Monday, November 07, 2005

கேணல் ராயு

அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.

தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.

விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.

போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார். இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

Friday, July 22, 2005

2ம் லெப். பூபாலினி.

ஆனந்தகுமாரி.கோபாலபிள்ளை
வேலணை
வீரமரணம் - 29.08.1998
ஓயாத அலைகள் 02 இல் வீரமரணம்

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். போராட்ட பணியே ஆழமான அர்ப்பணிப்பினை வேண்டிநிற்கும் பணி. அதனுள்ளும் அவள் ஆழமாய் சென்று அர்பணத்துள் அர்ப்பணம் செய்வாள்.

எதனையாவது செய்து முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வாளானால் அதனைச் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை நடக்கும்.

அவளின் ஒழுங்கிற்கு ஒரு உதாரணம்: நடைபெற்ற ஓட்டப் போட்டி ஒன்றில் பூபாலினியும் கலந்துகொண்டாள். ஆள் கட்டை அதிகம் ஓடமாட்டாள். அகலக்கால் வைத்தால் முடியாதுதானே! ஆனாலும் கலந்துகொண்டாள் தானும் கலந்து கொள்வதாய். அவளுக்குத் தெரியும் முதல் 3 இடங்களிற்குள்ளும் இடம் கிடைக்காது என்று. ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றே கலந்துகொண்டாள்.

‘எதுவென்றிலும் கலந்து கொள்ளாதிருப்பதனை விடவும் கலந்து கடை நிலையை அடைந்தாக்கூட அதுகாரியம்’ என்ற அவள் நினைத்திருக்க வேண்டும்.

முதல் மூன்று நிலைகளுக்குள்ளும் வரமுடியாதென்று கணக்கிட்டுக் கொண்டோர் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்னராகவே நின்று விட இவள் மட்டும் போட்டிக்குரிய அத்தனை ‘ரவுண்டு’ களையும் ஓடி முடித்த பின்பே ஓய்வெடுத்தாள்.

“ஏன்ரியப்பா நின்றிருக்கலாமே! ஏன் உந்த வீண் அலைச்சல்” என்றபோது அவள் கூறினாள்:

“எதுவொன்றிலும் கலந்துகொண்டாலும் அது அது முடியும் வரையில் அது எத்தனையாவதாக வருவதானாலும் சரி ஓடிமுடிக்க வேண்டும்” என்று. அதுதான் ஒழுங்குமுறை அது தான் அவள்.

பூபாலினி, அவள் தனக்கென தனித்துவமான சில குணவியல்புகளைக் கொண்டிருந்தாள். அவளது அக் குணவியல்புகளே அவளை ‘பரோபகாரி’, ‘அம்மா’ ‘களஞ்சியம்’ ‘அழுத்தம்’ தாங்கி ‘விசுவாசம்’, ‘உபதேசி’ என அவளைப் பட்டப்பெயர்களால் அலங்கரித்துக் கொண்டன.

பரோபகாரி, யாரிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்காவள். ஓய்வாய் இருப்பது அவளுக்க ஒத்தவராது. எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும்.

உணவுப் பண்டங்கள் வாய்ப்பாய்க் கிடைக்கிற போது பதுக்கிப் பத்திரப்படுத்தி, வேண்டும்போது பகிர்ந்தளிப்பாள். அதிகமாக இருப்பின் மீளவும் அவை பதுக்கப்படும். வேண்டும் போது வெளிப்படும். இதற்காய் அவளுக்குக் கிடைத்த மகுடங்கள் தான், ‘பரோபகாரி’, ‘களஞ்சியம்’, ‘அம்மா’,

சகதோழிகள் நோய்வாய்ப்படுகின்ற போதும் அவர்கள் ஏதேனும் பற்றாக்குறைகளுக்கு உட்படுகின்ற போதும் அவளிடம் உள்ளவை அவர்களுடையதாகும். சலிப்பின்றி, சங்கடமின்றி பராமரிப்புத் தொடரும். அழுத்தங்கள் தாங்கிக் கொள்ளும் மனோபவத்தினை அவள் இயல்பாய்க் கொண்டிருந்தாள். அவை அத்தனையாலும் தான் அவள் ‘விசுவாசி’ என்றும் அழைக்கப்பட்டாள்.

அத்தனை விசுவாசம் கொண்ட விசுவாசி ஒருமுறை தவறியும் போனாள் தான்.

