Tuesday, September 25, 2007

லெப்டினன் கேணல் திலீபன்

லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987


தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும் -தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்



'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.

இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். 'ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! - சபேசன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)


திலீபன் பாடல்!

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே

வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்

அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.

தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு

கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.

நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்

தீட்சண்யன்
15.9.94