Saturday, May 01, 2004

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ்


பரதரராஜன் தியாகராஜா
ஆத்தியடி, பருத்தித்துறை
12.9.1969 - 1.5.1989


நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!

என்றான். அவன் தான் மொறிஸ்.

1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.

நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.

சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.

பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு. ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக் கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள்.

1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.
தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு
தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது ஆக்கிரமிப்புப் படை.
மொறிஸோ இந்தியன் ஆமியின் கண்ணெதிரில் அகபபட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான்.

ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகபபடாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகபடுபவன் அல்ல. ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைச்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான். அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர்.

உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர். இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.

இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.

வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ். நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான்.

ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கமுன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.

அன்று----1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை.
------------------------------------------------------------------------------------------------------------------
மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.
சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்:.அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.

500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.

சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.

தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன்
நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே "நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா" என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர். மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.

மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.
துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ். பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.

மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது.
மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!

மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான்.மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று-
பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.


Quelle - June 1993 Erimalai