கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை/நைற்றிங்கேள்
(சத்தியவாணி துரைராசா) பூநகரி, மன்னார்.
22.02.1998 பருத்தித்துறைக் கடற்பகுதியில் பபதா
தரையிறங்கு கலம் மீதான தாக்குதல்.
நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.
கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறண் எல்.எம்.ஜியும் ஒரு ஆர்.பி.ஜியும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலும் பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை. நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.
1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.
என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப் படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.
விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ஆகாய கடல் வெளிச்சமர் பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த ராங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப் பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா)
வரும். எங்கு ராங்க் இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.
களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப் பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.
“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”
கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”
“இருபத்திமூண்டு”
அதிர்ச்சி தரும் பதில்.
“எங்கெங்கே அடிச்சீங்கள்?”
“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”
நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,
“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”
என்றார்.
இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.
-மலைமகள் -
படம் : அருச்சுனா
Quelle - விடுதலைப்புலிகள்-ஆனி, ஆடி 2006