Wednesday, March 21, 2007

லெப். சங்கர்


லெப். சங்கர்
(செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை)
வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். 'ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்" என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக... சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது.

அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர், வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை.... வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி 'தம்பி" என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப் பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000க்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கி உள்ளனர். இம் மாவீரர்களை எல்லாம் நினைவு கூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப் பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

வீரவேங்கை.ஆனந்

வீரவேங்கை.ஆனந்
(இராமநாதன் அருள்நாதன்-மயிலிட்டி)
வீரப்பிறப்பு 25-01-1964 வீரமரணம் 15-07-1983


தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன், உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.

நெஞ்சில் வழியும் இரத்தத்தோடு, 'என்னைச் சுடடா, சுடு' என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப், பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப் பார்க்கின்றான் ஆனந்த். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிங்களக் கூலிப்படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் ஆனந்தையும் வீழ்த்துகின்றன.

சீலனோ அந்தக் கெரில்லாப் படைத் தலைவர், அரசபடையால் வலைவீசித் தேடப் படுபவன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் சம்வபவத்தில், சீலனின் தலைமையிலே அந்தக் கெரில்லாத் தாக்குதல் நடைபெற்றது. என்பதைச் சிங்களக் கூலிப்படைகள் தெரிந்து வைத்திருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த அங்கத்தவன் - சிங்களக் கூலிகளின் கரங்களில் அந்தக் காளை பிடிபடவே முடியாது.

சீலனுக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனப்பாக்குவம் சிந்திப்பதற்கு அனுபவம் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால், இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பியிற்சி பெற்று ஏழுமாதங்கள் கூட நிரம்பாத நிலையில், இயக்க ரகசியத்தைக் காத்துக் கொள்வதற்குத் தன்னையும் சுட்டுவிடுமாறு சக வீரனைப் பணித்த ஆனந்தின் இலட்சியத் தூய்மை, நம்மைச் சிலிர்ப்படையச் செய்கிறது.

விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுதப் பாதையில் நம்பிக்கையோடும் உறுதியோடும் கால் பதித்த அந்த இளைஞன், எத்தனையோ யுத்த களங்களைக் காண ஆசைப் படிருப்பான். ஆனால் அந்தச் சாதனைகளை எல்லாம் செயலில் காட்ட அந்த வீரமகனின் சின்ன ஆயுள் இடம் கொடுக்க வில்லை. பத்தொன்பது வயதிற்குள்ளேயே ஆனந்த் சாவை அணைத்துக் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டமே.

ஆனந்திற்கு வயதை மீறிய வாட்ட சாட்டமான உடம்பு. அரும்பு மீசை, மேவித்தான் தலையிழப்பான். அடித் தொண்டையில்தான் கதைப்பான். யாரோடும் கோபிக்க மாட்டான். நண்பர்களோடு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவன். எந்த வேலையையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செய்பவன். சமையல் செய்வதிலிருந்து, கிணறு வெட்டுவது வரை அலுப்பில்லாமல் எதையும் செய்ய முன்நிற்பான்.

மெல்லிய நீலநிறத்தில் ஆடைகள் அணிவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். மயிலிட்டி மண் ஈந்த வீரமைந்தன் ஆனந்த், நீர்கொழும்பில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றான். பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்றான். க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞானம் பயின்ற ஆனந்த் அரசியலைப் பின்னாளில் வாழ்க்கையாக வரித்துக் கொண்டான்.

பாடசாலைக் காலங்களில் ஆனந்த் சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தான். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் சிறந்த கோல் காப்பாளராகப் பிரபல்யம் பெற்றிருக்கிறான். சிறந்த கிரிக்கெட் வீரனுமாவான். கராத்தேயும் கற்றிருந்தான். சகலவிதமான வாகனங்களையும் நேர்த்தியாகச் செலுத்தும் திறமை கொண்டவன்.

தனது குறுகிய ஆயுதப் பயிற்சிக் காலத்திலும் ஆயுதங்களின் நுட்பங்களை நிறையத் தெரிந்து வைத்திருந்தான். வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவனுக்குப் போதுமான இரசாயண அறிவிருந்தது. துப்பாக்கிப் பயிற்சியின் போது மிகக் குறைந்த நேரத்தில் கூடிய இலக்குகளை குறிபார்த்து அடிக்கக் கூடியவன்.

