மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை
வீரஜனனம: 14-05-1966 - வீரமரணம் 14-02-1987
போராட்டத்தின் நிழலில்
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
கண்டாவளையில் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.
1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.
அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.
தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்@ர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.
தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.
தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.
மூலம் - எரிமலை