Tuesday, June 02, 2020

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்

திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்) அவர்கள், தீட்சண்யம் நூலுக்கு எழுதிய முன்னுரை

பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000
ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை


கவிஞர் தீட்சண்யன் எனது நெருங்கிய நண்பர். பிறேம் மாஸ்ரர் என்று அறியப்படுகின்ற அந்த இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை அறிந்தவன் என்ற தகுதியில் இந்த தீட்சண்யத்துக்கான முன்னுரையை எழுத விளைகிறேன்.

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின் மகன். அவரது மும்மொழிப் புலமை விடுதலைக்கு அவர் ஆக்கபூர்வமான பணியாற்ற அவருக்குத் துணை நின்றது. அவரோடு தொடர்பு பட்டவர்களுக்கு மட்டுமே அவரது பணிகள் தெரியும். தனது பணிகளின் நெருக்கடிகளிற்கு இடையில், தனது கால் இழப்பின் பாதிப்பின் மத்தியிலும் அந்த அற்புதமான கவிஞன் பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் என்று சொல்கின்ற அளவுக்கு ஆழமான கவிதைகள் ஊற்றெடுக்கும்.

தனது அங்கவீனத்தை எண்ணி நொந்து கொள்ளும் சில மாலைப்பொழுதுகளில் - அந்த நெஞ்சத்தின் வேதனை என்னையும் பாதித்ததுண்டு. அந்தப் பொழுதுகளில் அந்தக் கவிஞன் - ஒரு குழந்தையைப் போல தேம்பியதுண்டு. எனினும் மறுகணமே தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ´மீண்டும் தொடங்கும் மிடுக்கு´ அவனிடம் இருந்த படியால்தான் காலத்தால் அழியாத கவிதைகளையும் விடுதலைப் போருக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் அவனால் வழங்க முடிந்தது.

´தீட்சண்யம்´ என்ற இந்த நூலில் தீட்சண்யன் சிங்களத்தின் எறிகணை வீச்சுக்கு காலை இழக்க முன்னும் பின்னும் எழுதிய கவிதைகள் உள்ளன. ´அன்னைக்கோர் கடிதம்´ என்ற கவிதை தீட்சண்யனின் சோகத்தை எங்கள் இதயங்களிலும் ஊடுருவ வைக்கிறது.

கொள்ளிக்கும் கொடுப்பனவு இல்லாமற் போய் விட்ட
´ஷெல்`லின் பாற்பட்ட வெறும் ஊனனாகி விட்டேனே
என்ற வரிகள் அவரது துயரத்தை கோடிட்டுக் காட்டுகின்றன.

தீட்சண்யனின் ´எங்கே போகிறோம்...?` என்ற கவிதை அன்றைய வன்னியின் அவல நிலையை ஒவ்வொரு வன்னித்தமிழனும் சொல்ல நினைத்து முடியாமல் போய் விட்ட வார்த்தைகளை மிக அழகாகச் செப்புகிறது.
குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி
குடும்பக் காட்டுடன் கியூவில் நிற்கிறோம்
உண்மையில் நாம் எங்கே போகிறோம்...?
என்று கேட்கின்ற தீட்சண்யனின் கேள்வி யதார்த்தமானது.

´போராட்டமே வாழ்வாக..´ என்ற கவிதையில் பெண்ணுக்கு அவர் விடுக்கும் அழைப்பு பாரதியின் பரம்பரை ஈழத்திலும் தொடர்கிறது என்பதை எடுத்தியம்புகிறது.
குனிந்து நடந்து
குரல் வளையது நலிந்து
நின்றது போதும்
நிமிர்ந்து தோளில் போர்க்கலனைச்
சுமந்து வந்திடு தோழி!
என்று அவர் விடுக்கும் அழைப்பு அவரின் பெண்கள் தொடர்பான கருத்தோட்டத்திற்கு சான்று பகர்கின்றது.

