Tuesday, September 30, 2003

லெப். பாவலன்

பாலமுரளி - பாலகிருஸ்ணன்

தமிழீழத்தில் யாழ் மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் தான் இணுவில் என்ற கிராமம் அமைந்துள்ளது. வளங்களால் வனப்புப் பெற்ற பிரதேசங்களைக் கொண்டது தானே தமிழீழம். கல்வி, செல்வம் நிறைந்த அந்தக் கிராமம் தலைவரின் காலத்துடன் வீரமும் பெற்றது. எல்லா எழிலும் நிறைந்த கிராமமானஇணுவில் தான் பாலகிருஸ்ணன் இராசம்மா தம்பதிக்கு முதலாவது தவப் புதல்வனாக 16. 10. 1979 இல் பிறந்தான். தமிழீழ மக்களின் பாவலன். அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலமுரளி. முரளி என்றுதான் எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள். முரளிக்கு இரண்டு தங்கைமார். குழந்தைப் பருவத்தில் தன் தங்கையருடன் இன்பமாக கூடிக்குலவி மகிழ்வுடன் வாழ்ந்தான். ஆரம்பக் கல்வியையாழ் இணுவில் இந்துக்கல்லூரியில் கற்றான். அவனது மாணவப் பராயம் இன்பமயமானதாக இனிதாக கழிந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் சிங்கள இனவாதப் பேய்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தின. இவனது குடும்பமும் இணுவிலை விட்டு இடம் பெயர்ந்து வன்னிப் பெரு நிலப்பரப்பு நோக்கிச் சென்றது. அங்கு கிளிநொச்சி, ஒலுமடு, முத்தையன் கட்டு என பல இடங்களில்? வசித்து வசித்து துன்ப துயரங்களைச் சுமந்த இவன் குடும்பம் பின்னர் தேறாக்கண்டல் சென்று இருந்தது.

அப்போது இவன் மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்றான். படிப்பில் மட்மின்றி விளையாட்டிலும் திறமைமிக்கவனாகத் திகழ்ந்தான். தனது திறமையால் விளையாட்டு படிப்பு என்று முன்னிலையில் திகழ்ந்த முரளிக்கு, சிங்கள இனவெறியரை அழித்தொழித்து அவர்களின் அக்கிரமப் போக்கிற்கு முடிவு கட்டினால் தான் உறவுகள் சொந்த இடத்தில் சேர்ந்து வாழ முடியும் என்ற சிந்தனை எழ, படிப்பினை இடையில் நிறுத்தி விட்டு தான் கொண்ட முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழர் சேனைத்தலைவனின் வழித்தடம் பதித்தான். இவனது ஆசைத்தங்கையும் புலியணியில் இணைந்தாள். மனத்திடத்தோடு போராட்ட வாழ்வில் தடம் பதித்த முரளி, ஆரம்பப் பயிற்சியிலேயே திறமை மிக்க மாணவனாகத் திகழ்ந்தான். பயிற்சியை திறமையாக முடித்தவன்பால் ஈர்க்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் இவனை ~விசேட அணியான விக்ரர் கவச எதிர்ப்பு| அணிக்கு அனுப்பி வைத்தனர். சென்றவன் கவச எதிர்ப்பு விசேட பயிற்சியை மிகவும் ஆர்வத்தோடு, உடலை வருத்தி, உளத்தை நெகிழ்த்தி எதிரியின் கவசத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என ஆவேசம் கொண்டவன் சிறப்புறச் செய்து நின்றான். பயிற்சிகளை சிறப்புறச் செய்த வீரப்புலி இவனுக்கு, சண்டைக்குச் செல்ல அனுமதி தளபதியால் கிடைக்கப்பெற்றது. பெருமகிழ்ச்சியுடன் சண்டைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த வேளை, இவனது ஆசைத்தங்கை வீரச்சாவடைந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு கிடைத்தது. இதயத்தை இடியாய் தாக்கிய அந்தச் செய்தியை கேட்டவன் மனதைத் தேற்றியவனாய், தன் பாசச் சகோதரியின் வித்துடல் விதைப்பு நிகழ்வை முடித்துவிட்டு, அவள் கல்லறையில் சபதமெடுத்தவனாய் உறுதியுடன் தனது தோழர்கள் நின்ற களமுனைக்கு விரைந்தான். அங்கு எதிரியுடனான மோதலிற்காய் காத்திருந்த வேளை, தளபதியால் அவன் நின்ற அணி முகாமுக்கு வரவழைக்கப்பட்டது. பயிற்சிக்கா கவே அந்த அணி வரவழைக்கப்பட்டது. களத்தில் இருந்து பின்னிலைக்கு வந்தது சண்டை சண்டை என நின்ற அவனுக்குப் பெருமிழப்பாக அமைய, சிறப்புப் பயிற்சிக்கான திருப்பம் தானே என சுதாகரித்துக் கொண்டு, பெரும் கஸ்ரங்கள் நிறைந்த பயிற்சியை முடித்துக் கொண்டான் பாவலன்.