“ஒருவன் விழாமல் நடந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதும் எழுந்து நடந்தான் என்பதே பெருமை” என்ற ஆண்றோர் வரியோ.

“விழுமின் எழுமின் கருதி கருமம் கைகூடும் வரை உழையின்” என்ற விவேகானந்தர் வரிகளை மனங்கொண்டாலோ என்னமோ அவள் தன் தவறை உணர்ந்துகொண்டாள்.

எந்தவொரு அமைப்பிலும் ‘இரகசியக் கசிவு’ என்பது தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறுமாயின் அது பெரும் விளைவகளை உண்டுபண்ண வல்லது. அவள் உண்மையை உணர்ந்து கொண்டாள்.

போர்க்காளப் பணித்தேர்வு தனக்கு வேண்டியதே என்பதனை உள்ளிருத்திக் கொண்டாள்.

10.06.1995 இல் போராட்டவாழ்வில் இணைந்து பயிற்சி முடித்து சூரியக்கதிர் - 02 இல் காவும் குழுவாய் போர்கள அனுபவமும் பெற்றிருந்த அவளிடம் இயல்பாயிருந்த பொறுப்புணர்வும், செயல்திறத் தேர்ச்சியும் அவள் கற்றுக் கொண்டிந்த தட்டெழுத்து நெறியும்தான் அவளை அலுவலகப் பணிக்காய் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது உண்மை. செயல்திறனால் உழைமின் உழைமின் என்று உழைத்தும் உண்மை.

விழுமின் எழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்ற வரிக்காய் விழுந்தவள் அல்ல என்றாலும் விழுந்தாள் என்பது அதுபோன்றே என்பதனைவிட அதனிலும் வேகமாய் எழுந்தாள் என்பதும் அதேபோன்றதான உண்மையே.

விழுதலில் சினந்து ஓர்மம் உட்புகுந்து அவள் வேகம் விருட்சமாகிக் கொண்டது.

ஜெயசிக்குறுவில் தானும் ஜெயிப்பதாய் கங்கணம் கட்டிக்கொண்டாள் போலும் அவளின் பொறுமையும் நிதானமும் வேவுப் பணிக்காய்த் தேர்வாக்கிகொண்டது. குறுகிய காலத்திலேயே அவள் அவ் அணியின் 2ம் அணித்தலைவியானாள்.

பண்டாரிகுளத்திலிருந்த புளியங்குளம், புதூர், விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்,கிளிநொச்சி, மாங்குளம், ஓலுமடு அம்பகாமம், ஓயாத அலைகள் 02 என அவள் பணி பரந்து விரிந்து கொண்டது. அது பனிச்சங்குளப் பகுதியில் வைத்து ‘எல்.எம்.ஜி’ கனரகப் பயிற்சி வழங்கி மாங்குளப் பகுதியில் ‘எல்.எம். ஜி’ கனரக ‘லோட்’ராக்கிக் கொண்டது.

ஓயாத அலைகள் 02 ற்கு அவள் ‘எல்.எம்.ஜி’ கொண்டே களமிறங்கினாள்.

ஓயாத அலைகள் 02 களமிறக்கம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் வளர்ந்த வாழ்ந்த இடமது.

அவள் பருவமறிந்ததிலிருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தாள். பிறந்தது வேலணையில் என்றாலும் அவள் வாழ்வு அவ்வப்போது நடந்துகொண்டிருந்த இடப்பெயர்வுகளுக்குரிய விதமாய் கணேசபுரம், பரவிப்பாஞ்சான்,வட்டக்கச்சி, கிருஸ்ணபுரம், ஆனந்தபுரம்....என்று நகர்ந்து கொண்டபோதுதான் அவள் நாலும் உணர்ந்தாள். நமக்கொருநாடு நாடாயிருக்க வேண்டுமென்று கணேசபுரத்தில் ஆரம்பித்த அவள் கல்வி வாழ்வு, கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை, கிளிநொச்சி கனிஸ்ர வித்தியாலயம் (தற்போது கிளிநொச்சி மாகா வித்தியாலயம்) வேலணை நடரலசர் வித்தியாலயம், மீளவும் கிளி-கனிஸ்ர வித்தியாலயம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என்று மாறி மாறி அலைப்புக்குள்ளானது. அந்நேரத்திலும் கூட ஒருவாறு கா.பொ.த சாதாரண தரத்தை நிறைவாக்கிக் கொண்டு தொழிற்பயிற்சியாய் தையலும், சுருக்கெழுத்தும், தட்டெழுத்தும் பயின்று கொண்டாள்.

