Wednesday, July 26, 2006

கடற்கரும்புலி மேஜர் நித்தியா

கடற்கரும்புலி மேஜர் நித்தியா
(செல்வராசா தயாளினி )யாழ்ப்பாணம்
16.09.2001 பருத்தித்துறைக் கடற்பரப்பில் கப்பல்
தொடரணி மீதான கரும்புலித் தாக்குதல்.


சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல், களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பயிற்சி செய்வார். களம் செல்வார்.
காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார்.
மறுபடி பயிற்சி, சண்டை, காயம்,......., ......., என்று ஒரு தொடர் சங்கிலி.

அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல், அன்பான அணி முதல்வியாகவே தனது முதற் களமான 1992ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காப்பரண்கள் மீதான தாக்குதலில் தொடங்கி, 1997இல் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை வரை எம்மோடிருந்தார். பயிற்சி செய்தால், தூரம் நடந்தால் கால் வீங்கும் என்று தெரிந்து கொண்டே சளைக்காமல் எல்லாவற்றிலும் ஈடுபட்ட நித்தியாவினுள் கரும்புலிக் கனவு மொட்டவிழ்ந்து வாசம் வீசியபோது, எங்களுக்குத் தெரிந்துவிட, “என்ன நித்தியா, கரும்புலிப் பயிற்சி செய்யிற நிலைமையிலா நீ இருக்கிறாய்” என்ற நண்பிகளின் அக்கறையான கேள்விக்கும் சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டு, அவர் போய்விட்டார்.

-மலைமகள் -

படம் : அருச்சுனா
Quelle - விடுதலைப்புலிகள்-ஆனி, ஆடி 2006