விசேட பயிற்சியை முடித்துக் கொண்டு பாவலன் இருக்க, தமிழர் காவலன் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடலில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தரையிறக்கம் இடம் பெற்றது. கடலிலே பல மோதல்களை எதிர்கொண்டு பெரியதொரு எதிர்சமருக்கு மத்தியில் தான் அந்தக் குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றது. பெரிய சமர்களை எதிர் கொண்டே பாவலனின் அணியும் குடாரப்பில் தரையிறங்கியது. இலட்சிய நெருப்பை நெஞ்சிலே சுமந்த வண்ணம் யாழ்ப்பாண மண்ணிலே தடம்பதித்த பெருமையுடன் எதிரிமலைகளை எதிர்கொண்ட வண்ணம், இரவோடு இரவாக பல திசைகளில் விடுதலைப் புலியணிகள் நகர்ந்தன. எதிரி கதை முடிக்க ஏறு நடை போட்ட பாவலனின் அணி, வடமராட்சி கிழக்கு நாகர்கோயிலை மூடிநின்ற எதிரியை பந்தாட விரைந்து சென்று காப்பு நிலைகளை அமைத்துக் கொண்டது. பின்னர் அதில் இருந்து இவன் அணி நீரேரி ஊடாக இத்தாவிலுக்கு நகர்த்தப்பட்டது.

அவர்கள் சென்ற அந்த இத்தாவில் ப10மியும் இரக்கம் அற்ற எதிரியால் சல்லடை போடப்பட்டிருந்தது. குண்டு மழையால் குளித்து, அனலாகச் சிவந்து கொண்டிருந்தது. தேசம் எரிவது கண்ட இவனது நெஞ்சிலும் இலட்சிய நெருப்பு பிரமாண்டமாகப் பற்றி எரிந்தது. தரையிறக்கத்திற்கு தரை, தண்ணி என்று கொடுத்த இடர்களைச் சுமந்த வண்ணம் விரைந்த இவனும் அணிகளும் குண்டு மழை நடுவே, குருதிக்கடல் இடையிலும் வந்த பகை முடிக்க, மாற்றாhவன் கவசம் உடைக்க தீக்குளித்த வண்ணம் 10. 04. 2000 அன்று ரணகளத்தில் இறங்கி வீரத்துடன் விளையாடினான் வீரப் பாவலனும்.

வீர விளையாட்டுப் புரிந்த விடுதலைப் புலியணிகளின் தீரம் கண்டு எதிரி மலைத்தான். எதிரி ஏவிய எறிகணை ஒன்று எங்கள் பாவலன் அருகில் விழுந்தது. விழுந்த எறிகணை விறலுடன் எழுந்த வீரன் வலக்கரத்தைப்பறித்தது. குண்டு மழையால் குளித்த இத்தாவில் ப10மி பாவலனின் குருதி பட்டுச் சிலிர்த்தது. காயம்பட்ட பாவலன் மருத்துவ மனைக்குச் சென்று காயத்தை மாற்றிக் கொண்டு, மீண்டும் களம் செல்வேன் என எண்ணியிருந்த வேளை, பொறுப்பாளர் அவர்கள் பாவலனுக்கு ~இனி சண்டை பிடித்தது காணும்| என்று கூறி வேறு பணி கொடுத்தார். கொடுத்த பணியைச் சிரமேற் கொண்ட பாவலன் திறமையாகச் செய்தான். அப் பணியையும். தான் கொண்ட இலட்சியத்தை இறுதி மூச்சாகக் கொண்ட அவன் தன் பணியை செம்மையாகச் செய்து வந்தவேளை அன்று வழமை போல கதிரவன் கண்விழித்து ஒளி பரப்ப, தன் பணியில் ஈடுபட்டிருந்தான். அந்த வேளை இயற்கையின் கொடூரத்தால் பாவலன் இறுதி மூச்சடங்கி லெப். பாவலனானான்.

மண்ணுக்காய் மரணித்த பாவலனே!
உன் மூச்சும் பேச்சும் அடங்கியதே ஒழியஇலட்சியம் வீச்சுப் பெற்றுள்ளது.
மண்ணுக்காய் மரணித்த மாவீரப் பாவலனே!
உன்னுயிர் மூச்சும் விடுதலையுணர்வுகளும் அழிந்து விடப் போவதில்லை.
லெப். பாவலனாய் மண்மடியில் படுத்துறங்கும் பால முரளி, தமிழ் விழிகள் பார்த்திருக்க
உன் தோழர்கள்இலட்சியத்தை சுமந்த வண்ணம் இங்கு.
காலம் ஒன்று பதில் சொல்லும்மாவீரா! உன் கனவு நனவாகும்.

