.

நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிடமுடியாதவை, எவ வளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் இராணுவ மினிமுகாம் தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கமராவை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான். நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுதுவிட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகனும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல்மூலம் காட்டிச் சென்றான். எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

Sunday, September 14, 2003

மேஜர் தங்கவேல்

ராஜேந்திரம் - முருங்கன்

1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர்.

இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்தது. இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் 'மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்" என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்னு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான்.

இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு இவன் நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த்தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் பொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான்.

அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார். இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் இராணுவத்திற்கு தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார். இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளைக்கண்டு பொறுப்பாளர்களின் பாலாட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேல் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் கான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம்தான் ப10நகரி தவளைத்தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான்..

பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரன்களுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின்; மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத்தளபதி அனுமதிக்கின்றார்.

அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. இத் தாக்குதலில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்ப10ண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான்.

இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத சோகம் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. 'கலோ தங்கேஸ்" தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். 'அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்" என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறையடித்தவாறு எதிரிமீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்;ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் நேசித்த காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான்.

தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான்.

எழுதியவர். போராளி சு.கீரன்.

மேஜர் நேரியன்

ஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்;தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் சிதுளிகள் இங்கே.........

நேரியன்..... இவன் உள்ளத்தில் உற்றேடுக்கும் நேர்மை இவன் பெயரினுள்ளும் பொதிந்து இருந்தது, தருணை இவள் கண்களில் குடி கொண்டிருந்தது. தெளிவான பார்வை ஆழமான கருத்துமிக்க வார்த்தைகள், கண்டோரை எளிதில் கவரும் இவன் இதழ் சிந்தும் காந்தப் புன்னகை, பணிவைத் தன்னில் சுமந்திருக்கும் அழகிய வதனம் பெருமையில்லாத உள்ளம். ஆணுக்கு ஏற்ற அளவான உயரம். உயரத்திற்கேற்ற ஆரோக்கியமான உடல்வாகு. இவை எல்லாம் இணைந்து இவனை அலங்கரித்தன.

1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாத நடுப்பகுதியில் தன்னை முழுமையாகக் கரிகாலன் சேனையில் இணைத்துக் கொணடான். தனது ஆரம்பப் பயிற்சியினை வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமான சரத்பாபு 7 இல் பெற்றுக் கொண்டான். பயிற்சி முகாமில் தனது உடல் வலு, உள வலு என்பவற்றைப் பெருக்கிக் கொண்டான். பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சமர் எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் கல்விக்கும் உண்டு என்ற தலைவரின் கணிப்புக்கு இணங்க அரசியல் கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டான்.

அரசியல் கற்கை நெறி ஆரம்பிக்கையில் தலைவரின் கருத்துரையை உன்னிப்பாக அவதானித்த இவன் அக்கற்கை நெறியின் அவசியத்தையுணர்ந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினான். கற்கை நெறி ஆரம்பிக்கும் அன்றுதான் இவன் முதல் முதல் தலைவர் அவர்களை நேரே தன் விழிகளால் சந்தித்துக் கொண்டான். ஈதலால் அந்த நாளை தன் வாழ்வுக் காலத்தில் என்றும் கரைந்து போகாத நினைவாக தன் நெஞ்சமதில் பதித்து வைத்தான்.

போரளிகளின் வாழ்வு என்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல, கல்வியறிவும், களப் பயிறிசியறிவும் மாறி மாறி ஊட்டப்பட்டது. இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு கரைந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் பேய்கள் 'முன்னேறிப் பாய்தல்" என்ற நடவடிக்கை மூலம் வலிகாமப் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்தது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் ஏதிலிகளாக்கப்ட்டு இவன் இருந்த முகாம் வீதியேங்கும் வீசியெறியப்பட்டார்கள். இதனை அவதானித்த இவன் மனம் குமுறியது. களம் செல்லத் துடித்தான். இந்த வேளையில் தலைவரின் திட்டத்திற்கமைய முன்னேறிய பகைவன் மீது பாய புலிகள் தயாராகினார்கள். இவனும் அணியோன்றில் இணைக்கப்ட்டான். எனினும் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட இலகுவில் வெற்றி கொள்ளப்ட்டதால் அவனது அணி சண்டைக்கு செல்லவில்லை.