எழுதுவினைஞையாய் சிலகாலங்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் செய்தாள்.

பணியைப் பணியாய்ச் செய்யும் தேசமதில் தான் இல்லை என்பதனை அவள் புரிந்து கொண்டபோது தேசம் இருப்பை நிலைநிறுத்தும் போராட்ட வாழ்வில் அவள் தன்னை இணைந்துக் கொண்டாள். ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணமடைந்தாள்.

திரு.திருமதி கோபாலபிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்பியான ஆனந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட 2ஆம் லெப்ரினட் பூபாலினி ஆலங்குளம் துயிலறையில் துயின்று கொண்டிருக்கிறாள். அவள் இலட்சியம் ஈடேறும் சமாதானம் சகவாழ்வு அல்லாதபோதும் அவர்கள் இலட்சிய நெருப்பு சகவாழ்வு கொடுக்கும். அவள், அவள் போன்றவர்கள் இலட்சியச் சாவால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இலட்சிய நெருப்பு இமயம் தொடும் ஈழத்தைப் பிறப்பாக்கும்.

- அகநிலா

nantri-erimalai-april-2005

Sunday, May 15, 2005

கப்டன் ஈழமாறன்

இராமையா தினேஷ்
மாதகல் - யாழ்ப்பாணம்

05.05.1973-11.11.1993
பூநகரித் தளம் மீதான தவளை நடவடிக்கையில் வீரச்சாவு


"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..."

வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும்.

"விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறிப் பொது மகன் ஒருவனின் சைக்கிளில் ஏறி பயிற்சி நடக்கும் இடம் வந்து விட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்க விட்டவாறு மீண்டும் வைத்திய சாலைக்கு செல்ல நேரிட்டது.

கால் நோ மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் பயிற்சிப் பாசறை வந்து, தன் பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற் கொண்டான். இவ்வாறு மனவியல்பைக் கொண்டவன் இவன். ஆம்...!

இப் பயிற்சியானது சிங்களப் பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்.... ஆணவத்தைச் சிதைப்பதற்காய்.... தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்தவதற்காய்... சுமூகமான ஒரு பாதையைத் திறப்பதற்காய்...

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற் கொள்வதற்காய், ஆண் பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாய் குழுவின் தலைவனாக ஈழமாறனும்...

மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும்-ஆழத்துடன் அழகும் கொண்ட- கடற்கரைதனை அணையாக பெற்ற மாதகல்தனை தனத தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம், நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம் மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான். தயக தாகத்தை தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகை தன்னை முகத்தில் பரவ விட்டிருப்பான். துடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனதையும் கவர்ந்து விடுவான். "வெளிநாடு வா" என மூத்த உடன் பிறப்பு அழைத்துக் கூட இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. "அண்ணா நீ தாய்க்காக உழைத்துவிடு, நான் தாய் நாட்டுக்காக உழைக்கப் போகிறேன்" எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான்.

ஆரம்ப கல்விதனை மாதகல் "சென். ஜோசப் பாடசாலை"யில் பயின்ற பின்னர், 1984ஆம் ஆண்டு தெல்லிப்பழை 'மகாஜனாக் கல்லூரி' யில் தனது கல்வியைத் தொடர்ந்தான். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் திறமையாச் செயற்பட்டு கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்று தனது படசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தான்.

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன் தனது சேவை இந் நாட்டுக்கு உடனடியாகத் தேவையெனப் புரிந்து 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். பயிற்சிக் காலத்தின் போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களைடும் பெற்றான். பயிற்சி தவிரந்த ஏனைய நேரங்களில் சக போராளிகளை அருகில் இருந்தி விடுதலைப் போராட்டங்களைப் பற்றி விளங்கவைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடவான். ஆகையினால் மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள்.

பயிற்சி முடிந்த வேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற "யாழ். கோட்டைச் சண்டையில்" ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்கு பெறுப்பாளனாக நியமிக்கப் பட்டவுடனேயே காரைநகர் சண்டைக் களம் அவனை அழைத்தது. அதன் பின்னர் மன்னார் பரப்புக் கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர் கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும்சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது.

மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த தினேஷ் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்... எதிரியின் தாக்குதலால் காலிலும், கையிலும் காயமடைந்த இவனை தக்க முறையில் வைத்தியப் பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள்.