பிரதியாக்கம் - இளஞ்செல்வம்

Sunday, September 21, 2003

கப்டன். லிங்கம்

வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார். 1980ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செய்ற்பட ஆரம்பித்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத வேளையில், விடுதலைப் புலிகளை வேட்டையாடவென இரகசியப்பொலிசார் மோப்பமிட்டுக் கொண்டிருந்தவேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிக்க சிரமங்களுக்கிடையில் செய்தார். 1981இல் முழு நேர உறுப்பனராக இணைந்து கொண்டார். அதே ஆண்டில் இராணுவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.

1983 யூலை மாத வரலாற்றுப் புகழ் பெற்ற திருநெல்வேலித் தாக்குதல் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்தார்.

1984இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடாத்தி தமிழக மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். அதன் பின்னர் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமொன்றின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பல நூறு தீருமிக்க போராளிகளை உருவாக்கினார். தேசியத்தலைவரின் அதிவிருப்பிற்குரிய போராளியாக விளங்கிய கப்டன் லிங்கம் அவரின் உதவியாளராகவும் மெய்பாதுகாவலராகவும் விளங்கினார்.

லிங்கம் சக போராளிகள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரின் மீது அன்பு கொண்டிருந்தனர். கடமையென்று வருகின்ற வேளைகளில் கண்டிப்பானவராகிவிடுவார்.

29.04.1986 அன்று ரெலோ துரோகக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட இரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக புலிகளின் தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டார். சிறீசபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த ரெலோ முகாமிற்கு நிராயுதபாணியாகச் சென்ற கப்.லிங்கம், ரெலோ கும்பலால் கண்ணில் சுட்டு படுபாதகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் துரோகிகளால் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகின்றார்.

Monday, September 15, 2003

2ம் லெப். சுரேந்தினி

ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை

வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் விருப்பத்துக்கமைய தெல்லிப்பளை பகாஜனாக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை ஜனந்தினி ஆரம்பித்தாள். கல்வியில் அவள் கொண்ட விருப்பு அவளை ஆவலுடன் படிக்கத் தூண்டியது. ஒவ்வொரு வகுப்பிலும் தங்குதடையின்றி சித்தியேய்தினாள். இவளின் கல்வித்திறமையை பார்க்க கொடுத்து வைக்காமல் தந்தையார் இவளது சிறு வயதிலிலேயே காலமாகிவிட தாயின் அன்பான அரவணைப்பில், அவள் கொடுத்த ஊக்கத்தில் கல்விப் பொதுத் தராதர சாதசரண பரீட்சையில் திறமைச் சித்திகள் மல பெற்று சித்தியெய்தினாள். உயர் வகுப்பை உன்னதமாகப் படித்துத் தேறிவிடவேண்டுமென உறுதியான எண்ணதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை அவளது எண்ணத்தைக் கலைத்தது சிறிலங்கா இராணுவத்தில் தமிழர் மீதான தாக்குதல்கள்.

சிங்கள இராணுவம் தமிழர் மீது கேரத் தாக்குதல்கள் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. ஒரு இன அழிப்பையே மேற் கொண்டிருந்தனர். அத்தோடு தமிழரின் முன்னேற்றத்துக்கான கல்வியை திட்டமிட்டு அழிக்க முற்பட்டனர். அவர்களின் கொடூரத்தனமான குண்டு வீச்சுக்கு அடிக்கடி தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்விக் கூடங்கள் இலக்காகி சிதறின. இராணுவ நடவடிக்கைகளால் சேதமுறாத பள்ளிக்கூடங்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம். கல்வியில் மேன்மை அடைய வேண்டுமென பெருவிருப்புக் கொண்டிருந்த ஜனந்தினியின் மனதை இது பெரிதும் பாதித்தது. தமிழ் மக்களின் உயிரினும் மேலான பொக்கிசமான கல்வியை பயில வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிய அந்த எதிரிமீது ஜனந்தினி உள்ளூரக் கோபம் கொண்டாள். கல்வி... கல்விக்குத் தடையாய் இருக்கிற இந்தப் பேய்களை...... கோபத்தில் குமுறியவள் எதிரியை ஒழிக்க 1995 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அணியில் போராளியாக இணைந்து கொண்டாள். 30 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டாள். பயிற்சியின் நுட்பங்களை மிக இலகுவாக புரிந்து கொண்டு பொறுப்பாளர்களின் நன் மதிப்பை பெற்றுக் கொண்டாள். பயிற்சி முடிந்து வெளியேறும் போது சுரேந்தினி என்னும் போராளியாக வெளிவந்தாள். பயிற்சி முடிந்த பின் மற்றைய போராளிகளுடன் உயிர் காக்கும் சேவையான மருத்துவப் பகுதிக்கு அந்தத் துறையைப் பயில்வதற்காக அனுப்பப்பட்டாள். அந்த மருத்துவக் கல்லூரி பயிற்சியும் சுரேந்தினிக்கு பெரும் அக மகிழ்வினைத் தந்தது. போருக்கு பக்கபலமான பெரிய சேவை மருத்துவச் சேவை. போரில் காயப்படும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதும் குணமடையச் செய்து எதிரியை அழிக்க மீண்டும் களம் அனுப்பும் பாரிய பணியை மருத்துவ பிரிவுவல்லவா செய்து கொண்டிருக்கின்றது. அந்தச் சேவையில் விருப்புடன் செயலாற்றியதாலோ என்னவோ சுரேந்தினியின் முகம் எந்த நேரமும் சாந்தமாக அமைதியாக இருக்கும். சக போராளிகளுக்கு எந் நேரமும் எந்த வித உதவி என்றாலும் சிறிதும் தயங்காமல் இன்முகத்துடன் செய்து முடிப்பாள். கோபம் என்பதை இவளிடம் காணவே முடியாது. மருத்துவத் துறையில் மிகவும் திறமையாகவும் கடமை உணர்வுடனும் செயற்பட்பாள்.

