வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார். 1980ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செய்ற்பட ஆரம்பித்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத வேளையில், விடுதலைப் புலிகளை வேட்டையாடவென இரகசியப்பொலிசார் மோப்பமிட்டுக் கொண்டிருந்தவேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிக்க சிரமங்களுக்கிடையில் செய்தார். 1981இல் முழு நேர உறுப்பனராக இணைந்து கொண்டார். அதே ஆண்டில் இராணுவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.
1983 யூலை மாத வரலாற்றுப் புகழ் பெற்ற திருநெல்வேலித் தாக்குதல் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்தார்.
1984இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடாத்தி தமிழக மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். அதன் பின்னர் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமொன்றின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பல நூறு தீருமிக்க போராளிகளை உருவாக்கினார். தேசியத்தலைவரின் அதிவிருப்பிற்குரிய போராளியாக விளங்கிய கப்டன் லிங்கம் அவரின் உதவியாளராகவும் மெய்பாதுகாவலராகவும் விளங்கினார்.
லிங்கம் சக போராளிகள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரின் மீது அன்பு கொண்டிருந்தனர். கடமையென்று வருகின்ற வேளைகளில் கண்டிப்பானவராகிவிடுவார்.
29.04.1986 அன்று ரெலோ துரோகக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட இரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக புலிகளின் தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டார். சிறீசபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த ரெலோ முகாமிற்கு நிராயுதபாணியாகச் சென்ற கப்.லிங்கம், ரெலோ கும்பலால் கண்ணில் சுட்டு படுபாதகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் துரோகிகளால் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகின்றார்.