Tuesday, June 02, 2020

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்

திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்) அவர்கள், தீட்சண்யம் நூலுக்கு எழுதிய முன்னுரை

கவிஞர் தீட்சண்யன் எனது நெருங்கிய நண்பர். பிறேம் மாஸ்ரர் என்று அறியப்படுகின்ற அந்த இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை அறிந்தவன் என்ற தகுதியில் இந்த தீட்சண்யத்துக்கான முன்னுரையை எழுத விளைகிறேன்.

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின் மகன். அவரது மும்மொழிப் புலமை விடுதலைக்கு அவர் ஆக்கபூர்வமான பணியாற்ற அவருக்குத் துணை நின்றது. அவரோடு தொடர்பு பட்டவர்களுக்கு மட்டுமே அவரது பணிகள் தெரியும். தனது பணிகளின் நெருக்கடிகளிற்கு இடையில், தனது கால் இழப்பின் பாதிப்பின் மத்தியிலும் அந்த அற்புதமான கவிஞன் பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் என்று சொல்கின்ற அளவுக்கு ஆழமான கவிதைகள் ஊற்றெடுக்கும்.

தனது அங்கவீனத்தை எண்ணி நொந்து கொள்ளும் சில மாலைப்பொழுதுகளில் - அந்த நெஞ்சத்தின் வேதனை என்னையும் பாதித்ததுண்டு. அந்தப் பொழுதுகளில் அந்தக் கவிஞன் - ஒரு குழந்தையைப் போல தேம்பியதுண்டு. எனினும் மறுகணமே தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ´மீண்டும் தொடங்கும் மிடுக்கு´ அவனிடம் இருந்த படியால்தான் காலத்தால் அழியாத கவிதைகளையும் விடுதலைப் போருக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் அவனால் வழங்க முடிந்தது.

´தீட்சண்யம்´ என்ற இந்த நூலில் தீட்சண்யன் சிங்களத்தின் எறிகணை வீச்சுக்கு காலை இழக்க முன்னும் பின்னும் எழுதிய கவிதைகள் உள்ளன. ´அன்னைக்கோர் கடிதம்´ என்ற கவிதை தீட்சண்யனின் சோகத்தை எங்கள் இதயங்களிலும் ஊடுருவ வைக்கிறது.

கொள்ளிக்கும் கொடுப்பனவு இல்லாமற் போய் விட்ட
´ஷெல்`லின் பாற்பட்ட வெறும் ஊனனாகி விட்டேனே
என்ற வரிகள் அவரது துயரத்தை கோடிட்டுக் காட்டுகின்றன.

தீட்சண்யனின் ´எங்கே போகிறோம்...?` என்ற கவிதை அன்றைய வன்னியின் அவல நிலையை ஒவ்வொரு வன்னித்தமிழனும் சொல்ல நினைத்து முடியாமல் போய் விட்ட வார்த்தைகளை மிக அழகாகச் செப்புகிறது.
குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி
குடும்பக் காட்டுடன் கியூவில் நிற்கிறோம்
உண்மையில் நாம் எங்கே போகிறோம்...?
என்று கேட்கின்ற தீட்சண்யனின் கேள்வி யதார்த்தமானது.

´போராட்டமே வாழ்வாக..´ என்ற கவிதையில் பெண்ணுக்கு அவர் விடுக்கும் அழைப்பு பாரதியின் பரம்பரை ஈழத்திலும் தொடர்கிறது என்பதை எடுத்தியம்புகிறது.
குனிந்து நடந்து
குரல் வளையது நலிந்து
நின்றது போதும்
நிமிர்ந்து தோளில் போர்க்கலனைச்
சுமந்து வந்திடு தோழி!
என்று அவர் விடுக்கும் அழைப்பு அவரின் பெண்கள் தொடர்பான கருத்தோட்டத்திற்கு சான்று பகர்கின்றது.

´திரும்புங்கள்.. வாருங்கள்.. ஏந்துங்கள்..´ என்ற கவிதை இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலப்பகுதியில் எழுதப்பட்டது. அதில் கவிஞர் சொல்கிறார்
...சொந்த மண்ணிலே வீதியிலே
எங்கள் காணிகள் மனைகளில்
மனைவிகளில் கூடவா
மாற்றானின் விரல்கள்..?
எவ்வளவு நாசூக்காக எம்மீது திணிக்கப்பட்ட அடக்கு முறை சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

´கரும்புலிகள்´ என்ற கவிதையொன்றில்
முகம் தெரியாமலே மறைந்து போன இவர்கள்
சில சமயங்களில்
சுவரொட்டிகளிலும் கூடத் தலை காட்டுவதில்லை...
என்ற வரிகள் எவ்வளவு தூரம் ஆழமானவை..!

கவிஞர் தீட்சண்யனின் கவிதைகள் அர்த்தம் நிறைந்தவை மட்டுமல்ல. சந்தம் நிறைந்தவையும் கூட. ´இந்த நூற்றாண்டில் இவன் போல் யார் உளர்´ என்ற கவிதையில்
உடலைக் கருக்கியுன் குடலைச் சுருக்கி நீ
கடலைப் பிளந்திடும் தியாகப் போர் தொடுத்தாய்
விடலைப் பருவத்து விருப்புகளைத் துறந்தாய்
குடலைப் பருவத்தில் குலத்துக்காய் மடிந்தாய்...
என்ற வரிகள் இதற்குச் சான்று பகர்வன.

புரட்சிக் கனலாக சுடரும் இவன் மார்கழிப் பனியாக குளிரும் கவிதைகளையும் எழுதுவதில் வல்லவன். ´ரசனை´, ´லயம்´ என்ற கவிதைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.

இறுதியாக...
இங்கே தயவு செய்து மலர் போட வேண்டாம்
தமிழீழத்துக்கு கொஞ்சம் உரமேற்றுங்கள்...
என்ற வேண்டுகோளுடன் தீட்சண்யனின் பேனா மௌனித்து விட்டது. என்றாலும் அவன் கவிதைகள் ஊடாக காலமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதை ´தீட்சண்யம்´ உங்களுக்கு உணர்த்தும்.

- திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்)
வற்றாப்பளை