´திரும்புங்கள்.. வாருங்கள்.. ஏந்துங்கள்..´ என்ற கவிதை இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலப்பகுதியில் எழுதப்பட்டது. அதில் கவிஞர் சொல்கிறார்
...சொந்த மண்ணிலே வீதியிலே
எங்கள் காணிகள் மனைகளில்
மனைவிகளில் கூடவா
மாற்றானின் விரல்கள்..?
எவ்வளவு நாசூக்காக எம்மீது திணிக்கப்பட்ட அடக்கு முறை சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

´கரும்புலிகள்´ என்ற கவிதையொன்றில்
முகம் தெரியாமலே மறைந்து போன இவர்கள்
சில சமயங்களில்
சுவரொட்டிகளிலும் கூடத் தலை காட்டுவதில்லை...
என்ற வரிகள் எவ்வளவு தூரம் ஆழமானவை..!

கவிஞர் தீட்சண்யனின் கவிதைகள் அர்த்தம் நிறைந்தவை மட்டுமல்ல. சந்தம் நிறைந்தவையும் கூட. ´இந்த நூற்றாண்டில் இவன் போல் யார் உளர்´ என்ற கவிதையில்
உடலைக் கருக்கியுன் குடலைச் சுருக்கி நீ
கடலைப் பிளந்திடும் தியாகப் போர் தொடுத்தாய்
விடலைப் பருவத்து விருப்புகளைத் துறந்தாய்
குடலைப் பருவத்தில் குலத்துக்காய் மடிந்தாய்...
என்ற வரிகள் இதற்குச் சான்று பகர்வன.

புரட்சிக் கனலாக சுடரும் இவன் மார்கழிப் பனியாக குளிரும் கவிதைகளையும் எழுதுவதில் வல்லவன். ´ரசனை´, ´லயம்´ என்ற கவிதைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.

இறுதியாக...
இங்கே தயவு செய்து மலர் போட வேண்டாம்
தமிழீழத்துக்கு கொஞ்சம் உரமேற்றுங்கள்...
என்ற வேண்டுகோளுடன் தீட்சண்யனின் பேனா மௌனித்து விட்டது. என்றாலும் அவன் கவிதைகள் ஊடாக காலமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதை ´தீட்சண்யம்´ உங்களுக்கு உணர்த்தும்.

- திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்)
வற்றாப்பளை

பிறேமராஜன் மாஸ்டர்

பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000
ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை


என் பிரிய அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) எம்மை விட்டுப் பிரிந்து 20 ஆண்டுகள் ஓடி விட்டன. என் அண்ணனோடும் தம்பியர் மொறிஸ், மயூரன் ஆகியோருடனும் நன்கு பழகி அவர்களுடனான பல நினைவுகளைத் தன்னுள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருக்கும் விமலனின் [விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் மாவீரன் தாகூரினதும்(சுரங்கத்தாக்குதல் வீரமரணம்) சகோதரன்] நினைவு மடல் இது.

பிறேமராஜன் மாஸ்டர்
ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்.

பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.

வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக அவரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன

1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார் நான் என்னுடைய பெற்றோரையும் சகோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப்படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.

1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.

1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்கு சென்றிருந்தார்கள்

அவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.

அவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல், என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

அப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.

அவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்ஷணியன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

பிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.

அவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

அவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ்
இவர் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.

மற்றையவர் கப்டன் மயூரன்
இவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு "மயூரன் பதுங்கிச் சுடும் படையணி" என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.

- விமலன்

புலிகளின் குரல், உறுமல் சுரேந்திரன்

 புலிகளின் குரல், உறுமல் சுரேந்திரன்

புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார்.

திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ''புலிகளின் குரல்'' என்று அழைக்கப்பட்டு பின்னர் ''உறுமல்''  என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர்.

இதேவேளை இவரது ஆங்கிலப் புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ''படைத்துறைச் செயலகம்'' முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர்.

பொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

புதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ''THE WILD GEESE'' எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார்.

இறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மதுத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று உயிர் போகும் வரை அங்கேயே வசித்து வந்தார்.

Quelle - Tamil News Pathivu