தான் மாத்திரம் திறமையாக இருந்தால் போதாது மற்றவர்களும் திறமைசாலிகளாக வரவேண்டும் என்பதற்காக தான் கற்ற அறிவினை மற்றவர்களுக்கும் எடுத்து விளக்குவாள். தமிழர் வாழ்வைக் குலைத்து இனத்தின் குரல் வாளையை முறுக்கி நறுக்கிவிட வென சிங்கள இராணுவத்தால் சூரியக்கதிர் 01 என நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இரவு பகல் பாராது கண்விழித்த போராளிகளைக் காப்பாற்றுவதில் கடமை உணர்வில் ஈடுபட்டாள். அவளது சேவையைப் பெற்று எத்தனையோ போராளிகள் மீண்டும் களம் ஏறினார்கள். மருத்துவம் என்கின்ற அந்தப் புனித சேவையில் அவள் தொடர்ந்து ஈடுபட்டாள். சூரியக்கதிர் 01 நடவடிக்கையை அடுத்து முல்லைச் சமர் களத்தில் அவளது மருத்துவப் பணி தொடர்ந்தது. போர்களத்திற்கு மிக அருகே அவள் பணிவிடம் அமைந்திருந்தது. எதிரியின் வெறி கொண்ட தாக்குதலுக்கு சுரேந்தினி குறியானாள். அவள் உடல் தளர்ந்தது. மெல்ல மெல்ல மண்ணில் சரிந்தாள். தமிழர் தம் போர்க்காவியம் படைத்த முல்லைமண் அவள் உடலைத் தழுவிக் கொண்டது. அவள் மாவீரர் ஆனாள்.

இவளின் அன்பான நெருக்கமும் திறமையான செயற்பாடுகளும் இவளது சக போராளிகளுக்கு எந்நாளும் அவளை நினைவு கூரச் செய்யும். அவள் விட்டுச் சென்ற பாதையில் உறுதியுடன் விரையும் கால்கள் வெகுவிரைவில் தமிழீழம் வென்றெடுக்கும்

எழுதியவர் போராளி

Sunday, September 14, 2003

லெப். கேணல் பாமா

சியாமளா சண்முகசுந்தரம் - இன்பருட்டி, பருத்தித்துறை

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !

எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவனைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவனது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச் செய்யும்.

எங்கட பாமாக்காவோ ?

என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் அனேகம், நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலும் கால்களை நீள நீள வைத்தபடி உலா வந்தவள். இன்று எங்கள் நினைவுக்குள் நீளமாய் உறைந்து போனாள்.

பருத்திதுறையிலுள்ள இன்பருட்டி கடற்கரை ஓரத்தில் சின்னக் குழந்தையாய் விளையாடி சிப்பிகளும் கிழிஞ்சல்களும் பொறுக்கி......... அவள் குழப்படிக்காரியாகத்தான் இருந்தாள். சண்முகசுந்தரம் ஐயாவுக்கும், இரத்தினேஸ்வரி அம்மாவுக்கும் நாலாவது பிள்ளையான அவள் சியாமளாவாக வலம் வந்து அந்த வீட்டை நிறைய வைத்தவள். 1971.03.28 இல் அவள் பிறந்த போது அந்த வீடு நிறைந்துதான் போனது. சியாமளா சரியான துடியாட்டக்காரி அம்மாவுக்கு விளையாட்டுக்காட்டிவிட்டு, இன்பருட்டிக் கடற்கரை ஓரங்களில் கால்கள் மண்ணிற் புதைய, சின்னக் குழந்தையாய் தத்தித் தத்தி வருவாள். தொடுவானைப் பார்த்தபடி, எறிகின்ற அலைகளில் நனைந்தபடி நீண்ட நேரங்கள் நிற்பாள். அம்மா அவளைக்காணாது தேடிவரும் வேளைகளில் ஓடி ஒளித்து, அவளது குழந்தைக் காலக் குழப்படிகள் சொல்லிமாளாது.

