Showing posts with label மொறிஸ். Show all posts
Showing posts with label மொறிஸ். Show all posts

Monday, March 31, 2025

கேணல் சாள்ஸ்

கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன்


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேணல் சாள்சின் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.

யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.

சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.

இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.

உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.

2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.

தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.

சாள்ஸ் தாக்குதலிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் விற்பனர் அல்ல. எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.

இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.

- கேணல் சூசை

நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்

கப்டன் மொறிஸ் (M. O) பரதராஜன் தியாகராஜா (பரதன் )
லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகநேசன்)
வீரவேங்கை சிறீ (வடிவேலு சிறீதரன்)

ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள் காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும் பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள் தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள் பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும் திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு (பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர் பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம் வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள் மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.

அந்த மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர போராளிகள் அழைத்து வருவார்கள்.

அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில் ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.

அவனது தலையைத் தடவி “எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டேன். “ஒன்பதாவது” என்றான்.  “பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்” என்றான் .

காவியங்கள் மனதில் வந்தன. அவன் பரதன் தான்… “தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும்.  நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .

அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். “சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள் செய்யுங்கள்” என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில் லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின் தம்பி, அவரின் நிர்வாகத்தில்  வைத்து இருந்தோம். “அந்தக் கடையில் பகுதி நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ” என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்) சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான். தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும், தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும் உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும் குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின் செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ் ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து “அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு கடையை சிறப்பாகச் செய்யலாம்” என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.

சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது. தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும். பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் “காவலுக்கு தானும் செல்லவேண்டும்”(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம் கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.

கடையில் அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் “இனி உனக்கு கடை சரிவராது” என்று. “எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால் இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.  “வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது” என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன்.  “சதா அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ” என்று கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .

“இது ஒரு பயிற்சி உனக்கு. இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை சொன்னார். அதைச் செய்” என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம் ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம் இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. “நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை” என்று கடையின் பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும் அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச் சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். “சரி கடையை நடத்து” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

பின் அண்ணனின் நேரடிப் பார்வையில் ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில் மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின் பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.

மொரிஸ் சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின் அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.

இந்தத் தருணத்தில்
கப்டன் மொரிஸ்
மேஜர் கேசரி
லேப்டிநெட் சங்கர்
மேஜர் மலரவன் வேலன்
லேப்டிநெட் சிறி
கப்டன் நாதன்
லேப்டிநெட் இன்பன்
லெப்டினென்ட் காந்தன்
லேப்டிநெட் ரமணன்
லேப்டிநெட் முரளி
லேபதினெட் வெள்ளை
கப்டன் ரஞ்சன் சித்தப்பா

என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.

ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!

– சதாவின் நாட்குறிப்பு

Saturday, May 01, 2004

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ்

கப்டன் மொறிஸ் (M. O)
பரதராஜன் தியாகராஜா (பரதன் )
12.09.1969 - 01.05.1989
நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!

என்றான். அவன் தான் மொறிஸ்.

1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.

நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.

சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.

பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு. ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக் கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள்.

1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.
தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு
தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது ஆக்கிரமிப்புப் படை.
மொறிஸோ இந்தியன் ஆமியின் கண்ணெதிரில் அகபபட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான்.

ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகபபடாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகபடுபவன் அல்ல. ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைச்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான். அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர்.

உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர். இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.

இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.

வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ். நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான்.

ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கமுன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.

அன்று----1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை.
------------------------------------------------------------------------------------------------------------------
மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.
சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்:.அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.

500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.

சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.

தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன்
நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே "நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா" என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர். மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.

மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.
துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ். பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.

மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது.
மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!

மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான்.மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று-
பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.


Quelle - June 1993 Erimalai