சரியாக இலக்குக் குறிவைத்து அடித்துவிட்டான் என்றால், ' ஹாய்' என்று கைகளை உயர்த்திக் குலுங்கிச் சிரிக்கும்போது, ஒரு பாடசாலை சிறுவனின் பெருமிதமே வெளிப்படும். (குறி தப்பாது சுடுகின்ற ஒரு கெரில்லா வீரனின் திறமையயை, James Bond சாகஸங்கள் என்று கொச்சையாக அர்த்தப் படுத்திக் கொண்டு நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை) பலம் மிகுந்த அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராகக் குறைந்த அளவு ஆயுதங்களுடன் தொடுக்கப்படுகின்ற கெரில்லாத் தாக்குதலின்போது, இத்தகைய திறமை வாய்ந்த கெரில்லா வீரர்கள் தனிமுக்கியம் வகிக்கின்றார்கள்.

லெப்டினன்ட் சீலன்

லெப்.சீலன்
(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)
வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983


ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.

1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.

திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை போட்டுச் செல்கின்றது.

இயல்வாணன்

மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப் போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது.

கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலவற்றை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி இடையறாது அங்கே மேற்கொண்ட முன்னேற்றங்களை எல்லாம் அவர்கள் முறியடிக்க வேண்டியிருந்தது. இலகுவான பின்னணிப் பாதைகள் இல்லாத நிலையில், போதுமானளவு ரவைகளையும் ஏனைய வெடிபொருட்களையும் பெறுவது கடினமாக இருந்தது. புலிகளின் அணிகள் தம்மிடமிருந்த மட்டுப்படுத்தப் பட்ட வளங்களைக் கொண்டே கடந்த இரண்டு நாட் சமரிலும் பல முனைகளிலும் முன்னேறிய
இராணுவத்தை முறியடித்து வெற்றி பெற்றிருந்தன. அதிகாலையில் தொடங்கிய அன்றைய சமர் மிகவும் உக்கிரமானதாக இருந்தது. வழமைக்கு மாறாக எதிரி இன்று ஆனையிறவுப் பகுதியிலிருந்து ஐந்து டாங்கிகள் சகிதம் முன்னேறினான். தற்காலிகமாக அமைக்கப் பட்டிருந்த எமது நிலைகள் இராணுவத்தின் கோரமான எறிகணை வீச்சிற் சிதைந்துக் கொண்டிருந்தன.

எதிரி மிக வேகமாக முன்னேறினான். டாங்கிகளும் கனரக வாகனங்களும் அணிவகுத்து முன்னேவர பெருந்தொகையிற் படையினர் சூழ்ந்த யுத்தக் காடாக மாறியது அந்தக்களம்.

சில மணித்தியாலங்களிலேயே கண்டி வீதியின் இருபுறமும் முன்னேறிய எதிரியால் எமது நிலைகள் ஊடறுக்கப்பட்டு விட்டன. காவலரண் வரிசையின் இரு பகுதிகளுடாக உள்ளே நுழைந்த எதிரி, இப்போது மூன்றாவது முனையான பிரதான வீதியின் வழியே உள்நுழைவதற்கு முயன்று கொண்டிருந்தான்.

அவர்கள் விட வில்லை. செக்சன் லீடர் வீரன், இயல்வாணன், வளநெஞ்சன், சேரக்குன்றன் என இன்னும் மிகச்சிலர் மட்டுமே அங்கே தனித்திருந்தனர். பின்வாங்கத் தயாரில்லாத அவர்களை எதிரி சூழத் தொடங்கினர்.

பிரதான வீதியின் அருகில் அவர்கள் இருந்தனர். தன்னிடமிருந்த ஒரேயொரு மு.இயந்திரத் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தான் இயல்வாணன். இரு புறமும் பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய எதிரியின் ஆட்பலம், டாங்கிகள் சகிதம் மனிதக் கடலென அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

அவர்களுடனான தொலைத் தொடர்புகள் இறுதியாக அற்றுப் போனவுடன் கட்டளைப் பீடம் பரபரப்பானது.அது கைவிட முடியாத ஒரு நிலை. இத்தாவிற் சமர்க்களத்தோடு மாத்திரம் தொடர்புடையதன்று. ஆனையிறவை மீட்பதற்கான தலைவரது வியூகத்தின் தந்திரோபாய முடிச்சும் அது. அங்கே அமைக்கப் பட்டிருந்த வியூகத்தின் உயிர்நாடியும் அதுதான்.