அவள் தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலும் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தனது உயர்தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றபோது உயிரியல் விஞ்ஞானத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாள். படிபபிலும் சரி, விளையாட்டிலும் சரி என்றுமே பின்தங்கியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் அவள் பெற்ற சான்றிதழ்கள் ஏராளம்.

இப்படி இருந்தவளது வாழ்வின் அமைதியை இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் குலைத்தன. அவளது அண்ணன் கடற்புலி லெப்டினன்ட் வெங்கடே~; வீரச் சாவைத் தழுவிக் கொண்டபோது படிப்பை விட நாடடுப்பணி மேலாகப்பட்டது. அண்ணன் கொண்ட இலட்சியப்பணியைத் தொடர சியமளா இயக்கத்தில் இணைந்தாள்.


1989 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இவள் இயக்கத்துக்கு வந்தநேரம், தமிழீழத்தில் வழுக்கி விழுகிற இடமெல்லாம் இந்திய இராணுவம், புலிகளை இரவும் பகலும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரம். புலிகளின் முக்கியமான நடவடிக்கைகள் யாவும் காட்டிலே மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலையில் இயக்கத்தில் போராளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதுவும் பெண்போராளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளுக்குள் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் சியாமளா, பாமாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தாள். பயிற்சிகளில் அவள் காட்டிய திறமையும் உயர்ந்த திடமான உடலமைப்பும் அவளை 50 கலிபர் துப்பாக்கியின் உதவிச் சூட்டாளராக செயற்பட வைத்தது. தனது கனரக ஆயுதத்தை தோளிலே சுமந்தபடி லிங்குகளை தொளின் குறுக்காகப் போட்டபடி அவள் நடப்பது தனியான கம்பீரம் ! காட்டுக்குள் நீண்டதூரங்கள் நடந்து, காடு முறித்து, எமக்குத் தேவையான சாமான்களை நாம் சுமந்துவருவது வழக்கம் கனத்த சுமைகள் தோளை அழுத்த அந்த வேளையிலும் இவள் கலகலத்தபடி வருவாள். எங்களுக்குப் பாரங்குறைந்தது போற்தோன்றும்.

1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய இராணுவம் எம் நாட்டைவிட்டு வெளியேறிய பொது காட்டில் இருந்த இருநூறு பேர் கொண்ட குழு யாழ்பாணம் வந்தது. இக் குழுவில் பாமாவும் ஒருத்தியாக இருந்தாள். அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில் அவளது தடையங்கள் பதிந்த வண்ணமிருந்தன.

கோட்டை, பலாலி, காரைநகர், சிலாவத்துறை, பலவேகய ஒன்று, மணலாறு என்ற நீண்ட பட்டியலில் அங்குள்ள காவலரண்களில் அவளது கால்கள் அகலப் பதிந்தன.

பாமா ! குறிப்பிட்ட சில காலப்பகுதியினுள்ளே இவளது வளர்ச்சி அபாரமானது. இவளின் உறுதியான செயற்பாடுகளும் நினைத்தகைச் சாதிக்கும் பண்பும் இவளைப் படிப்படியாக வளரச் செய்தன.

பலாலி காவலரண்களில் பாமா நின்றபோது அவளது செயற்பாடுகள் யாவும் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் எனக்கு தெரியாது என்று இவள் தலையாட்டியதை நாங்கள் காணவில்லை. வீட்டிலிருந்து எல்லாம் தெரிஞ்சு கொண்டே வந்தனாங்கள். இயக்கத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம். எல்லாம் முயற்சியாலைதான் என்று அடிக்கடி கூறுவாள்.

அவற்றை நாம் பலாலியில் கண்டோம். அது 1990 ஆம் ஆண்டின் மழைக்காலப் பகுதி. பலாலியின் செம்பாட்டுமண் மழை ஈரத்தில் பிசுபிசுத்தது. கால்கள் சேற்றில் புதைந்தன. சேற்றுக் குழம்புகளின் நடுவே இருந்த அந்தக் காவலரண் அடிக்கடி எதிரியின் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது. ஓயாமல் எறிகணைகள் விழுந்ததால் நிலம் கரியாகிப் போனது. அடிக்கடி அவ்விடத்துக்கு முன்னேற இராணுவம் முயற்சிப்பதும் நாம் அடித்துத் துரத்துவதும் வழக்கமான ஒரு நிகழ்வாகிப் போனது.

இத்தருணத்தில் முதல் நாள் நடந்த கடுமையான சண்டையில் பதின்னான்கு பேர் காயம் அடைந்தனர். எதிரியின் இலக்கான அந்த இடத்தில் தொடர்ந்தும் எமது குழுவை நிலை நிறுத்துவதற்கு நாம் ஒரு பொறுப்பான ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது பாமாவின் செயற்பாடு நம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.

