Showing posts with label வீரவேங்கை. Show all posts
Showing posts with label வீரவேங்கை. Show all posts

Wednesday, March 21, 2007

வீரவேங்கை.ஆனந்

வீரவேங்கை.ஆனந்
(இராமநாதன் அருள்நாதன்-மயிலிட்டி)
வீரப்பிறப்பு 25-01-1964 வீரமரணம் 15-07-1983


தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன், உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.

நெஞ்சில் வழியும் இரத்தத்தோடு, 'என்னைச் சுடடா, சுடு' என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப், பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப் பார்க்கின்றான் ஆனந்த். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிங்களக் கூலிப்படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் ஆனந்தையும் வீழ்த்துகின்றன.

சீலனோ அந்தக் கெரில்லாப் படைத் தலைவர், அரசபடையால் வலைவீசித் தேடப் படுபவன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் சம்வபவத்தில், சீலனின் தலைமையிலே அந்தக் கெரில்லாத் தாக்குதல் நடைபெற்றது. என்பதைச் சிங்களக் கூலிப்படைகள் தெரிந்து வைத்திருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த அங்கத்தவன் - சிங்களக் கூலிகளின் கரங்களில் அந்தக் காளை பிடிபடவே முடியாது.

சீலனுக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனப்பாக்குவம் சிந்திப்பதற்கு அனுபவம் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால், இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பியிற்சி பெற்று ஏழுமாதங்கள் கூட நிரம்பாத நிலையில், இயக்க ரகசியத்தைக் காத்துக் கொள்வதற்குத் தன்னையும் சுட்டுவிடுமாறு சக வீரனைப் பணித்த ஆனந்தின் இலட்சியத் தூய்மை, நம்மைச் சிலிர்ப்படையச் செய்கிறது.

விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுதப் பாதையில் நம்பிக்கையோடும் உறுதியோடும் கால் பதித்த அந்த இளைஞன், எத்தனையோ யுத்த களங்களைக் காண ஆசைப் படிருப்பான். ஆனால் அந்தச் சாதனைகளை எல்லாம் செயலில் காட்ட அந்த வீரமகனின் சின்ன ஆயுள் இடம் கொடுக்க வில்லை. பத்தொன்பது வயதிற்குள்ளேயே ஆனந்த் சாவை அணைத்துக் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டமே.

ஆனந்திற்கு வயதை மீறிய வாட்ட சாட்டமான உடம்பு. அரும்பு மீசை, மேவித்தான் தலையிழப்பான். அடித் தொண்டையில்தான் கதைப்பான். யாரோடும் கோபிக்க மாட்டான். நண்பர்களோடு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவன். எந்த வேலையையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செய்பவன். சமையல் செய்வதிலிருந்து, கிணறு வெட்டுவது வரை அலுப்பில்லாமல் எதையும் செய்ய முன்நிற்பான்.

மெல்லிய நீலநிறத்தில் ஆடைகள் அணிவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். மயிலிட்டி மண் ஈந்த வீரமைந்தன் ஆனந்த், நீர்கொழும்பில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றான். பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்றான். க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞானம் பயின்ற ஆனந்த் அரசியலைப் பின்னாளில் வாழ்க்கையாக வரித்துக் கொண்டான்.

பாடசாலைக் காலங்களில் ஆனந்த் சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தான். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் சிறந்த கோல் காப்பாளராகப் பிரபல்யம் பெற்றிருக்கிறான். சிறந்த கிரிக்கெட் வீரனுமாவான். கராத்தேயும் கற்றிருந்தான். சகலவிதமான வாகனங்களையும் நேர்த்தியாகச் செலுத்தும் திறமை கொண்டவன்.

தனது குறுகிய ஆயுதப் பயிற்சிக் காலத்திலும் ஆயுதங்களின் நுட்பங்களை நிறையத் தெரிந்து வைத்திருந்தான். வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவனுக்குப் போதுமான இரசாயண அறிவிருந்தது. துப்பாக்கிப் பயிற்சியின் போது மிகக் குறைந்த நேரத்தில் கூடிய இலக்குகளை குறிபார்த்து அடிக்கக் கூடியவன்.