இவ்வாறு இவனது கள வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த போது 60 எம்.எம் மோட்டார் பயிற்சி பெறுவதற்காக அனுப்பட்பட்டான். இவன் எதையும் கற்றுக் கொள்வதில் கற்ப10ரம் என்பதால் குறுகியகால பயிற்சியுடன் மோட்டாரை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக வெளியேறினான். வெளியேறிய இவன் தனது மோட்டாருடன் முதலாவது களத்தில் எதிரியைச் சந்திக்கிறான். அந்தக் களம் திருவடி நிலைப் பக்கமாக இருந்து முன்னேறிய எதிரி மீதான தாக்குதல். அத்தான்குதலின் போது இவனது வோக்கி டோக்கி செயலிழந்து விட்டது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எறிகணை ஏவ வேண்டும். உடனே தனது அறிவு அனுபவத்தைப் பயன்படுத்தி டாங்கியில் சத்தம் வரும் நிலை நோக்கி மோட்டரை ஏவினான். ஏவிய எறிகணைகள் எதிரியின் டாங்கி மீதும் அதனைச் சூழ உள்ள பிரதேசத்துள் மீதும் வீழ்ந்து வெடித்தன. இக்களத்தில் இவனது மோட்டாரை இயக்கும் ஆற்றல் வெளிப்பட்டது.

மறுநாள் இவன் சூரியகதிர் இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள களம் விரைந்தான்;. அங்கு முன்னேறிய பகைவன் மீது நேர்த்தியான சூடுகளை வழங்கி எதிரியின் பக்கம் பலத்த இழப்பு ஏற்பட வழிவகுத்தான். 'சூரியக் கதிர்" இராணுவ நடவடிக்கை கோப்பாய் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்த போது இவன் அக்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டான். அங்கு தனது கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் ப10தம் ஆனையிறவில் இருந்து கிளிநோச்சி நோக்கி தனது ஆக்கிரமிப்பு கரத்தை நீட்டின. சத்ஜெய 1. 2 என ஆக்கிரமிப்பு முயற்சிகள் தோல்வியைத் தழுவ சத்ஜெய 3 எனத் தொடர்ந்தது. சத்ஜெய 3 இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள இவன் 120 எம். எம் மோட்டார் அணியில் ஒருவனாக நின்று செயற்பட்டான். பின்பு ஆனையிறவு பரந்தன் மீதான ஊடுருவல் தாக்குதலின் போது 1200 எம்.எம் மோடார் ஒன்றுக்கு தலைமை தாங்கி சென்று நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணிகளுக்கு பலம் சேர்த்தான்.

மே 13.. 2997 இல் மிகப்பெரும் பகைவெள்ளம் தாண்டிக்குளம் ஊடாகவும், நெடுங்கேணியுடாகவும் நகர்ந்தது. இதனை எதிர்கொள்;ள இவன் 120 எம் எம் பீரங்கியோன்றுக்கு தலைலை தாங்கிச் சென்று முன்னேறும் பகைவன் மீதும் தாண்டிக்குளம் மீதான ஊடுருவல் தாக்குதல், பெரியமடு மீதான ஊடுருவல் தாக்குதல் போன்றவற்றில் தனது பீரங்கி மூலம் நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தான் சிறிது காலம் சிங்களப் படைக்கு பெரும் சவாலவகக புளியங்குளத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமினுள் இருந்து 82 எம் எம் ரக மோட்டார் மூலம் முன்னேறும் பகைவனுக்குச் சவாலாக அமைந்தான்.60 எம் எம் , 81 எம் எம் 82 எம் எம் 120 எம் எம் போன்ற பீரங்கிகளை இயக்குவதிலும் வரைபடத்தைக் கையாளுவதிலும் சிறந்து விளங்கிய இவன் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவனானான்

சமர்க்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்ட இவன் தன் அரசியல் கற்கை நெறியினைத் தொடர்ந்தான் அக்கற்கை நெறியினைக்கற்கும் போராளிகளில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவன். அத்துடன் இவனது கல்லுரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகள் அனைத்திலும் இவனது பிரசன்னம் இருக்கும் இவன் மேடையேறினால் மேடையே மலர்ந்து சிரிக்கும். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்து சபையோரை வியக்க வைப்பான். மேலும் சிறந்தவொரு பேச்சாளனாகவும் விளங்கினான். எந்தவொரு விடயத்தையும் அனுகி ஆராய்ந்து சிறந்ததொரு பேச்சை முன்வைப்பான். அத்துடன் துப்பாக்கி மூலம் குறிபார்த்து சுடும் கலையிலும் இவன் வல்லவன்தான்.

இவன் ஆற்றல் ஆளுமை கண்ட பொறுப்பாளரால் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் ஆக நியமிக்கப்ட்டான். போராளிகளின் உணர்வலைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவனுக்கு இருந்ததால் சிறந்த முறையில் தன் நிர்வாகத்தை நகர்;த்திச் சென்றான். அதன் மூலம் போராளிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றான்.

இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளை தலைவர் அவர்களின் சிந்தனையில் சிரு~;டிக்கப்பட்ட திட்டமொன்றிறிகாக தேர்வு செய்யப் பட்டான். அப்பணி மிகவும் கடினமானது. அபபணி தொலைது}ரத்தில் இவனுக்காக காத்திருந்தது. ஆதலால் தொலைது}ரம் செல்ல ஆயித்தமானான். செல்லுமுன் தலைவர் அவர்களைச் சந்தித்து அத்திட்டம் பற்றி அறிவினைப் பெற்று தன் பணிக்கு சென்றான். அங்கு தனது பணியை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி தலைவரின் பாராட்டைப் பெற்றான். இவ்வாறு தன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அன்புத் தலைவரின் அழைப்பை ஏற்று மீதினில் ஏறி வர ஆயத்தமானான்

அந்த வேளை அந்தக் கடற்கரையின் நீருக்குள் பாதம் பதித்து தனக்கெனக் காத்திருக்கும் விசைப் படகு நோக்கி நகர்கின்றான் நெரியன். அந்த விசைப் படகை அடைந்து அதற்குள் ஏறிக் கொள்கிறான். அதற்குள் ஏறிக் கொண்டவன் தன்; மனதுக்குள் பல கனவுகள் ஏற்றிக் கொண்டான். அன்புத் தலைவரின் தரிசனம் , அன்னை மண்ணின் தரிசனம் அன்புத் தோiர்களின் தரிசனம் அன்பு மக்களின் தரிசனம், என்று அவனின் எண்ண அலைகள்; ஆர்ப்பரிதது எழுந்து கொண்nருந்தவேளை விசைப்படகின் இயந்திரம் தன் இதயத்துடிப்பை இயக்கியது. பயணம் அலைகடலினு}டே நீண்டதொரு பயணம் ஆழ்கடலை இவனது படகு அண்மித்துக் கொண்டிருந்த வேளை கருமுகில் கூட்டங்கள் விண்மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வான் தாய் தன் கண்ணீர்க் கடலின் கட்டுழடத்துவிட்டாள். இடிமின்னல் இடையிடையே தம் கண்களைத் திறந்து மூடின. கடல்த் தாயும் இயற்கையன்னையின் சிற்றத்தால் குழம்பிப் போனாள். அதனால் பேரலைகள் எழுந்தன. பயணம் தொடர்ந்தார்கள். யார் அறிவார்கள். அந்தக் கொடியோரின் குண்டுகள் இவர்களின் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றது என்று. கச்சதீவு கடல் மீது பேரினவாதப் பேய்களின் முன்று டோராக்கள் நேர் எதிரே தம் உயிர் பறிக்கும் கருவிகளின் குழாய்களை நீட்டி விட்டு இருந்தன. எதிர் பாராத பெரும் சமர் மூண்டது. பகைவனின் மூன்று படகுகளும் இவனது படகைச் சூழ்ந்து கொண்டன. இவகளிடம் ஆழ் ஆயுத பலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. எனினும் பிரபாகரனின் பிள்ளைகள் இவர்கள் இவர்களிடம் மனோபலம் மலையாக இருந்தது. அந்த வேளையில் எதிரியின் படகில் இருந்து பாய்ந்து வந்த குண்டொன்று இவன் மார்பைத் துளையிடுகின்றது. இவன் கடல் மீது தன் இதழ்களைப் பதிர்ந்து முத்தம் ஒன்றை அளித்துவிட்டு மாவீரர் என்ற மகுடம் தன்னை சூடிக் கொள்கிறான். இவனின் வித்துடலை கடலன்னை தன்னோடு அணைத்துக் கொள்கிறாள் இவன் கரம் சுமந்த துப்பாக்கி இளைய புலிவீரன் கரம்மீதிலிருந்து எதிரியின் திசை நோக்கி அனல் கக்குகிறது.. இவன் நினைவுகளைச் சுமந்து கரிகாலன் படை, பகைகுகையினுள்ளே பாய்கின்றது. தமிழீழம் என்ற பூவிங்கே மலரும் மட்டும் இப் பாய்ச்சல் ஓயாது.

Sunday, September 07, 2003

மேஜர் கேடில்ஸ்

மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை
வீரஜனனம: 14-05-1966 - வீரமரணம் 14-02-1987

போராட்டத்தின் நிழலில்
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கண்டாவளையில் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்@ர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

மூலம் - எரிமலை