நான் குறூப்பை கொண்டு போறன். அவள் எழுந்து சொன்னாள். இதுவரையும் பெரிய களங்களைக் கண்டவள் அல்ல அவள். ஆனால் அவளிடம் ஒரு வித்தியாசமான திறமை இருக்கத்தான் செய்தது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழுவைத் திறமையாகச் செயற்படுத்திய விதம் எமக்கு நிறைவைத் தந்தது. அடிக்கடி இராணுவத்துக்கு தலையிடி கொடுப்பதும் பாமாவின் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் பலாலியின் பனைவெளிகளை ஊடறுத்தபடி எதிரியின் தேடொளி இரவைப் பகலாக்கும். மிகமிகக் கிட்டவாக தனது ஒளியைப் பாச்சியபடி இருக்கும்போதெல்லாம் பாமா அதற்கு குறி வைப்பாள் அவளது பிறவுண் குறிதவறியதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பயிற்சி முகாமிலும் சரி சண்டைகளிலும் சரி அவள் நன்றாக குறிபார்த்துச் சுடும் திறமை பெற்றவளாக இருந்தாள்.

அப்படி ஒரு இடத்தில் தேடொளி உடைய மறு இடத்தில் எதிரி அதைப் பொருத்த மீண்டும் உடைய வைத்து, உண்மையில் அவர்களைச் சலிப்படையவே செய்துவிட்டாள். அந்த நீண்ட பனைகளில் நிலையெடுத்தபடி இராணுவக் காவலரண்கலைள நோக்கி அடிக்கடி அருள் 89 ஐ அடிப்பாள். அது ஒரு விளையாட்டுப் போலை........ ஆனால் குறிதப்பாத ஒன்றாக அவளுக்கு இருக்கும். இப்படி எத்தனை சம்பவங்கள் ! பாமாவின் துடிப்பான அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பலாலியின் புழுதி படிந்த செம்பாட்டுமண் சொல்லும் கனத்த காற்று சொல்லும்.

பலாலிக்கு பிறகு பெரிய களமாக இவளுக்கு ஆனையிறவுக்களம் அமைந்தபோது அதிலும் தன் திறமைகளை வெளிப் படுத்தத் தவறவில்லை. ஆ.க.வெ நடவடிக்கையில் மகளிர் படையணியின் பக்கம் மும்முரமான சண்டையில் இவள் நின்றாள். உக்கிரமான மோதல், மழை போல ரவைகள் காதை உரசுவதாக வரும் மயிரிழையில் தப்பித்த எறிகணை வீச்சுக்கள்....... பாமாவின் குழுவிலும் அனேகம் பேர் காயம்பட்டுத்தான் போனார்கள். எதிரி பின்வாங்கும் வரை பாமா மட்டும் தனித்து நின்று அடிபட்டதை நினைக்கிறோம். கடைசியாக காலிலே பலத்த காயமடைந்த ஒரு போராளியை அந்தக் கும்மிருடடு நேரத்திலே கண்டுபிடித்து பின்னுக்கு கொண்டு வந்து இவள் மூச்சுவிட்ட போது தனியோருத்ததியாக நின்று தடயங்கள் எல்லாவற்றையும் பொறுக்கியபோது.......... ஆனையிறவுச் சண்டையில் இவள் தலையில் காயப்பட்டாள். இவள் தப்பி வருவாள் என்பதில் எங்களுக்கு ஒரு துளியளவு நம்பிக்கையே இருந்தது. ஆனால் பாமாவின் திடமான உடல் அமைப்பும் உறுதியுமே அவளைத் தப்ப வைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைத்தது.

நிறையக் களங்கண்ட ஒரு போராளியாக, ஒரு குறுமபுக்காரியாக, எல்லோருக்குமே உதவுகின்ற இளகிய மனம் படைத்தவளாக நாம் அவளைக் கண்டோம்.

இப்படித்தான் ஒருநாள்
அது லெப்.கேணல் ராஜனின் வழிநடத்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி. அதில் இவள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இவளது முகாமுக்கு ஒரு சிறுமியும் சிறுவனும் சாப்பாடு கேட்டு வந்தனர். அப்போது அங்கு உணவேதும் இருக்கவில்லை. இதை அவதானித்த இவள், எல்லோரிடமும் இருக்கும் காசு எல்லாவற்iயும் சேர்க்க ருபா வந்தது. அதை அவளிடம் கொடுக்கச் சென்றபோது, அச்சிறுமியிடம் உங்களது பெயர் என்ன ? என்று கேட்க, அப்பிள்ளை வாய்திக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவள் ஏன் என்று விசாரித்தாள். விமானக் குண்டுவீச்சின்போது சன்னமொன்று தாடைக்குள் தாக்கியதால் வாய்திறக்க முடியாது என்ற விபரத்தை அந்தச் சிறுமி சைகை மூலம் கூற, இவளது கண்கள் குளமாகின.

