Tuesday, November 22, 2005

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

வீரமரணம் - 11.04.2000

ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை... தன்தாயை நேசித்தது போலவே... தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்.....

தாய்:- ‘என்ரபிள்ளை... என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது... இப்ப.... இப்ப... அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்... என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு...

மகன்:- ‘அம்மா....... என்னை எங்கையும் தேடவேண்டாம்... நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.........’

குரல்:- அவன் தன்னுடையதும்...தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டுகண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.

அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்...அவன் மென்மையாய்... புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது... தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட....... தேசியத்தலைவரையும்......... போராளிகளையும்........ மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ......... தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்...

‘தேசத்தைச் செதுக்கியவர்களே........
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச்
செதுக்குகின்றோம்.
செதுக்கப்படாமலும் இன்னும் சிலர்
வெளித்தெரியாமலும்... எங்கள் மனதில் மட்டும்.
உண்ணாமல் பசிகிடந்து... உறங்காமல் விழித்திருந்து
கால்வலிக்க காடுதாண்டி
கைகள்வலிக்க கடல் தாண்டி
ஈழம் வேண்டிடப்போனீர்... நாம்...
இதயம் விம்மிட நிற்கின்றோம்...
என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்....

தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்துகொண்ட அறிவுக்குமரன், தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை, கௌரவமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்.

அவன் முதலில் கந்தகப்பொதிசுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனைபண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில், 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.

அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறானபோது, இவன்மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.

1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்... ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க.... அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவதுபோல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்... அறிவுறுத்தலோடும்... ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.

அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்துதான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத்தளத்தையும்.... எதிரியின் ஆ.ஐ.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும், தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.

மீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொருகளமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறது, எதிரி கடுமையான எதிர்ப்புக்காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம்மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.

கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.

அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டுவந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை. எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர்பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்கமுடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.

இப்போது தாக்குதலுக்கு தலைமைதாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். "நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ" அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப்பார்க்கிறான். "நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்லவேணும். அது, இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்"

சிறிது நேரத்தில், அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே, அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு, எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியேவந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்.

இளமையை இதமான உணர்வுகளை
இனியசுகங்களை ஒதுக்கியவர்களே....
தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள்
பெயரைச்செதுக்குகின்றோம்...
செதுக்கப்படாமலும்... இன்னும்சிலர்
வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’

அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்று, ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்.... வேவுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது... கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்... காயம் மாறமுன்பு... மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்...

10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்லவேண்டும்... அங்கும் அவனது கடமைகள் இருந்தன... அன்று - முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க... கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.

திருமலையில்... அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.... இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும், கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்... அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு... அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது... அவனுக்குள் ஆனந்தம்... மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்... அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்... அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்.

11.04.2000 அன்று.... கடலிலே படகு அறிவுக்குமரனையும், துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக்கொண்டு விரைகிறது... அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன..

(உயிர்கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்... பாடல்வரிகள் ஓய...)

கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது... அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்... அறிவுக்குமரனோடு... துணைப்படைவீரன் ஜோன்சனும், அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்... அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்.... கவிதைகளை, பாடல்களை, சம்பவங்களை புலிகளின்குரல் நேயர்களுக்காக எழுதினான்... தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும், சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின.

அறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன.

சி. கண்ணம்மா.

Friday, November 18, 2005

கடற்கரும்புலி மேஜர் சந்தனா

வீரமரணம் - 20.06.2000

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

"அடிக்கடி வீட்டை வா மோனை" என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் "கிட்டடியில வந்திடுவன் அம்மா" அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா. தனது இனத்தின் விடுதலை வேண்டிப் போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீராங்கனைகளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான விசேட பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள். எதிரியின் அதிஸ்ரம், அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் அவன் தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் "என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்" என்று.

தன் நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிக் கணங்கள் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள். அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு "நான் திரும்பி வரமாட்டன்" இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் "திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா" என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.

26- 06- 2000 அன்று
யாழ் குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது 'உகண' கப்பல். கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின. கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்தது 'உகண' கப்பல். பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே லாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற் றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானேந்திரன். மேஜர் ஆரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய 5 காவிய நாயகர்களும் கடலில் சங்கமமாகினர்.

Monday, November 07, 2005

கேணல் ராயு

அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.

தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.

விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.

போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார். இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.