இப்போது அங்கேயிருந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர். மாற்றுத் திட்டங்கள் செயற் படுத்தப்பட்டன. மீண்டும் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப் பட்ட முயற்சி வெற்றியளிக்காமற் போனது. அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு எல்லோரையும் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், சுற்றிச் சூழ்ந்துவிட்ட எதிரிகளின் நடுவே, அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தனர்.தொடர்ந்தும் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

பிரதான வீதியால் வந்த இராணுவத்தினரை ஒவ்வொருவராய் வீழந்தனர். தொடர்ந்து வந்த கனரக வாகனம் இயல்வாணனின் மு. தாக்குதலினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதன் பின்னால் வந்த இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போதுதான் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த அவலம் நிகழ்ந்தது. அவர்களிடமிருந்த ஒரேயொரு கனரகத் துப்பாக்கி – P.மு.ஆ.P.ஆ.பு.- இயங்கு நிலை தடைப் பட்டு சுடமறுத்தது.

எல்லாத் திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்கான தடையாக அவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களிடமிருந்த துப்பாக்கியும் சுட மறுத்து விட்டது.

இராணுவம் நெருங்கி வந்துவிட இயல்வாணனுடைய தோழனொருவன் வீசிய கையெறி குண்டு வெடித்துச் சிதறியது.

எதிரி அந்தத் திகைப்பில் இருந்து மீள்வதற்குட் கிடைத்த சிறிய தொரு அவகாசத்தினுள் தன் துப்பாக்கியை சீர்படுத்த முயன்றான் இயல்வாணன். ஆனாலும் முடியவில்லை. மீண்டும் இராணுவம் அவர்களின் நிலையை நெருங்கியது.மிகவும் நெருக்கடியானதொரு நிலை. தடுப்பதற்கு வழியில்லை. இயல்வாணன் தனித்து இயங்கத் தொடங்கினான். ஒவ்வொன்றாய் ரவையேற்றினான் தனித்தனியே மீண்டும் ஆரம்பித்த சூடுகளில் இராணுவத்தினர் அவனது நிலையின் முன் விழத் தொடங்கினர்.எனினும், பெருந்தொகையில் வேகமாக முன்னேறும் இராணுவத்தை தொடர்ந்தும் அவர்களால் தடுக்க முடியவில்லை. எதிரிகள் அவர்களை நெருங்கியவாறே இருந்தனர்.

செக்சன் லீடர் வீரனுடைய தொலைத்தொடர்புச் சாதனம் ஒருவாறு தனது கட்டளைப் பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. கட்டளைப் பீடத்திற் புதியதொரு பரபரப்புத் தோன்றியது. இராணுவத்தினராற் சூழப்பட்டு விட்ட பிரதான வீதியிலிருந்து ஒலித்த வீரனுடைய குரல் கட்டளைப் பீடத்திற்கு உற்சாகமானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

„ றோமியோ, றோமியோ, இப்ப ஆமி எங்கள நெருங்கிட்டான் “

„ எங்களுக்கு ரவுன்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது. “

„ பிரச்சனையில்லை, எங்களை பார்க்காதையுங்கோ. நாங்கள் நிக்கிற இடத்திற்கு செல் அடியுங்கோ. “

யாருமே எதிர்பார்க்காத அவர்களின் உணர்வுகள் கட்டளைப் பீடத் தொலைத்தொடாபுக் கருவியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவர்கள் இன்னமும் தோற்று விடவில்லை. இன்னமும் அவர்கள் தமது நிலைகள் எதிரியிடம் செல்ல விடவில்லை. எதிரியாற் கைப்பற்றப்பட்டு விட்டதாக கருதப்பட்ட பிரதேசத்திலிருந்து அவாகள் தொடர்ந்தும் போரிடுகின்றனர்.

கட்டளைப்பீடம் மீண்டுமொரு முறியடிப்புச் சமரிற்குத் தயாராகியது.

இராணுவம் அவர்களுடைய நிலைகளினுட் புகுந்தால் வெடிக்கத் தயாரான கையெறி குண்டுகளுடன் அவர்கள் போரிட்டனர். அவை வார்த்தைகளின் விபரிப்பிற்கு அப்பாற்பட்ட போர்க்களத்தின் கொடிய கணங்கள்.

கண்களின் முன்னே, மிக அருகில், அவர்களைக் கொல்லும் வெறியுடன் வரும் எதிரிகளை எதிர்த்துத் தொடர்ந்தும் சண்டையிட்டனர். உச்சமான அவாகளின் மனத்திடம், போரிடும் ஆற்றல், இறுதிவரை வென்றுவிடத் துடிக்கும் விடுதலை உணர்வு அவர்களைத் தொடர்ந்தும் இயக்கின.

வீரனது தொலைத்தொடர்புச் சாதனம் சொல்லிய இலக்குகளை எறிகணைகள் தாக்கின. இயல்வாணனை சுட்டுக்கொன்ற இராணுவத்தினரது சடலங்கள் அவர்களது நிலைகளைச் சுற்றிக் குவியத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை எதிரியின் மூர்க்கத்தை உடைத்தன.

