Wednesday, May 11, 2005

லெப்.கேணல் மல்லி - அமுதன்

சின்னத்தம்பி பத்மநாதன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி


லெப்.கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எனும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன.1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான்.1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற மூயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவிவரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

Saturday, May 07, 2005

லெப் கேணல் அமுதசுரபி

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா
சின்னப்பு நந்தினி
யாழ்பாணம்.
26-10-2001
கடற்புலிகளின் மகளீர் படையணித் துணைத் தளபதி

 தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத் தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப் பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் தாக்குதலை நடாத்தத் தொடங்கினோம். முறையான போடுää ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டுää பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூடää போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடா நாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர 'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும்ää சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டாளர்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்ணிமை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார் படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால்ää அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப் பெடுத்து திறமையாகச் செய்வார்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு விழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணித்தவாறு.

களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்டு அசைய மறுக்க, படகைக் கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப் பேச்சின்றி எம்மை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர எதிரிப் படகு, வந்து எமது படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்து வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப் படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது.

அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய்,ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

Thursday, May 05, 2005

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.

மனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.

கூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்கும் éமிக்குமாய் குதிப்பு நடக்கும். பணிக்கப்பாலும் பறப்பு நடக்கும்.

நிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே 'சத்ஜெய" களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில்(1997) 'ஜெயசிக்குறு" ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்பயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக்களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.

ஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து 'இடனறிந்து" துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.

அத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.

திவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித்தலைவியாய்வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம்! உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி விலக்கல்ல.

மருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.

25.05.2000 'சட்" சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம்! ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள். 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்"

'தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்" என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.

'நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்."

புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.

அகநிலா
நன்றி - எரிமலை Feb-2005

Sunday, May 01, 2005

லெப்டினன்ட் கேணல் ஜீவன்

பிள்ளையான் சந்திரமோகன்
கதிரவெளி, மட்டக்களப்பு.
மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி


கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.

கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.
#####
அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி.

இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப் படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்ää அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாறää சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்துää பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும்ää சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

87இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."

சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.

"ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்."

இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதிää தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"

அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.

தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."

புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.

"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"

இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.

"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்."

இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போலää பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.
#####
ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம்.

பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

- இராசமைந்தன் -

Saturday, April 30, 2005

லெப்டினன்ட் கேணல் மனோஜ்

பாலசிங்கம் வசந்தகுமார்
உப்பாறு, திருகோணமலை.
5.2.1971 - 11.12.2001

பாலத்தோப்பூர் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு

தலைநகர் உளற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே உப்பாற்று மண்ணை காப்பதற்கு மட்டுமல்லாமல், தமிழீழ மண்ணை பாதுகாப்பதற்க்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி.
தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் இவனோ தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் தமிழினத்தை காக்கப் புறப்பட்டான்.

எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்ச்சிகளை தன்சக போராளிகளுடன் மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணாதிசயங்களும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும்.

குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப்பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற வரிவிலக்கணத்தை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர்.

எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இந்த புண்ணிய இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டு பிடிக்க வருடக் கணக்காயின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டு பிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார்.

மற்றும் எதிரியுடன் சண்டை செய்வது என்றால் பூனைக்கு கொண்டாட்டம் எலிக்கு மரணம் போல் அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது.அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்ச்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர்.

ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிரு;தது.

மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான சிங்கள இராணுத்தின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 வருடங்களாகிவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை உதாசீனம் செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார்.

அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை தழுவிக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரண்ணாவிடம் இருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது.

இவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை யாழ்வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் பொலிஸ் நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் பொலிஸ் நிலையதாக்குதல், கந்தளாய் கடவாணை றோட் அம்புஸ் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித்தாக்குதல், மூதூர் பாலத்தோப்பூர் இராணுவப் புலனாய்வுப்பிரிவு முகாமே இறுதிமுகாமாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்ச்சி நெறிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார்.

நள்ளிரவில் தொடங்கிய யுத்தத்தின் சத்தங்களே எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று.

ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சு10ரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை.

வீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்த சிங்கம் 11.12.2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு துப்பாக்கி முனையில் தன் உயிரை நீத்து ஈழமண்ணை முத்தமிட்டு மூன்று போராளிகளுடன் ஓர் இமயமலை தரை சாய்ந்தது. அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள்.

உங்கள் ஞாபகமாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் "லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம்.

செல்வி ஜீவி
தலைநகர் மகளீர் படையணி


நன்றி: பாலசிங்கம் கமலநாதன்(லெப்.கேணல் மனோஜின் சகோதரன்)