Showing posts with label மதிவதனி. Show all posts
Showing posts with label மதிவதனி. Show all posts

Monday, March 31, 2025

பிரபாகரன் மதிவதனி - போராட்டமே வாழ்க்கையாக

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்
மதிவதனி
காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காக வரலாற்றை தெரிந்து கொள்ள வைக்கவே இந்த பதிவு.

பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.  மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர். ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார். இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோத்தியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோத்தியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார்.

தம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே பிரபாகரனும் மதிவதனியும். 
 

அண்ணியார் மதிவதனியின் முதல் களம் !

1983 இல் இலங்கை தீவின் சிங்களப் பகுதிகளில் நடந்த இனக்கலவரத்தில் உயிர் உடமை இழப்புடன் எல்லா வகையான பாதிப்புபாதிப்புகளாலும் தமிழர்கள் பாதிக்கப் பட்டு ஈழத்தின் பகுதிகளுக்குத்  திரும்பி இருந்தார்கள். இவர்களில் சிங்கள பகுதிகளில் தொழில் புரியும் தமிழர்களும், தெற்கில் உள்ள பல்கலை கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்களும் மீண்டும் சிங்கள பகுதிகளுக்கே செல்லும் இக்கட்டான நெருக்கடிக்குள் சிக்கி கொண்டார்கள் .

தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை , ஆகவே வடக்கில் யாழ் பல்கலைகழகத்திலேயே கல்வியை தொடரும் வசதிகளை செய்து தரவேண்டும் என்று தெற்கு பல்கலைகழக மாணவர்கள் சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அதற்கு சிங்கள அரசு செவி சாய்க்கவில்லை , மாணவர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினார்கள்.

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றவர்கள் என்று எல்லோரும் களத்தில் இறங்கி போராடினார்கள். யாழ்பாண நகரம் போராட்டக் களமாக மாறியது .சிறப்பாக யாழ் பல்கலைகழகம் போராட்டத்தின் மத்திய களமாக மாறியிருந்தது . இராணுவ கெடுபிடிக்குள் சிக்கி இருந்த யாழ் குடாநாடு அன்று பெரும்பதட்டமாகவே காட்சி தரும் .

தெற்கில் இருந்து உயிர் பிளைத்து வந்த நாங்கள் மீண்டும் அங்கு செல்வது சாவைதேடி மீண்டும் செல்வதற்கு நிகரானது என்று தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் இறங்குவதாக தீர்மானித்தர்கள். அன்று சாகும் வரை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுள் மதிவதனி அண்ணியும் இருந்தார்கள். அன்று அவர்கள் அண்ணனை சந்தித்து இருக்கவே இல்லை . ஒரு பல்கலை கழக மாணவியாக அவரும் அந்த போராட்டததில் கலந்துகொண்டார் ,நானும் அங்கு அவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துகொண்டேன் . முதல் மூன்று நாட்கள் மட்டுமே நான் அந்த போராட்ட அமைவிடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து தொடர்ந்து போராடும் ஒன்பது மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தேன் . பேராதனை கட்டுபத்து பல்கலைகழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களே சாகும் வரை போராடுவது என்று முடிவெடுத்து போராடினார்கள் . அதில் மதிவதனி அண்ணியாரும் ஒருவர் .

நாங்கள் யாழ்பல்கலை கழக மாணவர்கள், தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு ஆதரவுக்காக மூன்று நாட்கள் முறை சுழற்சியாக அமர்ந்து இருந்தோம். முதல் மூன்று நாள் போராட்டத்தின் முதல் நாள் மாலை ஆரம்பம் ஆகியது . இரவு ஓய்வுக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்ளுக்கு ஒரு விரிப்புடன் ஒரு தலையணையும் வழங்கபட்டது , என்னிடம் ஒருவிரிப்பை புன்முகத்துடன் ஒருமாணவி நீட்டினார் . அவர்தான் அண்ணியார் . அன்று எங்கள் அறிமுகம் சாதரமான ஒரு பல்கலைகழக மாணவனாக சக மாணவியாக அவரை சந்தித்த பொழுது, இவர்தான் தமிழர் வரலாற்றில், இன்னும் சில ஆண்டுகளில் பெரும் நாயகியாக வரபோகின்றார் என்று நான் மட்டுமன்றி அங்கு இருந்த எவருக்கும் அதை அறிந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை. அந்த மூன்று நாட்கள் அந்தமண்டபத்துள் இருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு பலவிடையங்களை பேசினோம் . 

