Sunday, November 14, 2004

லெப்.கேணல் பாண்டியன்

செல்லத்துரை சிறிகரன்
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்

லெப்.கேணல் ஜொனி

விக்கினேஸ்வரன் விஜயகுமார்
பருத்தித்துறை
21.05.1962 - 13.03.1988

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார்.

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (16.03.06) லெப்.கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

Monday, October 11, 2004

இரண்டாம் லெப்டினென்ட் மாலதி

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.

பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

Extract from the book named "Women Fighters of Liberation Tigers"
written by Ms.Adele Balasingam

The Indo- LTTE war broke out on the 10th October1987. On the very first day of the war, the LTTE women unit confronted the Indian troops at the strategic junction of Kopay, a village 5 kilometers from the Jaffna city. As a convoy of Indian troops advanced along the Navatkuli-Kopay Road the LTTE women fighters encamped at Kopay were prepared to confront a powerful force.

The women fighters were near the Kopay junction in defensive positions when a convoy of Indian troops arrived in the black of the night. Hundreds of troops jumped out of their vehicles and started to advance towards the women fighter's positions. Heavy fighting broke out. Our women cadres fought hard, putting up fierce resistance against a formidable contingent with superior firepower. In that clash Malathy died. Malathy was the first women fighter to die in battle. Janani, a veteran of many battles, takes up the story of Malathy's death.

"We were in our bunkers firing at the army. Hundreds of Indian troops had jumped out of their vehicles and were firing as they moved towards us. Motor shells were exploding everywhere. We knew the army was advancing quickly. Malathy was shot in both legs. She couldn't move and she was bleeding profusely. Realising that she was mortally wounded, she swallowed cyanide. A decision had been made to withdraw because we were heavily out-numbered. Myself and another girl went over to carry Malathy. Malathy refused to come with us. She begged us to leave her and asked us to withdraw. Nevertheless, we lifted Malathy and carried her and when we arrived at a safe place she was dead."

Friday, July 23, 2004

லெப். செல்லக்கிளி - அம்மான்


சதாசிவம் செல்வநாயகம்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான
கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.


1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ''அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ"" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

"அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக'கும' எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து '"பசீர் காக்கா"" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். 'சுடு" என்ற அப்பையா அண்ணை உடனே 'கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு" என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ''தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ''யாரது"" என்று முன்னே வந்தனர்.

''அது நான்ராப்பா"" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ''அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை"" என்றார் ரஞ்சன்.

''இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்"" என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. 'எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ''அண்ணா அவன் அனுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

''கரையால் வாருங்கள்"" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ''யாரது'' என்று வினவ அம்மான் ''அது நான் தம்பி" என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ''அம்மானைக் காணவில்லை"" என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ''டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

- அன்புடன் கிட்டு -

Saturday, July 03, 2004

கரும்புலி மேஜர் டாம்போ

காசிப்பிள்ளை தயாபரன்
நாச்சிக்குடா மன்னார்
17.8.1967 - 19.3.1991


1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.

"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். "எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்" களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்" சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். "நானும் கொஞ்சதூரம் வாறன்" நண்பன் கூற, "வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்"

கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.

மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.

கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். "டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்" என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று.... மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.

"நான் போறன், வருவனோ தெரியாது" என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.

டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்... அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன - அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்.... நினைத்துப்பார்க்கிறோம்....

"வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா... சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.

இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.

நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.

நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது...


ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

- கதிரவன் -