சரியாக இலக்குக் குறிவைத்து அடித்துவிட்டான் என்றால், ' ஹாய்' என்று கைகளை உயர்த்திக் குலுங்கிச் சிரிக்கும்போது, ஒரு பாடசாலை சிறுவனின் பெருமிதமே வெளிப்படும். (குறி தப்பாது சுடுகின்ற ஒரு கெரில்லா வீரனின் திறமையயை, James Bond சாகஸங்கள் என்று கொச்சையாக அர்த்தப் படுத்திக் கொண்டு நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை) பலம் மிகுந்த அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராகக் குறைந்த அளவு ஆயுதங்களுடன் தொடுக்கப்படுகின்ற கெரில்லாத் தாக்குதலின்போது, இத்தகைய திறமை வாய்ந்த கெரில்லா வீரர்கள் தனிமுக்கியம் வகிக்கின்றார்கள்.

அன்பழகன்

அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவி விட, எம்மிடம் அடி வேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின் வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர்.

20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம்.

எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது.

எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின. முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள் மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன்னேறிக்கொணடிருந்தன.

எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற் பட்டுச்சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை.

நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள் மீதான எதிர்ப்பை காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்து விட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும ஏறிவிட்டன.

எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாக வேண்டும். எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.

எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது., ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கி விடும். எதிரியின் ஜயசிக்குறு கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற்றவை ஆகிவிடும். இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப் படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பை கொடுத்தது.

எப்படி விட முடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகி விட்டன. அவற்றை எப்படி எதிரியிடம் விட முடியும். விடுவோமாயின் முடிவு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாததாகி விடுமென்பதை எஞ்சி நின்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப் பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன். எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான்.

தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.

காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்த போது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். அவன் தன் தேசத்திற்காகச் செய்ய வேண்டியதை உணர்ந்தே இருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான் என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.

அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல். தலைவனின் சத்தியத்திற்காகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிரவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.

எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ஜயசிக்குறு சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும். புலிகளின் „ ஓயாத அலைகள் “ சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.

போராளி சுயந்தன்

09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும.

அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குரியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது.

சண்டை தொடங்கி விட்டது. சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அவர்களுக்குரிய பாதை வழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை „ டோப்பிட்டோ “ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை அவர்களுக்குத் தெரிந்தது.

ஆம் எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளை விட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஓவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுளையா விட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக் கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூட போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க „ டோப்பிட்டோ “ வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக் கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச் சென்ற போராளி சுயந்தன் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவை பட்டு வீழ்ந்து விட்டான். எதிரி, அந்த இடத்தில் முட்கம்பிகளை வெட்டப் படாமல் இருப்பதையும் நாம் அதை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங் கொள்ள வைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்க முடியாமல் நிற்க, தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான்.

அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற் பட சுயந்தன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்க, அவன் அமைத்துத் தந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.

அவனது அணி, கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழ வேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக் கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழியமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்த அவனது வீரம்.

தலைவரவர்களின் „ எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது “ என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் „ ஜயசிக்குறுய் “ சமரில் வித்தாகிப் போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.

Monday, December 08, 2003

வீரவேங்கை பகீன்


அன்னலிங்கம் பகீரதன்
மண்டைதீவு
வீரமரணம்-18.05.1984


வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.

ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் கிடக்கு.. போய்ப் படடா" என்று அதட்டிவிட்டு அயர்கிறார் அந்தப் பொறுப்பாளர்.

ஆனால் 18.05.1984 அன்று புதிய சாதனை படைத்து மண்ணின் விடியலுக்கு மறைந்தார் வீரவேங்கை பகீன். எந்த சயனைட் மீது சந்தேகப்பட்டாரோ அந்த சயனைட் அருந்தி எதிரியிடம் பிடிபட்டு விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரிய இலட்சியத்திற்கு அமைய வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சயனைட் அருந்தி களப்பலியான முதல் வீரவேங்கையாக வரலாற்றில் பதிந்து கொண்டார்.

