Tuesday, June 29, 2004

மேஜர் மாதவன்



நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான்.

மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.

பழகிய மனங்களில் இவன் ஒரு அழியாச்சுடர். அல்லது ஞாபகச்சிற்பம்.
தொண்ணுhறுகளின் முன்பாதிக்கால நாட்களில், மாதவன் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக நடுவப்பணியகத்தில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அங்கே வரும் கலைஞர்களுடன் பழகுவதிலும் அவர்களுடன் ஒரு போராளியாக உறவாடுவதிலும், கலைகளைப் பயில்வதிலும் முன்மாதிரியாக இருந்தான். எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பது மாதவனின் தனி அடையாளம். எதிலும் எப்போதும் ஓய்வோ, சோர்வோ இல்லாத வேக உழைப்பு இவனுடையது.

மாதவன் இறுக்கமானவன். அதேவேளையில் அமைதியானவன். இளகிய இதயமுடையவன். மாதவன் தன் போராட்டச் செயற்பாடுகளினூடு ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. 'தாயகக் கனவு' வீடியோப்படத்தில் தன் வாழ்வுடன் இணைந்த பாத்திரமாக போராளிப்பாத்திரமேற்று நடித்திருந்தான். தாயக விடுதலைப் பாடல்களில் 'கரும்புலிகள்' ஒலிநாடாவில் 'தலைகள் குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா' என்ற பாடல் அவனது முதற்பாடலாக அமைந்து, எல்லோர் வாயிலும் அது ஒலித்தது. பின்னர் 'முல்லைப்போர்' இசை நாடாவிலும் அவன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. 'தேசத்தின் புயல்கள்' பாகம்-1 இசை நாடாவில், தானே எழுதி போராளிக் கலைஞர்களுடன் பாடிய 'கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்' என்ற பாடல் எங்கும் எல்லோராலும் நன்கு பேசப்பட்டது. இப்படியாக வந்ததற்கும்; இருந்ததற்கும்; சென்றதற்கும் கணிசமான சுவடுகளை விடுதலைப் போராட்டத்தில் பதித்துவிட்டு களத்தில் அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி வெளியே குயிலெனப்பாடி, நதியென ஆடித்திரிந்த அந்த விடுதலைப் பறவையின் நினைவுடன் இந்த மண்ணும் அதன் வரலாறும் இருக்கும்.

காற்றில் எழுதிய பாடலாக, நம் நினைவின் பெரும் பெருக்காக, எங்கள் முற்றங்களில் பூக்கும் மலராக மாதவன் என்றும் கலந்திருப்பான்.

nantri-erimalai - 2001

Monday, June 28, 2004

மேஜர் ஆதித்தன்



ஆண்டு 1983, யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இருபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.
'என்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ' பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள். பருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி மேஜர் ஆதித்தன்.

சின்னவயதில் இருந்தே வயதுக்குமீறிய பொறுப்புக்களையும், அவனது அளவைவிட பெரிய அளவில் துன்பங்களையும், துயரங்களையும் தன் தோள்களில் தாங்கி வளர்ந்தவன்தான் கரும்புலி மேஜர் ஆதித்தன்.

இவனைப் பற்றிச் சொல்லும்பொழுது வார்த்தைகள்கூட ஈரமாகும். சின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து விட்டான். உடலில் வலுவற்ற நிலையிலும் பிள்ளைகளுக்காக இயந்திரமாய் எஸ்ரேட்டில் கூலி வேலை செய்கிறாள் தாய். தமையன் ஒருவன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். சின்னண்ணனும் இவனைப் போலவே பாடசாலைக்குச் செல்லும் சிறுவன். இந்த நிலையில் நோயின் பிடி இறுக்கியதால் படுக்கையில் விழுந்துவிடுகிறாள் தாய். தங்களைக் காத்த தாயைக் காக்க இந்தச் சிறுவர்களால் என்ன செய்யமுடியும்? அண்ணனும் தம்பியும் சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். அண்ணன் எப்படியோ எங்கோ ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்துகொண்டான். இவனும் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். நாட்கள் கழிகின்றன.