அந்தக் காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு இந்தச் சின்னப் பிள்ளை என்ன பாவம் செய்தது.? இதுக்கு இவங்களிற்கு முறையான பாடம் படிப்பிக்கவேணும் என்று சொல்லிய போது இவளது குரல் தழுதழுத்தது. அடிக்கடி இநதக் க~;டமெல்லாம் எங்களொட முடிஞ்சிட வேணும். எங்கட சின்னனுகள் அனுபவிக்க கூடாது. அதுகள் சந்தோசமா தங்கட தாய் தகப்பனோட வாழானும் என்று கூறி அவள் கண்கள் கலங்கி தவித்ததை நினைக்கும் போது...........

இன்று படைத்துறைக் கல்லுரியில் வோக்கி பற்றிய வகுப்பு, புதிய ரகங்கள், புதிய தொழிற்பாடுபாடுகள் நுட்பமாக ஆராய்ந்து விளக்கப்பட்டது. இறுதியாக விரிவுரையாளர் இந்த ( Ci 25 ) வோக்கி புதிசு. இதன்ரை தொழிற்பாட்டை நான் உங்களுக்கு சொல்லித்தரமாட்டன். நீங்கள்தான் இதை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேணும். குறிப்பிட்ட கால அவகாசம் தருவன் என்று கூறி முடித்த போது பாமா அதோடு முழு மூச்சாய் அதனோடு ஒன்றி அதன் தொழிற்பாட்டை அறிவதில் நேரங்காலம் இல்லாது கண்ணாய் இருந்ததை இப்போது நினைத்தாலும்.................

அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாள். அதன் தொழிற்பாட்டை முதலில் கண்டு பிடித்து விளங்கப்படுத்தினாள். அப்போது எல்லாப் போராளிகள் மத்தியிலும் இவளின் திறமை வெளிப்பட்டது. இவளின் விடாமுயற்சியை நாம் எங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து போனோம்.

சதுரங்கம் விளையாடுவது இவளுக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு. நுட்பமாகவும் திறமையாகவும் அவன் விளையாடுவது யாவரையும் வியக்கவைக்கும். பார்ப்பவரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் போல நினைக்கத் தூண்டும். அவளின் இராசாவும் இராணியும் தோற்றதாக வரலாறு இல்லை. அந்தளவுக்கு எதிரே விளையாடுபவரை விழுத்துவதில் குறியாக இருப்பாள். அவளின் இன்னொரு விருப்பமான விளையாட்டு கரப்பந்தாட்டம். மாலை நேரத்தில் அவள் மைதானத்தில் விளையாட வந்துவிட்டாள் என்றால், மைதானம் கலகலத்துப்போகும். தள்ளி எட்டி ஓடி ஓடி அடிப்பது அவளுக்கொரு கலையாகத்தான் தெரிந்தது.

1992.03.01 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அத்திவாமிட்டது. அன்று கடற்புலிகள் மகளிர் அணி தோற்றம் பெற்றது. எங்கள் தலைவரின் கனவுகளுக்கு அபார நம்பிக்கை ஊட்டும்படியாக கடற்புலிகளின் வளர்ச்சியில் பாமா வகித்த பங்கு அளப்பரியது.

1992ம் ஆண்டின் பிற்பகுதியில் பாமா தன்னைக் கடற்புலிகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்ப்பதில் அவள் தீவிர அக்கறை செலுத்தினாள். சகபோராளிகளுக்கு அணிநடை பழக்குவதிலிருந்து முக்கியமான வகுப்புக்களை எடுப்பது வரை முக்கியமாகப் பங்கேற்றாள். தலைமையேற்று நடத்தினாள்.

கிளாலில் மக்கள் பாதுகாப்புகாக எம்மால் நடத்தப்படும் பாதுகாப்புப் பணியில் இவளுடன் ஒரு குழு பங்களித்துக் கொண்டிருந்தது. கிளாலிக் கடலில் கொட்டும் பனியிலும், மழையிலும் ஊசியாகக் குத்தும் உப்புக் காற்றின் மத்தியிலும் அவள் விடிய விடிய காத்திருந்த காலங்களை நினைக்கின்றோம். தூரத்ததே புள்ளியாய் விசைப்படகுகள் தெரியும். கடற்பரப்பில் மக்களின் படகுகள் ஆடிச் செல்லும். நெஞ்சு நீரற்று வரண்டு போய் கண்கள் பீதியாய் வழிய அவலப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய கடற் சண்டைகளில் பாமா பங்கேற்றதை நினைக்கிறோம். 'நீ வீட்டில் மிகுந்த பிடிவாதக்காரியாய் இருந்தாயாமே? நினைத்ததைச் செய்து முடித்து நினைத்ததை வாங்கித் தரும்படி அந்தப் பிடிவாதம்தான் கடலிலும் உன்னைச் சாதிக்க வைத்ததோ....

வோட்டர் ஜேட்டை ஏன் நீங்கள் எடுக்கவில்லை? என்று பாமாவின் மாமா கேட்ட பொழுது மாமா அதைக் கொண்டு வந்து விட்டுதான் உங்களுடன் கதைப்பேன். என்று கூறினாளாம். இதைக் கண்கலங்கியவாறு மாமா கூறினார்.நிதை;ததைச் சாதித்து முடிக்கும் அந்தக் குணம் பாமாவுடன் கூடப்பிறந்தது. என்பதை நாம் பல சந்தர்பங்களில் கண்டோம்.