அன்னலிங்கம் பகீரதன் இது வீரவேங்கை பகீனின் சொந்தப்பெயர். மண்டைதீவைச் சேர்ந்தவர். குடும்பச் சூழல் காரணமாக ஜேர்மனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளவிலா பற்றும் விசுவாசமும் மிக்க பகீன் ஜேர்மனியில் வசித்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வேலை செய்தார்.

பின்னர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்தவாறும் தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழீழம் சிங்களக் காடையர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தாங்கிக் கொள்ள முடியாத இந்த வேங்கை பறந்து வந்தது தாயகம் நோக்கி. தாயகத்தில் தலைவனின் அணியில் இணைநது பணியாற்றியது.

1983-1984 காலகட்டம் தமிழீழ வரலாற்றில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் தமிழீழத் தேசமெங்கும் சிங்களத்தின் கொடும் படைகளும், காட்டிக் கொடுப்போரும் நிறைந்த காலகட்டம். யார் வல்லவர், நல்லவர், நயவஞ்சகர் என்பது பிரித்தறிய முடியாத காலம். ஒரு விடுதலைப் போராளி இனங்கண்டு தரமறிந்து தன் செய்கருமம் ஆற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. சுற்றும் சிறீலங்கா இராணுவ வல்லூறுகளுக்கு மத்தியில் தனது உந்துருளியில் சுழன்று பணியாற்றினார் பகீன்.

18.05.1984 அன்று அமைப்பின் அரசியல் பிரச்சார வேலைகளுக்காக வல்வெட்டித்துறையில் இவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை முற்றுகையிட்டது சிங்கள இராணுவம். நிராயுதபாணியாய் நின்ற நிலையிலும் நிலை கலங்காத இளவேங்கை வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து பாவனை செய்யத் தொடங்கினார். ஆனால் சிறீலங்கா இராணுவத்தால் இனங்காணப்பட்டு விட்டார். வெறிக்கூச்சலுடன் சூழந்து கொண்டனர் சிறீலங்காப் படைகள். தன்னைச் சித்திரவதை செய்து அமைப்பின் இரகசியங்களைக் கறந்து விடக் கூடாது, அதனால் விடுதலைக்குக் கேடாக தான் அமைந்து விடக்கூடாது என்ற கடுகதியில் சயனைட் அருந்தி ஈழத்தாயின் மடியை முதன் முதல் சயனைட் அருந்தி முத்தமிடுகிறார்.

"இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" என்று யாழ் மீட்ட வீரன் கேணல் கிட்டு ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். ஆம் எங்கள் பகீனும் இன்று விடியலின் துருவ நட்சத்திரங்களில் ஒன்றாய் அமைந்து பதினேழு வருடங்கள் கடந்து போயின. எனினும் பல ஆயிரம் பகீன்களின் பயணங்கள் இலட்சியத்தை நோக்கி நகருகின்றன.

Thursday, August 28, 2003

வீரவேங்கை நிதி

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.

அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.

புலிப்படை நிதி இறந்து விட்டான் என்றே கூறப்படுகிறது. அன்றைய நேரத்தில் மரண நிகழ்வு என்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில்தான் இருந்தது.இளம்வயது, வாழ வேண்டிய காலம். இப்படி மரணித்துப் போவதா? என்று மக்கள் கலக்கத்தோடு கண்கலங்கித் திரிகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தேவாலயத்துக்குப் போகும்போது ஒரு பையோடு சந்தியில் நிற்கும் நிதி.

அப்போது புலிப்படையைப் பார்க்க ஆவல். நாம் நேரத்திற்கு கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு சந்தியில் நிற்கும் புலிப்படையினரைத் தள்ளி நின்றே பார்ப்போம். சிலர் நெருங்கி நின்று கதைப்பார்கள். நாமும் மெதுவாகக் கிட்டச் சென்று நிற்போம்.

சில நாட்கள் போனபின் சந்தியில் சிரித்து நின்ற நிதியின் வீரமரணம் பற்றி போஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எங்கள் மனம் எதையோவெல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டே இருந்தது.

