Monday, December 08, 2003

வீரவேங்கை பகீன்


அன்னலிங்கம் பகீரதன்
மண்டைதீவு
வீரமரணம்-18.05.1984


வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.

ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் கிடக்கு.. போய்ப் படடா" என்று அதட்டிவிட்டு அயர்கிறார் அந்தப் பொறுப்பாளர்.

ஆனால் 18.05.1984 அன்று புதிய சாதனை படைத்து மண்ணின் விடியலுக்கு மறைந்தார் வீரவேங்கை பகீன். எந்த சயனைட் மீது சந்தேகப்பட்டாரோ அந்த சயனைட் அருந்தி எதிரியிடம் பிடிபட்டு விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரிய இலட்சியத்திற்கு அமைய வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சயனைட் அருந்தி களப்பலியான முதல் வீரவேங்கையாக வரலாற்றில் பதிந்து கொண்டார்.

அன்னலிங்கம் பகீரதன் இது வீரவேங்கை பகீனின் சொந்தப்பெயர். மண்டைதீவைச் சேர்ந்தவர். குடும்பச் சூழல் காரணமாக ஜேர்மனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளவிலா பற்றும் விசுவாசமும் மிக்க பகீன் ஜேர்மனியில் வசித்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வேலை செய்தார்.

பின்னர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்தவாறும் தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழீழம் சிங்களக் காடையர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தாங்கிக் கொள்ள முடியாத இந்த வேங்கை பறந்து வந்தது தாயகம் நோக்கி. தாயகத்தில் தலைவனின் அணியில் இணைநது பணியாற்றியது.

1983-1984 காலகட்டம் தமிழீழ வரலாற்றில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் தமிழீழத் தேசமெங்கும் சிங்களத்தின் கொடும் படைகளும், காட்டிக் கொடுப்போரும் நிறைந்த காலகட்டம். யார் வல்லவர், நல்லவர், நயவஞ்சகர் என்பது பிரித்தறிய முடியாத காலம். ஒரு விடுதலைப் போராளி இனங்கண்டு தரமறிந்து தன் செய்கருமம் ஆற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. சுற்றும் சிறீலங்கா இராணுவ வல்லூறுகளுக்கு மத்தியில் தனது உந்துருளியில் சுழன்று பணியாற்றினார் பகீன்.

18.05.1984 அன்று அமைப்பின் அரசியல் பிரச்சார வேலைகளுக்காக வல்வெட்டித்துறையில் இவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை முற்றுகையிட்டது சிங்கள இராணுவம். நிராயுதபாணியாய் நின்ற நிலையிலும் நிலை கலங்காத இளவேங்கை வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து பாவனை செய்யத் தொடங்கினார். ஆனால் சிறீலங்கா இராணுவத்தால் இனங்காணப்பட்டு விட்டார். வெறிக்கூச்சலுடன் சூழந்து கொண்டனர் சிறீலங்காப் படைகள். தன்னைச் சித்திரவதை செய்து அமைப்பின் இரகசியங்களைக் கறந்து விடக் கூடாது, அதனால் விடுதலைக்குக் கேடாக தான் அமைந்து விடக்கூடாது என்ற கடுகதியில் சயனைட் அருந்தி ஈழத்தாயின் மடியை முதன் முதல் சயனைட் அருந்தி முத்தமிடுகிறார்.

"இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" என்று யாழ் மீட்ட வீரன் கேணல் கிட்டு ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். ஆம் எங்கள் பகீனும் இன்று விடியலின் துருவ நட்சத்திரங்களில் ஒன்றாய் அமைந்து பதினேழு வருடங்கள் கடந்து போயின. எனினும் பல ஆயிரம் பகீன்களின் பயணங்கள் இலட்சியத்தை நோக்கி நகருகின்றன.

Friday, December 05, 2003

லெப்.கேணல் கிறேசி

கணபதிப்பிள்ளை கோபாலபிள்ளை
இல.187, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி,
கிளிநொச்சி
19.08.1960 - 19.04.1991

மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது.

லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். களமுனைகளில் தொடர்ச்சியாக ஓய்வு ள் ஒளிச்சலின்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணுhறுகளின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு யூலை மாதம் வட மராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லாமூலையிலும் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் இராணுவமும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது.

இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ் வேளையில் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார்.

19.04.1991 அன்று மன்னர் பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிங்கள இராணுவம் முன்னேற முற்பட்டது. சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம்தானும் பறி போய்விடக்கூடாது என்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டி ருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார்.

1990.05.25ஆம் திகதி லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஒரு வருடம்கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி. இவர் அணையாத தீபமாகிய பத்தாம் ஆண்டு நினைவில் நினைந்துறைவோம்.

Sunday, November 23, 2003

லெப்டினன்ட் சங்கர்

ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது. 

அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..


ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.
சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான். 


தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

நன்றி - எரிமலை

Wednesday, November 19, 2003

கரும்புலி லெப்.கேணல் போர்க்

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. "நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

அந்தக் குரலில் உறுதி தெரிந்தது. "போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்". தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் "1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, "நான் புறப்படுறன். இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது" என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது. பிறகு சில மணி நேரத்தில்"முகாம் கைப்பற்றப்பட்டது" என்றார்.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை - அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

"தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?" 'ஏன் சாகப் போறியளோ' பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி "தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன"

அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். "அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை" போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, "அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு" என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

சிறிது நேரத்தின் பின்
"தம்பி சாரத்தையும் ரீசேர்ட்டையும் விட்டுட்டுப் போட்டானணை" என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.
"பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். "தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது, பொட்டு வைக்கச் சொன்னது, உடுப்புகளை விட்டிட்டுப் போனது... ஏனெண்டு விளங்குது" போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழுதழுத்தது.

நன்றி - எரிமலை

Tuesday, November 11, 2003

கப்டன் மயூரன்

கப்டன் மயூரன் (சபா)
பாலசபாபதி தியாகராஜா ஆத்தியடி பருத்தித்துறை
அன்னை மடியில் - 1.11.1970, மண்ணின் மடியில் - 11.11.1993
கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.


அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.

பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். 

அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.

அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.

இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.

மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.

திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.

அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா...யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.


இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ...? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகிவிட்டான்.

மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்... விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
-தீட்சண்யன்..

மயூரனின் நண்பர்களின் நினைவில்...
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே.........

..நண்பர்கள்.......

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்)கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.