வீரவேங்கை.ஆனந்
(இராமநாதன் அருள்நாதன்-மயிலிட்டி)
வீரப்பிறப்பு 25-01-1964 வீரமரணம் 15-07-1983
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன், உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.
நெஞ்சில் வழியும் இரத்தத்தோடு, 'என்னைச் சுடடா, சுடு' என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப், பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப் பார்க்கின்றான் ஆனந்த். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிங்களக் கூலிப்படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் ஆனந்தையும் வீழ்த்துகின்றன.
சீலனோ அந்தக் கெரில்லாப் படைத் தலைவர், அரசபடையால் வலைவீசித் தேடப் படுபவன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் சம்வபவத்தில், சீலனின் தலைமையிலே அந்தக் கெரில்லாத் தாக்குதல் நடைபெற்றது. என்பதைச் சிங்களக் கூலிப்படைகள் தெரிந்து வைத்திருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த அங்கத்தவன் - சிங்களக் கூலிகளின் கரங்களில் அந்தக் காளை பிடிபடவே முடியாது.
சீலனுக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனப்பாக்குவம் சிந்திப்பதற்கு அனுபவம் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால், இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பியிற்சி பெற்று ஏழுமாதங்கள் கூட நிரம்பாத நிலையில், இயக்க ரகசியத்தைக் காத்துக் கொள்வதற்குத் தன்னையும் சுட்டுவிடுமாறு சக வீரனைப் பணித்த ஆனந்தின் இலட்சியத் தூய்மை, நம்மைச் சிலிர்ப்படையச் செய்கிறது.
விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுதப் பாதையில் நம்பிக்கையோடும் உறுதியோடும் கால் பதித்த அந்த இளைஞன், எத்தனையோ யுத்த களங்களைக் காண ஆசைப் படிருப்பான். ஆனால் அந்தச் சாதனைகளை எல்லாம் செயலில் காட்ட அந்த வீரமகனின் சின்ன ஆயுள் இடம் கொடுக்க வில்லை. பத்தொன்பது வயதிற்குள்ளேயே ஆனந்த் சாவை அணைத்துக் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டமே.
ஆனந்திற்கு வயதை மீறிய வாட்ட சாட்டமான உடம்பு. அரும்பு மீசை, மேவித்தான் தலையிழப்பான். அடித் தொண்டையில்தான் கதைப்பான். யாரோடும் கோபிக்க மாட்டான். நண்பர்களோடு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவன். எந்த வேலையையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செய்பவன். சமையல் செய்வதிலிருந்து, கிணறு வெட்டுவது வரை அலுப்பில்லாமல் எதையும் செய்ய முன்நிற்பான்.
மெல்லிய நீலநிறத்தில் ஆடைகள் அணிவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். மயிலிட்டி மண் ஈந்த வீரமைந்தன் ஆனந்த், நீர்கொழும்பில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றான். பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்றான். க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞானம் பயின்ற ஆனந்த் அரசியலைப் பின்னாளில் வாழ்க்கையாக வரித்துக் கொண்டான்.
பாடசாலைக் காலங்களில் ஆனந்த் சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தான். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் சிறந்த கோல் காப்பாளராகப் பிரபல்யம் பெற்றிருக்கிறான். சிறந்த கிரிக்கெட் வீரனுமாவான். கராத்தேயும் கற்றிருந்தான். சகலவிதமான வாகனங்களையும் நேர்த்தியாகச் செலுத்தும் திறமை கொண்டவன்.
தனது குறுகிய ஆயுதப் பயிற்சிக் காலத்திலும் ஆயுதங்களின் நுட்பங்களை நிறையத் தெரிந்து வைத்திருந்தான். வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவனுக்குப் போதுமான இரசாயண அறிவிருந்தது. துப்பாக்கிப் பயிற்சியின் போது மிகக் குறைந்த நேரத்தில் கூடிய இலக்குகளை குறிபார்த்து அடிக்கக் கூடியவன்.
சரியாக இலக்குக் குறிவைத்து அடித்துவிட்டான் என்றால், ' ஹாய்' என்று கைகளை உயர்த்திக் குலுங்கிச் சிரிக்கும்போது, ஒரு பாடசாலை சிறுவனின் பெருமிதமே வெளிப்படும். (குறி தப்பாது சுடுகின்ற ஒரு கெரில்லா வீரனின் திறமையயை, James Bond சாகஸங்கள் என்று கொச்சையாக அர்த்தப் படுத்திக் கொண்டு நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை) பலம் மிகுந்த அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராகக் குறைந்த அளவு ஆயுதங்களுடன் தொடுக்கப்படுகின்ற கெரில்லாத் தாக்குதலின்போது, இத்தகைய திறமை வாய்ந்த கெரில்லா வீரர்கள் தனிமுக்கியம் வகிக்கின்றார்கள்.