இத்தாவிற் களத்தை அன்று எதிரியிடமிருந்து மீட்டுத்தந்த வீரர்களை மீட்பதற்கான எமது முறியடிப்பு அணிகள் அவர்களை நெருங்கியபோது, வீரன், இயல்வாணனுடைய காவலரண்களைச் சுற்றி மட்டும் கொல்லப்பட்ட எண்பத்தைந்து இராணுவ சடலங்கள் கிடந்தன.

அன்பழகன்

அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவி விட, எம்மிடம் அடி வேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின் வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர்.

20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம்.

எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது.

எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின. முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள் மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன்னேறிக்கொணடிருந்தன.

எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற் பட்டுச்சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை.

நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள் மீதான எதிர்ப்பை காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்து விட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும ஏறிவிட்டன.

எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாக வேண்டும். எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.

எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது., ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கி விடும். எதிரியின் ஜயசிக்குறு கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற்றவை ஆகிவிடும். இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப் படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பை கொடுத்தது.

எப்படி விட முடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகி விட்டன. அவற்றை எப்படி எதிரியிடம் விட முடியும். விடுவோமாயின் முடிவு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாததாகி விடுமென்பதை எஞ்சி நின்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப் பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன். எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான்.

தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.

காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்த போது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். அவன் தன் தேசத்திற்காகச் செய்ய வேண்டியதை உணர்ந்தே இருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான் என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.

அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல். தலைவனின் சத்தியத்திற்காகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிரவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.

எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ஜயசிக்குறு சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும். புலிகளின் „ ஓயாத அலைகள் “ சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.

கப்டன் அறிவு

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.

எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம். வவுனியாவிலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்து முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப் படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கிக் தடுத்துத் தேவையான போது நகர விட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட „ கொலைப் பொறி “ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

06.06.1997, விளக்குவைத்தகுளம் முன்னரங்க நிலைகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் நின்றார்கள். அதிகாலை முதல் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சத்தம் மெல்ல மெல்ல அவர்களை நோக்கி நகர்வதாகத் தெரிந்தது

„ மச்சான், டாங்கி சத்தம் போல கிடக்குது “ அவர்களில் ஒருவன் காவலரன் ஒன்றின் மேல் ஏறி நின்று அவதானித்து விட்டுச் சொன்னான். „ இண்டைக்குத் திருவிழாப் போல இருக்கது “

அவர்கள் தங்களுக்குட் கதைத்துக் கொண்டார்கள். “ டேய் வந்தா வரட்டும். எங்கட பொசிசனைக் கடந்து போறதை ஒருக்காப் பாப்போம்! “ இப்படித்தான் எப்பவுமே அவர்கள் கதைத்துக் கொள்வார்கள். இன்றும் அதே போலவே கதைத்தவாறு காலைக் காவலுக்கான ஒழுங்குகளில் ஈடுபடத் தொடங்கினர்.

அவர்கள் எதிர்பார்த்த „ திருவிழா “ விரைவிலேயே தொடங்கி விட்டது. எதிரி ஏவிய பீரங்கிக் குண்டுகள் அவர்களின் முன்னரங்க நிலைகளைச் சுற்றி வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. இதுவரை தூரத்தே கேட்ட இயந்திரங்களின் உறுமல் ஓசை அவர்களிருந்த திசையில் நெருங்கத் தொடங்கியது. முறிந்து விழுந்த காட்டு மரங்களினூடக வெடித்துச் சிதறிய எறிகணைகளின் கந்தகப்புகை பரவிக் கொண்டிருந்தது.

அறிவு அவன்தான் காவலரண் துவாரத்தினூடாகத் தூரத்தே தெரிந்த கரிய உருவத்தை முதலில் அவதானித்தான். டாங்கி! அவனுடைய நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சண்டையின் தீவிரம் சற்றுக் கடுமையாவது தெரிந்தது. தோழர்கள் தமது துப்பாக்கிளினால் எதிரிமீது சுடத் தொடங்கினர். சண்டை உக்கிரமானது. கனரக ஆயுதங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் இல்லை. இலகு இயந்திரத் துப்பாக்கிகளாற் சுடப்பட்ட ரவைகள் வெறுமென டாங்களியிற் பட்டுத் தெறித்து விழுந்தன.