காயம் மாறி முகாம் வந்தவேளை அவனுக்கு எல். எம். ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான். தனது வெள்ளைப் பற்களைப் போல...

இவனுடன் பழகிய நாட்களை எடைபோட்டுப் பார்க்கிறேன்;. அவை மறக்க முடியாதவை. மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ் வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் 'செவிடுபட வைக்கும்' அதிர்வோடு அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும் போது, தினேஷ் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான்.

"தலை போகப் போகுது பதியடா தலையை" எனக் கூறினால் "தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து தட்டி எழும்பு என்று தலையில் பிடித்து தூக்குவான்" என்பான். இக் கட்டான நேரங்களிற் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான். இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத் தோட்டம் கண் முன்னாலே தெரியும்.... இன்றைக்கு எல்லாத்தையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்.... எமக்கு பசியெடுக்கும் நேரமெல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை தினேஷைகட காணவில்லை. "பரவாயில்லை" நாம் போய் வருவோம் எனக் கூறி எமது அணி முன்னேறியது. பழம் பிடுங்குவற்காய்.

மரத்தில் ஏறியாகி விட்டது. பழங்களைப் பறித்து காற்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டிருந்த வேளை... சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகில் எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும், நாம் மெதுவாக சத்தம் செய்யாது மரத்திலிருந்த இறங்கிப் பதுங்கி நின்றோம்.... வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது.... இந்த வேளையில் சண்டை பிடிப்பத எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் மனதிற் கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்த நின்று கொண்ட தாக்குதலுக்குத் தயாரானோம். தினேசும் லெப்டினன்ட் சித்துவும் சரித்தபடி... மெது செருப்புக்களை எடுத்துக் கொண்டு... சிங்களம் கதைத்து... எம்மை வெட்கப்பட வைத்துவிட்டார்கள். நிலமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள அசடு வழிந்தபடி அவர்களுடன் சேர்ந்த சிரித்தோம். இப்படி இவனது குறும்புகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஆறுமாதப் பிணைப்பால் ஒன்று பட்டு எமத பணி தொடர்ந்த வேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது... எமது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும்வரை கைகளை அசைத்த விடை கொடுத்தோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்து விட முடியாத.

பிரிந்து சென்ற அவன் "மின்னல்" தாக்குதலில் ஏ.கே. எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குனராகச் சென்றான். மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனத முப்படைகளினதும் உதவியுடன் மூர்க்கத் தனமாகத் தாக்கினான்.... ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்க முடியாத உறுதி பக்க பலமாக இருந்தது.

இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக் கொள்கின்றது... அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறை சாற்றி நிற்கும்... அவனது குருதியை எத்தனை முறை இந்த மண்மாதா ஏந்தியிருப்பாள்... நினைத்துப் பார்க்கிறேன்... காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய்யெனக் கூறியது... அன்பாகவும், பண்பாகவும் ஆதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் வாய்ப்புக் கிட்டியது.

பசறையில் பயிற்சி வழங்கப்பட்டது... மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்து விட்டான் தினேஷ். இவனுடன் யசி என்ற போராளியும் தான்...! "நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில" பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்று விடவில்லை. சிரித்தபடியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழே நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச் செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான்.

இவ்வாறு தான் செய்யும் சிறு தவறுகளாயினும் பெறும் தண்டனைகளை மகிழ்வுடன் ஏற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

நாம் அனைவரும் செல்லமாகச் "சம்மாட்டி" என்றுதான் அழைப்போம். அதற்கு ஒருநாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன் சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித் துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகிறது. கொதித்தெழுந்த அவன்... தனது கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தாங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. "என்ர கடைசித் தங்கச்சிக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா, அவள் தான்ரா என்ர உயிர்" என்று தங்கை மீதுள்ள பாசத்தின் ஆழத்தை தனது சக நண்பனிடம் கூறி வைப்பான். அடுத்து மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் -எதிரியானவன் "பலவேகய - 2" எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் முளைத்தான் தினேஷ். இரண்டாம் நாட் சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்து தான். "ஏன்ரா மச்சான் அடிக்கையில்லை?" எனக் கேட்ட நண்பனிடம் "இயக்கம் படுற கஷ்டத்தில கண்டமாதிரி அடிக்கக் கூடாது... ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஷ்ரப்படுகுது தெரியுமா?" என, தனது சொற்பொழிவைத் தொடங்கி விட்டான்.