ஏன் இறந்தான் நிதி ? பிரபாகரனால் ஏன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ? மரணம் என்பது என்ன ? நாம் ஏன் வாழ்கின்றோம் ? எப்படியான நிலையில் தமிழினம் இருக்கிறது ? தமிழனுக்கு என்ன நடக்கிறது ? எமக்கு யார் விடுதலை பெற்றுத் தற்தவர்கள் ? விடுதலையில் நாம் வாழ்கின்றோமா ? சிறீலங்கா அரசின் கொடுமைபற்றி புரியாத நிலையில் கிடந்த மக்களுக்கு நிதியின் வீரமரணத்தின் பின்தான் தமிழனின் நிலை எப்படியுள்ளது என்று தெரியவந்தது. எமக்கும் அன்று தெரியவந்தது.

ஒரு புலி வீரமரணம் அடையும் போது மேலும் பல புலிகள் பாசறையை நோக்கி வருவார்கள் என மேஜர் அசோக் அண்ணன் அன்று எங்களுக்கு அடிக்கடி கூறுவார். அது உண்மை. நிதி அண்ணனின் வீரமரணத்தின் பின் என் மண் எவ்வளவோ துரித வளர்ச்சி பெற்று வருகிறது. போராட்டத்தில் இன்று அத்தனைக்கும் காரணம் அண்ணன் காட்டிய வழியில் நின்று போராடி வீர மரணத்தைத் தழுவிய மாவீரர்கள். களத்தில் நின்று போராடும் போராளிகளே.

மன்னார் மண் முதல் முதல் கண்ட களப்பலியில் நிற்கும் நிதி, அன்சார் ஆகிய மாவீரர்களின் தியாகம் இன்று எம்மை பலப்படுத்தி வளரச் செய்துள்ளது. அன்சார்( நிக்கலஸ் மைக்கல் குருஸ் ) எனும் போராளி தெல்லிப்பளையில் நடந்த முற்றுகையின் போது போராடி வீரச்சாவடைந்தான். நிதி, அன்சார், எம் மாவீரர்கள் எம் மண்ணுக்கு ஒளிவிளக்காக நின்று மெழுகுவர்த்தியாக உருகியவர்கள்.

எமது இயக்கத்தில் முதல் முதல் வீரமரணமடைந்த சங்கர் அண்ணன்: அதே ஞாபகத்தில் என மன்னார் மண் இழந்த மாவீரர்கள் தமக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் அல்ல. தம் மண், இனம் விடுதலை பெறவேண்டும் என எண்ணி சாவுக்கு மத்தியில் நின்று போராடி, எம்மையும் எம் மண்ணையும் பாதுகாத்து தங்கள் உடல்களை எமக்காப் புதைத்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாமும் விடுதலை பெறும் வரை தொடர வேண்டும். அவர்களின் இலட்சியமும் கனவும் நிறைவேறி எம் மண் விடுதலை பெற நாமும் எமக்காக களத்தில் விழுந்த மாவீரர்களின் ஆயுதத்தை எடுத்து களத்துக்குப் புறப்படுவோம். வா நன்பனே ! இன்று புதை குழியில் இருக்கும் மாவீரன் நிதியின் வரலாற்றைப் படிப்போம். நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பற்றிச் சிந்திப்போம். எங்களுக்காக எம் மண்ணைப் பாதுகாக்கும் புனிதப் போரில் நாளாந்தம் வீரமரணமடையும் மாவீரனின் பாதையில் சேர்வோம் என உறுதி எடுப்போம். விடுதலை பெற ஒவ்வொருவரும் போராட வேண்டும். போர்களம் வா தமிழா !

எஙகள் நிதி எமக்காக மடிந்தான். எங்கள் நிதி தன்னை விட மண்ணை அதிகம் நேசித்தவன். எங்கள் நிதி தன் குடும்பத்தை விட தமிழ் மக்களை நேசிததவன். நிதியின் பாதையில் நானும் செல்வேன் என உறுதி எடுப்பேன். ஐயம் இல்லை எனக்கு.