Wednesday, October 03, 2007
லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்
இம்ரான்-பாண்டியன்
யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி
பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்)
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988
(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)
இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.
எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.
சுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.
கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.
தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.
அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.
அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.
கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான "இம்ரான்-பாண்டியன்" பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.
இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.