முன்னரங்கில் இருந்த எமது நிலைகள் ஒவ்வொன்றாய் எதிரியாற் சிதைக்கப்பட்டன. வீரர்கள் வீழ்ந்து கொண்டிருந்தனர். டாங்கி ஏவிய ஓர் எறிகணை அறிவினுடைய தோழர்களை வீழ்த்தியது. சிதைந்த நிலைகளிலிருந்து சென்று கொண்டிருந்த இறுதி எதிர்ப்புகளும் குறைந்து கொண்டிருந்தன.எதிரி உற்சாகமடைந்தான். வேகமாக டாங்கியை நகர்த்தினான்.

அறிவினுடைய சிதைந்த காவலரணில் வீரச் சாவடைந்திருந்த தோழர்களின் வித்துடல்களும் ரவை முடிந்துவிட்ட துப்பாக்கிளும் மட்டுமே இப்போது இருந்தன.

அந்தக் காவலரண் வரிசையில் அவன் மட்டுமே தனிததிருந்தான். எதிரியின் நகர்வைத் தடுத்தேயாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. முறியடிப்பு அணிகள் அங்கே வரும் வரை இராணுவத்தின் குறைந்த பட்சம் தாமதப் படுத்த வேண்டிய நிலையை அவன் உணர்ந்தான்.

கைவசம் இருந்த குண்டுகள் இரண்டுடன் சிதைந்த நிலையை விட்டு வெளியே வந்தான். அவனது நிலையை நோக்கி வந்த டாங்கி இப்போது மிகவும் நெருங்கி விட்டது. அறிவு எறிந்த முதலாவது குண்டு டாங்கியின் முன்னால் வெடித்துச் சிதறியது. டாங்கி அதிர்ந்து நின்றது. ஆனால் விரைவிலேயே அதன் சக்கரங்கள் மீண்டும் உருளத் தொடங்கின.

இறுதியாக அவனிடம் இருந்ததோ ஒரேயொரு கைக்குண்டு.

அவனுக்கிருந்த கடைசித் தெரிவு டாங்கியை மிக நெருங்கிக் குண்டை எறிவது, அல்லது சொற்ப கணத்தில் இடித்துச் சிதைக்கப் பட்ட இருந்த நிலையின் அருகிலிருந்து பின்வாங்கிச் செல்வது.

இறுதி முயற்சி எமது மரபுக்கேயுரிய தெரிவு. டாங்கி அவனது காவலரணை முட்டி மோத இருந்த கடைசிக் கணத்தில் தன்னிடமிருந்த கையெறிக் குண்டை வெடிக்க வைத்தான்.

தனது சாவிற்கான முடிவு அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. எனினும் அவன் கோழையாகிப் போக விரும்பவில்லை.

டாங்கியின் சக்கரங்களாற் சிதைக்கப் பட்ட அவனது வித்துடல் அவன் நேசித்த மண்மீது கிடந்தது. இறுதிவரை அவனிடம் இருந்த துணிவு வரலாற்றில் அவனை உயர்த்தி நிற்கின்றது.

போராளி சுயந்தன்

09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும.

அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குரியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது.

சண்டை தொடங்கி விட்டது. சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அவர்களுக்குரிய பாதை வழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை „ டோப்பிட்டோ “ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை அவர்களுக்குத் தெரிந்தது.

ஆம் எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளை விட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஓவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுளையா விட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக் கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூட போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க „ டோப்பிட்டோ “ வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக் கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச் சென்ற போராளி சுயந்தன் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவை பட்டு வீழ்ந்து விட்டான். எதிரி, அந்த இடத்தில் முட்கம்பிகளை வெட்டப் படாமல் இருப்பதையும் நாம் அதை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங் கொள்ள வைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்க முடியாமல் நிற்க, தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான்.

அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற் பட சுயந்தன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்க, அவன் அமைத்துத் தந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.

அவனது அணி, கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழ வேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக் கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழியமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்த அவனது வீரம்.

தலைவரவர்களின் „ எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது “ என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் „ ஜயசிக்குறுய் “ சமரில் வித்தாகிப் போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.

லெப்டினன்ட் மலரவன்

ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி.

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால், அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்க, அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான்.

சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் „ டோப்பிட்டோ “ குண்டை பொருத்த, மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய “ டோப்பிட்டோ “ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது.

துப்பாக்கிகள் சடசடக்க, எதிரி வானில் ஏவிய “ பரா “ வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீச, அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான்.

நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக “ டோப்பிட்டோ “ வோ,

பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்க, கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் „ கட்டரு “ டன் எழுந்தான்., அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன்.

துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழிய, தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன், ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவி;ட்டது.

அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான்.

„ மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ “

அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான்.

தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே.

எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் „ ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் “ தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.