நாங்கள் யாழ் பல்கலை கழகத்தின் மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பில் அங்கத்துவராக இருந்து விடுதலை போராட்ட கருத்துக்களை அது தொடர்பான நூல்களை சேகரித்து மாணவர்களுக்கு கொடுப்பதுடன் ஒரு சஞ்சிகை வெளியிட்டு மக்களுக்கும் சரியான வழிகாட்டலை செய்துகொண்டு இருந்தோம். அன்று போராட்டத்துள் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்தது. ஏறக்குறைய 40 இயக்கங்கள் இருந்தன .மக்களுக்குள் பெரும் குழப்பம். யார் எதில் உள்ளார்கள் என்று தெரியவில்லை . அனால் மக்கள் மனதில் பெரிசு என்று ஒரு பெயரில் பிரபாகரன் , தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெரும் நம்பிக்கை வளர்ந்துகொண்டு இருந்தது. அந்தபத்திரிகையில் நான் அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . எல்சல்வடோர் போராட்டத்தில் கியுப விடுதலையில் வியட்நாமிய விடுதலையில் செம்படையில், ரசியாவில் பெண்கெரில்லா போராளிகள் பங்களிப்பு பற்றி. அது பற்றிய ஒரு கருத்து பரிமாற்றத்தில் அண்ணியார் மதிவதனியுடன் சில உரையாடல்கள் செய்த பெரும்பாக்கியம் எனக்கு கிடைத்து .

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலையிலும் உண்ணாவிரதம் இருக்கும் சக மாணவர்களுக்கு வேண்டிய ஒழுங்குகளை முதல் ஆரம்பநாட்களில் மிகவும் உற்சாகமாக. செய்யும் எந்த பணியிலும் அண்ணியார் உற்சாகமாக பணியாற்றினார் . இன்னும் மனதில் உள்ள நினைவுகள் . அன்று வெப்பம் அதிகமாக இருந்தது, மின்விசிறிகளை மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்தார்கள் . அவற்றை சரியாக எல்லா இடத்திலும் வைக்கும் வேளைகளில் அண்ணியாரும் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தார் . ஏற்கனவே மூன்று வேளை உணவு உண்ணாமல் இருந்த நிலையில், அந்த களைப்பு தெரியாமல் எலோரிடமும் ஒரு தாயின் பரிவுடன் , அந்த அகண்ட விழிகள் பிரகாசமாக பேசிக்கொண்டு இருந்தது . ஒரு புன்முறுவல், வெடுக்கென்று திரும்பும் சுறுசுறுப்பு, மூன்று நாட்களில் உணவு அருந்த நிலையிலும் எவ்வளவுக்கு அதிகமாக சுருசுருபாக ஒருவரால் இயங்கி மற்றவர்களை சோர்வடையவிடாமல் அன்பு காட்ட முடியும் என்பதை அவர் காட்டிக்கொண்டு இருந்தார் .

ஒருபோராட்டத்தை மிகவும் கவனமாக கையாளும் ஒரு ஆளுமை மிக்க பெண்மணியாக அவர் இருந்தார் ,அந்த இயற்கையான சுபாபமே அவரை அங்கிருந்த எல்லோருக்குள்ளும் அவரை ஒரு மாணவ போராட்ட தலைவியாக ஏற்றுகொள்ள வழிசெய்தது . பிற்காலத்தில் அண்ணனும் அவரை தன துணைவியாராக தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக, அண்ணியாரின் இந்த சிறப்பு தன்மைகளே காரணமாக இருந்திருக்கும் என்று நான் ஊகித்துக்கொண்டேன் .