தாயின் நினைவுடனும், நெஞ்சு நிறையக் கனத்த சுமையுடனும் பொழுதைக் கழிக்கும் சுதாகரனுக்கு (ஆதித்தனுக்கு) அன்று ஒரு புதிய திருப்புமுனையான நாள். வேலை முடிந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டு வானொலி ஒன்று தனது செய்திகளுக்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது செவ்வி ஒன்றை ஒலிபரப்புகிறது. தனது புலன்கள் யாவற்றையும் அந்தக் குரலை நோக்கித் திருப்பிய சுதாகரனுக்கு, அந்தத் தலைவனின் ஒவ வொரு சொல்லும் புதிய தெண்பாய், நம்பிக்கையின் ஒளியாய் அவனுள் சுடர்விடத் தொடங்குகின்றது.

'தமிழருக்கான போராட்டம்', அவர்களுக்கான தலைவன் எதையுமே இதுவரை அறிந்திராத அவன், இப்போது அந்தத் தலைவன் மீதும் அவரது கொள்கை மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு தாயிடம் செல்கின்றான். தான் யாழ்ப்பாணம் செல்வதாகக் கூறி அனுமதி பெற்றுச்சென்று தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக்கொள்கின்றான்.

பயிற்சி முடித்தவன் சண்டைக் களங்களில் தன் திறமையைக் காட்டினான். ஜெயசிக்குறுவில் ஓர் நாள் எதிரியின் இறுக்கமான முற்றுகைக்குள் சிக்கியபோதும் தன் அணியினை திறமையாக வழிநடத்தி முற்றுகையை உடைத்து வெளிவந்தான் ஆதித்தன்.

எனினும் தேசத்துக்காக செய்யவேண்டிய உயரிய பங்களிப்புப் பற்றியே அவனது மனம் தினமும் அங்கலாய்த்தது. தான் கரும்புலியாய் போக எண்ணித் தனது விருப்பத்தை தலைவருக்கு கடிதமாய் அனுப்பினான்.

சில காலத்தின் பின் கடிதமொன்று வந்தது தாயிடமிருந்து. 'மகனே எங்களை ஒருக்கா வந்து பாத்திட்டுப்போ' அட்டை கடித்து இரத்தம் கசியும் காலுடன், மறுநாளும் வேலைக்குப் போகும் அந்தத் தாய் கூறுவாள். 'மகனே நான் கஸ்ரப்படுகிறது உங்களுக்காகத்தான், நீங்க நல்லா இருக்கோணும், எனக்கு அது போதும்' அதே தாய் அழைக்கிறாள் தன் கடைக்குட்டியை ஒருதடவை பார்ப்பதற்கு,

அன்று மாலையே, அவன் நேசித்த விசுவாசித்த தலைவனிடம் இருந்து பதில்க் கடிதம் வருகிறது, கரும்புலி அணியில் ஆதித்தனை இணைத்துக்கொள்வதாக. நீண்ட சிந்தனையின்பின் கரும்புலிப் பணிக்கு தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்து, அதற்கான பயிற்சிக்குச் செல்கிறான். பயிற்சி முடிந்தபின் இவனது இலக்கு மணலாற்றில். பயிற்சி எடுக்கப்பட்டது. ஆனால், திட்டம் கைவிடப்பட்டது. பின் யாழில் ஓர் இலக்கு, இலக்குத்தேடி இருளில் சென்றவனை இராணுவ வீரன் கட்டிப்பிடிக்க நொடிப்பொழுதில் அவனைத் தாக்கிவிட்டு மீண்டுவந்தான் ஆதித்தன். அதுவே ஒரு வீரக்கதை. பின்னர் அவனுக்கு இறுதி இலக்கொன்று கிடைக்கிறது. சென்றான் சென்றார்கள் திரும்பி வரவேயில்லை. செய்திமட்டும் வந்தது.
அவன் கையளித்து விடைபெறுகின்ற இறுதிநேரம் சொன்னான். 'மச்சான், அண்ணை எங்களைப் போகச்சொல்லி விடைகொடுத்தநேரம். அண்ணையின்ர முகம் வாடிப்போய் இருந்திச்சு, அதை நினைக்க மனசுக்கு கஸ்ரமாக இருக்கு. அண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். அதைப் பார்த்து அண்ணை சிரிக்கேக்கதான் என்ர மனமும் ஆறுதலடையும்.' என்று

nantri-erimalai-2001

Sunday, June 27, 2004

லெப்டினன் கேணல் சுபன்



மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.

1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால் பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

'சுபன்' தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேட கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

nantri-Erimalai-2001