Friday, July 22, 2005

2ம் லெப். பூபாலினி.

ஆனந்தகுமாரி.கோபாலபிள்ளை
வேலணை
வீரமரணம் - 29.08.1998
ஓயாத அலைகள் 02 இல் வீரமரணம்

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். போராட்ட பணியே ஆழமான அர்ப்பணிப்பினை வேண்டிநிற்கும் பணி. அதனுள்ளும் அவள் ஆழமாய் சென்று அர்பணத்துள் அர்ப்பணம் செய்வாள்.

எதனையாவது செய்து முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வாளானால் அதனைச் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை நடக்கும்.

அவளின் ஒழுங்கிற்கு ஒரு உதாரணம்: நடைபெற்ற ஓட்டப் போட்டி ஒன்றில் பூபாலினியும் கலந்துகொண்டாள். ஆள் கட்டை அதிகம் ஓடமாட்டாள். அகலக்கால் வைத்தால் முடியாதுதானே! ஆனாலும் கலந்துகொண்டாள் தானும் கலந்து கொள்வதாய். அவளுக்குத் தெரியும் முதல் 3 இடங்களிற்குள்ளும் இடம் கிடைக்காது என்று. ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றே கலந்துகொண்டாள்.

‘எதுவென்றிலும் கலந்து கொள்ளாதிருப்பதனை விடவும் கலந்து கடை நிலையை அடைந்தாக்கூட அதுகாரியம்’ என்ற அவள் நினைத்திருக்க வேண்டும்.

முதல் மூன்று நிலைகளுக்குள்ளும் வரமுடியாதென்று கணக்கிட்டுக் கொண்டோர் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்னராகவே நின்று விட இவள் மட்டும் போட்டிக்குரிய அத்தனை ‘ரவுண்டு’ களையும் ஓடி முடித்த பின்பே ஓய்வெடுத்தாள்.

“ஏன்ரியப்பா நின்றிருக்கலாமே! ஏன் உந்த வீண் அலைச்சல்” என்றபோது அவள் கூறினாள்:

“எதுவொன்றிலும் கலந்துகொண்டாலும் அது அது முடியும் வரையில் அது எத்தனையாவதாக வருவதானாலும் சரி ஓடிமுடிக்க வேண்டும்” என்று. அதுதான் ஒழுங்குமுறை அது தான் அவள்.

பூபாலினி, அவள் தனக்கென தனித்துவமான சில குணவியல்புகளைக் கொண்டிருந்தாள். அவளது அக் குணவியல்புகளே அவளை ‘பரோபகாரி’, ‘அம்மா’ ‘களஞ்சியம்’ ‘அழுத்தம்’ தாங்கி ‘விசுவாசம்’, ‘உபதேசி’ என அவளைப் பட்டப்பெயர்களால் அலங்கரித்துக் கொண்டன.

பரோபகாரி, யாரிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்காவள். ஓய்வாய் இருப்பது அவளுக்க ஒத்தவராது. எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும்.

உணவுப் பண்டங்கள் வாய்ப்பாய்க் கிடைக்கிற போது பதுக்கிப் பத்திரப்படுத்தி, வேண்டும்போது பகிர்ந்தளிப்பாள். அதிகமாக இருப்பின் மீளவும் அவை பதுக்கப்படும். வேண்டும் போது வெளிப்படும். இதற்காய் அவளுக்குக் கிடைத்த மகுடங்கள் தான், ‘பரோபகாரி’, ‘களஞ்சியம்’, ‘அம்மா’,

சகதோழிகள் நோய்வாய்ப்படுகின்ற போதும் அவர்கள் ஏதேனும் பற்றாக்குறைகளுக்கு உட்படுகின்ற போதும் அவளிடம் உள்ளவை அவர்களுடையதாகும். சலிப்பின்றி, சங்கடமின்றி பராமரிப்புத் தொடரும். அழுத்தங்கள் தாங்கிக் கொள்ளும் மனோபவத்தினை அவள் இயல்பாய்க் கொண்டிருந்தாள். அவை அத்தனையாலும் தான் அவள் ‘விசுவாசி’ என்றும் அழைக்கப்பட்டாள்.

அத்தனை விசுவாசம் கொண்ட விசுவாசி ஒருமுறை தவறியும் போனாள் தான்.

“ஒருவன் விழாமல் நடந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதும் எழுந்து நடந்தான் என்பதே பெருமை” என்ற ஆண்றோர் வரியோ.

“விழுமின் எழுமின் கருதி கருமம் கைகூடும் வரை உழையின்” என்ற விவேகானந்தர் வரிகளை மனங்கொண்டாலோ என்னமோ அவள் தன் தவறை உணர்ந்துகொண்டாள்.

எந்தவொரு அமைப்பிலும் ‘இரகசியக் கசிவு’ என்பது தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறுமாயின் அது பெரும் விளைவகளை உண்டுபண்ண வல்லது. அவள் உண்மையை உணர்ந்து கொண்டாள்.

