Sunday, November 23, 2003

லெப்டினன்ட் சங்கர்



ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.
அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..


ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.
சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.
தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

நன்றி - எரிமலை

Wednesday, November 19, 2003

கரும்புலி லெப்.கேணல் போர்க்



வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. "நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

அந்தக் குரலில் உறுதி தெரிந்தது. "போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்". தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் "1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, "நான் புறப்படுறன். இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது" என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது. பிறகு சில மணி நேரத்தில்"முகாம் கைப்பற்றப்பட்டது" என்றார்.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை - அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

"தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?" 'ஏன் சாகப் போறியளோ' பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி "தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன"

அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். "அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை" போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, "அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு" என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

சிறிது நேரத்தின் பின்
"தம்பி சாரத்தையும் ரீசேர்ட்டையும் விட்டுட்டுப் போட்டானணை" என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.
"பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். "தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது, பொட்டு வைக்கச் சொன்னது, உடுப்புகளை விட்டிட்டுப் போனது... ஏனெண்டு விளங்குது" போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழுதழுத்தது.

நன்றி - எரிமலை

Tuesday, November 11, 2003

கப்டன் மயூரன்


பாலசபாபதி.தியாகராஜா ஆத்தியடி பருத்தித்துறை
அன்னை மடியில் - 1.11.1970, மண்ணின் மடியில் - 11.11.1993

கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.


அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.
பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.

அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.

இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.

மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.
திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.

அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா...யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.


இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ...? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகிவிட்டான்.

மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்... விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
-தீட்சண்யன்..

மயூரனின் நண்பர்களின் நினைவில்...
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே.........

..நண்பர்கள்.......

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்)கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.

Tuesday, November 04, 2003

மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவை
யான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982-ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் -களத்தில்- என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

~1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்@ர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுடுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

நன்றி: விடுதலைப் புலிகள்