மூன்று நாட்களில் நான் அண்ணியாருடன் பெசிய பொழுதிலெல்லாம் அவரை மதி என்று பெயர்சொல்லியே அழைத்திருந்தேன் , அந்தமாபெரும் மனிசி இன்று எங்கள் வரலாற்றின் மிகப்பெரிய தலைவியாக இருக்கின்றார் என்னும் பொழுது . சிவனும் உமையும் எனக்கு அருள் தந்தார்கள் என்று முன்னவர்கள் கூறிய அதே ஆனந்தம் எனக்குள்ளும் உள்ளது . என்வாழ்வில் நான் அடைந்த மிகப்பெரிய கொடைகளில் , அண்ணனுனுடன் முதல் ஆரம்பகாலத்தில் செயலாற்றியது , அதனை தொடர்ந்து அண்ணியாரை அவரது முதல் களத்தில் சந்தித்து அவருடன் களத்தில் அவரது வழிநடத்தலில் நின்று அவருடன் அவரது முதல் களத்தில் போராடியது .இந்த கொடுப்பனவு உலகில் யார் யாருக்கெல்லாம் கிடைத்ததோ தெரியாது , நிற்சயம் என்க்கொருவனுக்கே உண்டு என்ற பெருமையும் எனக்குள் உண்டு.

இந்த வரலாறு எனக்குள் ஏன் இப்படி உள்வந்த்து என்று எனக்கு தெரியவில்லை . அதுவே என்னை இன்றுவரை தொடர்ச்சியாக இனத்தின் விடுதலைக்காக இலைமறை கனியாக இரு என்கின்றது . இராவணன் பிறந்த மண்ணில் பிறந்தேன்.  பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இணைந்தேன், அண்ணியாரின் முதல் போராட்டத்தில் அவருடன் துணை நின்றேன்.  தென்கையிலையில் பிறக்க முத்தி என்பார்கள் பிறந்தேன் . அதனிலும் பெரிய வரம் வாங்கியவன் நான் என்றே எனக்குள் என்னை நான் ஒழுங்குபடுத்துகின்றேன் . இது தற்புகழ்ச்சியாக இருக்கலாம் இருந்தாலும் என் வாழ்வின் பெரும் பயன் அது . என் வாழ்வை ஒழுங்குபடுத்தும் சக்தி அது .

போராட்டம் ஏழாவது நாளை நெருங்கியது மாணவர்கள் ஒன்பதுபேரும் சோர்வாக இருந்தார்கள் . சிங்கள அரசு பல்கலை கழகத்துள் புகுந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தது . நிலை மிக சிக்கலாக மாறியது . மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு முக்கியமானதாக இருந்தது , போராடும் மாணவர்களை சிங்கள அரசு கைது செய்வதை தடுக்கவேண்டும். அற்கு ஒரே வழி தமிழீழ விடுதலைக்குள் மாணவர்கள் உள்வாங்க படவேண்டும் . அதற்கு அன்று பல்கலைகழக மாணவர்கள் தயாராக இருந்தார்கள் , அவர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனையே தேர்ந்தெடுத்தமை தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலைப்புலிகள் மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் , மக்கள் விடுதலைப்புலிகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே.

எட்டாம் நாள் இராணுவம் யாழ் பல்கலை கழகத்துள் அத்துமீறி நுழையும் என்று இருந்தது . மாணவர்கள் பாதுகாப்பு அரணாக நின்று போராடுவததாக இருந்தது . இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்யும் , பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை தோன்றும் . எழாம் நாள் உடனடியாக முடிவுகள் எடுக்கபட்டன, அன்று இரவே மாணவர்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்து செல்வது என்று தீர்மானிக்கபட்டது . இராணுவ கெடுபிடிக்குள் விடுதலைபுலிகளின் படை பிரிவின் பாதுகாப்புடன் மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லபட்டார்கள் ………

- சதாவின் நாட்குறிப்பு