போர்க்காளப் பணித்தேர்வு தனக்கு வேண்டியதே என்பதனை உள்ளிருத்திக் கொண்டாள்.

10.06.1995 இல் போராட்டவாழ்வில் இணைந்து பயிற்சி முடித்து சூரியக்கதிர் - 02 இல் காவும் குழுவாய் போர்கள அனுபவமும் பெற்றிருந்த அவளிடம் இயல்பாயிருந்த பொறுப்புணர்வும், செயல்திறத் தேர்ச்சியும் அவள் கற்றுக் கொண்டிந்த தட்டெழுத்து நெறியும்தான் அவளை அலுவலகப் பணிக்காய் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது உண்மை. செயல்திறனால் உழைமின் உழைமின் என்று உழைத்தும் உண்மை.

விழுமின் எழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்ற வரிக்காய் விழுந்தவள் அல்ல என்றாலும் விழுந்தாள் என்பது அதுபோன்றே என்பதனைவிட அதனிலும் வேகமாய் எழுந்தாள் என்பதும் அதேபோன்றதான உண்மையே.

விழுதலில் சினந்து ஓர்மம் உட்புகுந்து அவள் வேகம் விருட்சமாகிக் கொண்டது.

ஜெயசிக்குறுவில் தானும் ஜெயிப்பதாய் கங்கணம் கட்டிக்கொண்டாள் போலும் அவளின் பொறுமையும் நிதானமும் வேவுப் பணிக்காய்த் தேர்வாக்கிகொண்டது. குறுகிய காலத்திலேயே அவள் அவ் அணியின் 2ம் அணித்தலைவியானாள்.

பண்டாரிகுளத்திலிருந்த புளியங்குளம், புதூர், விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்,கிளிநொச்சி, மாங்குளம், ஓலுமடு அம்பகாமம், ஓயாத அலைகள் 02 என அவள் பணி பரந்து விரிந்து கொண்டது. அது பனிச்சங்குளப் பகுதியில் வைத்து ‘எல்.எம்.ஜி’ கனரகப் பயிற்சி வழங்கி மாங்குளப் பகுதியில் ‘எல்.எம். ஜி’ கனரக ‘லோட்’ராக்கிக் கொண்டது.

ஓயாத அலைகள் 02 ற்கு அவள் ‘எல்.எம்.ஜி’ கொண்டே களமிறங்கினாள்.

ஓயாத அலைகள் 02 களமிறக்கம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் வளர்ந்த வாழ்ந்த இடமது.

அவள் பருவமறிந்ததிலிருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தாள். பிறந்தது வேலணையில் என்றாலும் அவள் வாழ்வு அவ்வப்போது நடந்துகொண்டிருந்த இடப்பெயர்வுகளுக்குரிய விதமாய் கணேசபுரம், பரவிப்பாஞ்சான்,வட்டக்கச்சி, கிருஸ்ணபுரம், ஆனந்தபுரம்....என்று நகர்ந்து கொண்டபோதுதான் அவள் நாலும் உணர்ந்தாள். நமக்கொருநாடு நாடாயிருக்க வேண்டுமென்று கணேசபுரத்தில் ஆரம்பித்த அவள் கல்வி வாழ்வு, கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை, கிளிநொச்சி கனிஸ்ர வித்தியாலயம் (தற்போது கிளிநொச்சி மாகா வித்தியாலயம்) வேலணை நடரலசர் வித்தியாலயம், மீளவும் கிளி-கனிஸ்ர வித்தியாலயம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என்று மாறி மாறி அலைப்புக்குள்ளானது. அந்நேரத்திலும் கூட ஒருவாறு கா.பொ.த சாதாரண தரத்தை நிறைவாக்கிக் கொண்டு தொழிற்பயிற்சியாய் தையலும், சுருக்கெழுத்தும், தட்டெழுத்தும் பயின்று கொண்டாள்.

எழுதுவினைஞையாய் சிலகாலங்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் செய்தாள்.

பணியைப் பணியாய்ச் செய்யும் தேசமதில் தான் இல்லை என்பதனை அவள் புரிந்து கொண்டபோது தேசம் இருப்பை நிலைநிறுத்தும் போராட்ட வாழ்வில் அவள் தன்னை இணைந்துக் கொண்டாள். ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணமடைந்தாள்.

திரு.திருமதி கோபாலபிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்பியான ஆனந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட 2ஆம் லெப்ரினட் பூபாலினி ஆலங்குளம் துயிலறையில் துயின்று கொண்டிருக்கிறாள். அவள் இலட்சியம் ஈடேறும் சமாதானம் சகவாழ்வு அல்லாதபோதும் அவர்கள் இலட்சிய நெருப்பு சகவாழ்வு கொடுக்கும். அவள், அவள் போன்றவர்கள் இலட்சியச் சாவால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இலட்சிய நெருப்பு இமயம் தொடும் ஈழத்தைப் பிறப்பாக்கும்.

- அகநிலா

nantri-erimalai-april-2005