ஆம்.... எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான். கிலி கொண்டு அடிப்பான். ஏனென்றால் அவனுக்கு தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில் கூட நிதானமாகச் செயற்பட்டு எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி, எவ்வளவு அவனிடம் எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். "இலட்சியம் ஒன்றுதான் எங்களின் உயிர்..... அதற்காக நம் உயிர் போவது கூட எமக்குக் கவலையைத் தராது...."

சண்டை முடிந்தது சோகங்களை மனதில் தாங்கியவாறு சக தோழர்களின் சில உடல்களைத் தோழில் சுமந்தவாறும் மீளுகின்றோம்.

பழைய முகாம் களை கட்டுகிறது. "இனிப்புச் செய்வோமடா". ஒரு நண்பன் கேட்க, "ஓம் நான் நல்லாச் செய்வேன். தேவையானவற்றைக் கொண்டு வாங்கோ" எனக் கூறியபடி அடுப்பு வேலைக்கு அயத்தமானான் தினேஷ். சீனி, தேங்காய், மா வெனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்த சட்டியில் பாணியை கிளறி விட்டுக் கொண்டிருந்தான் அவன். காதைச் செவிடுபடுத்துபடியாக எங்கிருந்தோ ஒர் ஷெல் வந்து விழுந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டு வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அதனைக் கேலிபண்ண ஆரம்பித்து விட்டார்கள்;.

"டேய் என்கென்ன செய்யத் தெரியாதோ...? கொண்டுவா, உங்களுக்கு இனிப்பு தந்தால் சரிதானே...?" மீண்டும் வேலைகள் ஆரம்பமாக சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தன் கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது.

அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் பல மாத வேவுப் பணியின் பின்னர் - தாக்குதல்த் திட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கிறது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடி பாய்கிறது. கடலில் பாயும் கோழையவன், கடற்புலிகளால் மடிகிறான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது கடலில் கொட்டுகிறது. விமான எதிர்ப்பு ஒருபுறம் முழங்க கரும்பச்சை பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தவாறு நிலத்திலே ஓடிக் கடலில் கலக்கிறது..... தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடல்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது...

சடுகுடு விளையாடுவதைப் போல் மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது.

"அண்ணை குறிப்பிட்ட இடத்தைப் பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன். இது சத்தியம்." உறுதியாகத் தளபதியின் கையில் அடித்துவிட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகிறான்.

குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கிறான். அங்கே... அங்கே... கடைசியாத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ் மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, ப+நகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்.... அவனது தொலைத் தொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது.

"அண்ணை எனக்கு தந்ததைப் பிடிக்காமல் திரும்பி வரமாட்டன்" அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது.

அன்றொருநாள் எனது டயறியில், "என்ர நினைவாக இதை எழுதிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைத்திரு என்ன?" என்ற படி எழுத ஆரம்பித்தான்.

"நாம் அனைவருமே பல கொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையைச் சேர்ந்தவர்கள். பிரிவு எம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது"

இப்படிக்கு
தினேஷ்

அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

"ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது.!"

- த. பாரதி -

Friday, May 13, 2005

மேஜர் சோதியா

மைக்கேல் வசந்தி
கரவெட்டி, யாழ்பாணம்.
மகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி


பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.

நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

சோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.

ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.

விடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.

அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.

காடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.

எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.

சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.

உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை... நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.

கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.

கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.

கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.

கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா... அதுதான் எங்கள் சோதியாக்கா.

பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...

காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.

உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.

அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.

வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.

சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.

உங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.

- விசாலி -

Thursday, May 12, 2005

லெப்.கேணல் நவம் - டடி

செல்லப்பெருமாள் அருமைராசா
கொக்குத்தொடுவாய் முல்லை
2.2.1961-15.5.1989
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி


இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின் மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான்.

எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது வார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை நட்சத்திரமாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் பிரதேசத்தில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை நேசித்த.... வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

அதிதியாக வந்தோரால் அகதியாக ஆக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் பிரதேசங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது இராணுவ முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது பிதேசத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிப்பாகச் செய்யலாம். பாரண்ம் அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும்ää அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலைää மணலாறு என விஸ்தரித்;து வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களானää எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்து விடவில்லை. அவ்வப்போது மணலாறு பிரதேசத்தில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான்.