இத்தகைய நினைத்ததைச் சாதிக்கும் பண்புதான் சாவின் இறுதிக்கணங்களிலும் அவளை இறுகப்பற்றியிருந்து. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் மகளிர்படையணி முக்கிய இடம்பெற்றிருந்தது. இந்தச் சமரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் நாகதேவன் துறையில் கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஒரு படகுப் பொறுப்பாளராக பாமா அனுப்பப்பட்டாள். சண்டைக்குத் தனது படகைத் தயார் படுத்திக் கொண்டிருந்த பாமா கரையில் நின்ற போராளிகளிடம் ஆளை ஆள் தெரியாத இரளில், நம்பிக்தை தொனிக்க, இந்தச் சண்டையிலே நாங்கள் வோட்டர் ஜெட் ஒண்டைக் கொண்டு வருவோம். என்று சொல்லிவிட்டுப் போனாள். சொன்னபடி நாகதேவன் படைத்தளத்தை தகர்த்துவிட்டு ஒரு நீருந்து விசைப்படகோடு முகமெல்லாம் சிரிப்பாக வெற்றிப் பூரிப்போடு கரைக்கு வந்தாள்.

அதிகாலை திரும்பவும் அவளை வருமாறு வொக்கி கூப்பிட்டது. எல்லா ஆயுதங்களுடனும் அவளது படகு ஒரு குருவியைப் போல புறப்பட்டுப் புள்ளியாய்ப் போனது. ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தென்பட்டது. வழமைக்கு மாறாக ஏதையோ கூற நினைப்பது போல அவளது கையசைப்பு அந்த இருளில் மங்கலாகத் தெரிந்தது. காற்றைக் கிழித்தபடி ஓயாத ரவைகள். காதை உரசுவதான அவற்றின் சத்தங்கள். அவைகளின் மத்தியில் அவளது படகு தூரத்தே மறைவதப் பாhத்துக் கொண்டிருந்தோம். கடலலைகள் ஆர்த்தெழுந்து படகை மறைத்தன. நிலவை விழுங்கிய வானத்தில் ஒளிப்பொட்டாய் விளங்கிய நட்சத்திரங்கள் வனம் அமைதியாகத்தான் இருந்தது. கனதியான குண்டுச் சத்தங்கள் கண்ணிமைக்கும் இடைவெளியில் அதற்கும் இடைவிடாத கணத்தளிகளில் ஓசைகள் கேட்டு கொண்டே இருந்தன. பாமா... பாமா வோக்கி கூப்பிட்டது. அவசரமாக தொடர் எடுக்க முயன்று தோற்றுப் போய் ............

ஒரு ரவை அவளது காலை ஆழமாக பிய்த்துச் சென்றது. பீறிட்ட இரத்தக்குளியலில் பாமா வீழ்ந்த போது........... மீண்டும் மங்கலான குரலில் அவள் கட்டளை பிறப்பித்துக் கொண்டுதான் இருந்தாள். மெல்ல மெல்ல குரல் மங்கி, துடிப்படங்கி............

காலிலைதான் காயம் என்று....... பிரச்சனை இல்லை என்ற எங்கள் எல்லலோரினதும் நம்பிக்கைகளை பொய்யாக்கிக் கொண்டு மெல்ல மௌனித்துப் போனாள். அந்தப் பிடிவாதக்காரி உப்புக்கரிக்கும் கடனீரேரியோடு கலந்து போனாள். கிளாலிக் கடல் உதிரத்தில் தோய்ந்தபடி மீண்டும் மீண்டும் பொங்கியேழுந்தது.

ஆயிரமாயிரம் மாவீரர்களோடு எங்கள் பாமா விடுதலையின் பெருநெருப்பாய்ச் சுவாசித்தபடி...... வெற்றியின் வேராய் உறங்கட்டும் அமைத்தியாய்.

மேஜர் தங்கவேல்

ராஜேந்திரம் - முருங்கன்

1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர்.

இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்தது. இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் 'மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்" என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்னு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான்.

இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு இவன் நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த்தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் பொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான்.

அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார். இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் இராணுவத்திற்கு தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார். இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளைக்கண்டு பொறுப்பாளர்களின் பாலாட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேல் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் கான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம்தான் ப10நகரி தவளைத்தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான்..

பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரன்களுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின்; மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத்தளபதி அனுமதிக்கின்றார்.

அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. இத் தாக்குதலில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்ப10ண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான்.

இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத சோகம் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. 'கலோ தங்கேஸ்" தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். 'அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்" என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறையடித்தவாறு எதிரிமீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்;ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் நேசித்த காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான்.

தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான்.

எழுதியவர். போராளி சு.கீரன்.