MAAVEERARKAL
Monday, March 31, 2025
லெப். கேணல் சிறீ
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.
இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.
மேலும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். குறிப்பாக துடுப்பாட்டத்தில் இவர் சிறந்து விளங்கினார்.
இதே காலப் பகுதியில் வன்னிப் பகுதியில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.
யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார்.
சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தாயக விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான களத்தில் லெப். கேணல் சிறீ தனது இன்னுயிரை ஈர்ந்தார்.
மாவீரன் லெப். கேணல் சிறீ அவர்களுக்கு: எனது வீரவணக்கம்
கேணல் சாள்ஸ்
கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேணல் சாள்சின் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.
கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.
யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.
சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.
இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.
உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.
2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.
தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.
சாள்ஸ் தாக்குதலிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் விற்பனர் அல்ல. எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.
இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.
இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.
- கேணல் சூசை
லெப்.கேணல் அக்பர்
புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006.
வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டுமல்லவா? அவன் எங்கே போய்விட்டான்?
அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய்ப் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் சித்திரவதை செய்தது. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். ஜீப்பில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை அவமானப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது.
பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறியசிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண்டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான். அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த இராணுவத்தின் படைத்தளம் மீது ஓயாத அலைகள் - 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் நியமிக்கப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத்தளத்தை இழக்கவிரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்துதரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கேநடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்தபோது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் - 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான்.
முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக 'சத்ஜெய' என்ற பெயரில் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் படைநடவடிக்கையை ஆரம்பித்தது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலிவீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகள் சகிதம் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தஅக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான். உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தது. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான்.
ஏ - 9 வீதியைப் பிடித்து யாழ்ப்பாணத் திற்குத் தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில ஆக்கிரமிப்பிற்கு ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ஷஜயசிக்குறு படைநடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாம் எனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப்பயிற்சிபெற்ற போராளிகள் விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப்படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும்பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான். போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடின பயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப்போராளிகளையும் உற்சாகப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித்தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான்.
பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக்கொள்வான். ஒருமுறை மதியவேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக்காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது அலட்சியமாகச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எச்சந்தர்ப்பத்திலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பாவித்த பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறையுறவுமில்லை. விடுதியில்போய் விளக்குமாறினை எடுத்துக்கொண்டுவந்து தானே கிணற்றடியைச் சுத்தப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக்கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் சுத்தப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு அனுமதிக்கவில்லை. அன்றையநாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே சுத்தப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒருபோதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வுகாணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது.
நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு வைகாசி 13ஆம் திகதி. புத்தபிரான்முன் சபதம் எடுத்துக்கொண்டு வன்னி மீது 'ஜயசிக்குறு' என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப்புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடைபோட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தனர். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய்த் தரிசித்தது. எதிரி ஒவ்வொரு அடிநிலத்தையும் ஆக்கிரமிப்பதற்கு அதிகவிலை கொடுத்தான்.
25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கிநின்று சண்டைபிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை பாசமாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்தபோது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரிமீதான அவனின் ஆவேசம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை அதிகாரியான அக்பர் களத்திலேதான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாடசாலை வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் அலட்சியம் செய்தபடி டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். றம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு துருப்புக்காவியையும் அழித்து இரு டாங்கிகளைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப்படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான்.
இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் விசேட கவசஎதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் சங்கடமற்ற செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக்கொடுத்தான்.
10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. எதிரியை அண்மித்து மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் தேசம்மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச்சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு துருப்புக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்தபின்னரே அக்பர் தளம் திரும்பினான்.
அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் சந்தர்ப்பம் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள்.
19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மையப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்துகொண்டு சுதாகரித்த எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழிநடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித்தலைவர்களும் போராளிகளும் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலைநிறுத்தினர்.
இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப்படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலைநடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான்.
ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல்வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்துநிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித்தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல்தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர்.
அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ - 9 பிரதான சாலையை அண்மித்திருந்தார். முன்னேறிய டாங்கிகளைத்தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப்.கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலேசமடைந்த சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது.
இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்தநிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக தேசத்திற்காகக் கொடுத்து ஆறு டாங்கிகளை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப்படையின் பலத்தை விக்ரர் விசேட கவசஎதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது.
இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் 'அல்பா - 1'. களத்திலே 'அல்பா - 1' வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் 'அல்பா - 1' இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எக்கணத்திலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளிகளின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் உடன் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்தப் பிரதேசத்தை அண்டிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகரவிடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும்வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான்.
ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள்அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது.
விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு 'தீச்சுவாலை' என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. 'ஜயசிக்குறு' களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் துருப்புக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டுமொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை பூச்சியத்திற்குக் கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படிக் கற்பனைசெய்து இந்த விக்ரர் விசேட கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிசிறல் இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியைவைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப்போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான்.
அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் விசேட பணிப்பின் பேரில் சென்றுபணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒருதளபதியாய் இருந்தபோதும் ஒரு சாதாரண போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான வார்த்தைகளால் கதைப்பதும் புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள்.
இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத்தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக்கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத்துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான்.
இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத்தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான். அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த சுத்தவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எச்சந்தர்ப்பத்திலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்துமுடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்லமாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் இராணுவச் சொத்து.
இத்தனை செயற்திறன் மிக்க வீரன்எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னாயத்தச் செயற்பாட்டின்போது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளைநொருக்கினார்கள். 'தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து.' அக்பர்இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான்.
கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, 'அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடு சேர்ந்து எல்லாரும் கஸ்ரப்பட்டா கெதியில விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே' என்று கூறிவிட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும்.
நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்
![]() |
கப்டன் மொறிஸ் (M. O) பரதராஜன் தியாகராஜா (பரதன் ) லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகநேசன்) வீரவேங்கை சிறீ (வடிவேலு சிறீதரன்) |
ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள்
காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும்
பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள்
தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள்
பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.
ஆயிரத்து
தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும்
திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா
வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு
(பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி
செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர்
பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம்
வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக
போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி
இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து
நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை
கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே
வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும்
மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள்
மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து
தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.
அந்த
மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள
நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு
இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக
நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர
போராளிகள் அழைத்து வருவார்கள்.
அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு
வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான்.
அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில்
ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு
கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில்
ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.
அவனது
தலையைத் தடவி “எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டேன்.
“ஒன்பதாவது” என்றான். “பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்” என்றான் .
காவியங்கள் மனதில் வந்தன. அவன் பரதன் தான்… “தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும். நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .
அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். “சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள்
செய்யுங்கள்” என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில்
லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின்
தம்பி, அவரின் நிர்வாகத்தில் வைத்து இருந்தோம். “அந்தக் கடையில் பகுதி
நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ” என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்)
சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான்.
தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும்,
தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும்
உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும்
குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின்
செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ்
ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து “அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு
கடையை சிறப்பாகச் செய்யலாம்” என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை
தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.
சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை
அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது.
தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை
கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க
மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும்.
பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் “காவலுக்கு
தானும் செல்லவேண்டும்”(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம்
முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம்
கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.
கடையில்
அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு
நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு
பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் “இனி உனக்கு கடை சரிவராது”
என்று. “எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால்
இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது” என்று
கண்டிப்பாகச் சொல்லி விட்டார். “வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது”
என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு
எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும்
ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன். “சதா
அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ” என்று
கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .
“இது ஒரு பயிற்சி உனக்கு.
இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை
சொன்னார். அதைச் செய்” என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம்
ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம்
இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.
கேட்கவில்லை. “நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை” என்று கடையின்
பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும்
அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச்
சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு
குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். “சரி கடையை நடத்து” என்று
சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
பின் அண்ணனின் நேரடிப் பார்வையில்
ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில்
மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின்
பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.
மொரிஸ்
சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை
வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய
பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது
நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின்
அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.
இந்தத் தருணத்தில்
கப்டன் மொரிஸ்
மேஜர் கேசரி
லேப்டிநெட் சங்கர்
மேஜர் மலரவன் வேலன்
லேப்டிநெட் சிறி
கப்டன் நாதன்
லேப்டிநெட் இன்பன்
லெப்டினென்ட் காந்தன்
லேப்டிநெட் ரமணன்
லேப்டிநெட் முரளி
லேபதினெட் வெள்ளை
கப்டன் ரஞ்சன் சித்தப்பா
என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.
ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!
– சதாவின் நாட்குறிப்பு
பிரபாகரன் மதிவதனி - போராட்டமே வாழ்க்கையாக
![]() |
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மதிவதனி |
ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர். ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.
உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார். இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோத்தியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோத்தியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.