Sunday, November 14, 2004

லெப்.கேணல் பாண்டியன்

செல்லத்துரை சிறிகரன்
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்

லெப்.கேணல் ஜொனி

விக்கினேஸ்வரன் விஜயகுமார்
பருத்தித்துறை
21.05.1962 - 13.03.1988

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார்.

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (16.03.06) லெப்.கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.