கனகமக்கா |
போராட்டத்தில் இந்த தாய் யார்...
கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை
தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய
கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க
முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி
விட்டாள் கனகமக்கா.
காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள்.
காடுகளுடன் அண்டிய அவ்வூரில் இந்திய இராணுவத்தின் பெரும் படைப்பிரிவு ஒன்று முகாமிட்டிருந்தது. இப்பிரிவைச் சேர்ந்த இராணுவம், கனகமக்கா தன் பிள்ளைகளைப் போல் நேசிக்கும் இயக்க வீரர்களை தேடி அழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்விராணுவ நடமாட்டங்களை அவ்வப்போது அறிந்து இயக்க வீரர்களின் முகாம்களுக்குச் சென்று தெரிவிப்பதை தனது கடமைபோல் செய்தாள்.
ஒரு நாள் ஊரின் எல்லையில் வைத்து மேஜர் கஜன் ஒரு அவசரக் கடிதத்தைக் கொடுக்கிறான். மின்வெட்டில் அதை ஒளித்துக் கொள்கிறாள் கனகமக்கா. “ஆமி அங்கால நிக்குதக்கா கவனம்” கஜன் சொல்கிறான்.
வாயில் கொதப்பிய வெற்றிலையுடன் வெடவெட என்று நடக்கத் தொடங்குகிறாள் கனகமக்கா. இந்திய கூலி இராணுவத்தினன் ஒருவன் கனகமக்காவை வழிமறித்து ‘உந்தப் பக்கம் ஏன் போற’ என்று கேட்கிறான். சற்றும் பதட்டமின்றி ‘விறகு முறிச்சரப் போறான் சாமி’ என்கிறாள் கனகமக்கா. இந்தியச் சிப்பாய் சிறிது ஐயத்துடனே அவளைப் போகச் சம்மதிக்கிறான்.
காட்டு வழிகளினூடாக நடந்து விடுதலைப் புலிகளின் முகாமைச் சென்றடைகின்றாள். முகாமில் இருந்தவர்களின் இன்முகம் கண்டு முகம் மலர்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளைவிட பாசம் பொங்க பழகுகிறாள். மேஜர் கஜனின் கடிதத்தை கொடுத்துவிட்டு மீண்டும் திரும்புகிறாள். வழியில் “நெரிஞ்சியாக்கும் குத்திப் போட்டுது” என்றவாறு குனிந்தவள் முல்லை எடுக்கும் போதுதான் உணருகிறாள் அம்முள் குத்தியதை விட மீண்டும் எப்படி இந்திய இராணுவத்தினரைக் கடப்பேன் என்று நினைக்கிறாள். கையிலோ, தலையிலோ ஒரு தடி விறகு கூட இல்லை என்று பதட்டமடைகிறாள். காட்டில் பெரியதொரு புளியமரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறாள். பல மணி நேரத்தின் பின் கூலிப்பட்டாளம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அதன் பின்புதான் கனகமக்கா வீடு திரும்புகிறாள்.
இப்படி பலமுறை ஏமாந்த இராணுவம் கனகமக்கா மேல் சந்தேகிக்க ஆரம்பிக்கிறது. இராணுவத்துடன் ஒட்டிய துரோகக் கும்பலுடன் தேடப்படுகிறாள் கணக்மக்கா. “என்னவாயிருந்தாலும் நீயும் பொம்பிளை தானேடி” என்று கூறும் மாமியாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து மாமியாருடன் அவளின் வீட்டில் தனது இருப்பை அமைத்துக் கொள்கிறாள் கனகமக்கா.
ஒருநாள் நடுச்சாமம் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. யாரது இந்த நேரத்தில் என தனக்குள் நினைத்துக் கொண்டு கதவை திறக்கிறாள் கனகமக்காவின் மாமியார். மாமியார் உடலெல்லாம் வெடவெடத்து நடுங்குகிறாள். கனகமக்கா துணிந்து விட்டால். மரணமாயினும் தன்மானத்துடன் ஆகவேண்டும் எண்றெண்ணினாள். கதவைத் திறந்ததும் உள்ளே வந்த இராணுவச் சிப்பாய் ‘யாரடி கனகம்’ என்கிறான். ‘நான்தான் கனகம், என்ன வேணும்’ என்கிறாள் கனகமக்கா. “நீ யாருக்கடி தூது போகிறாய்” என்று சத்தமிட்டவாறே கையிலிருந்த துப்பாக்கியை இயக்குகிறான். பல குண்டுகள் தாக்க நொடிப்பொழுதில் கனகமக்கா தாய் மடியில் சாய்ந்தாள்.
துயருற்று அழும் குழந்தையைப் போல் கனகத்தின் மாமியார் அழுதாள். அந்த அழுகையிலிருந்து அவள் ஒரு விதி செய்யத் துணிந்தாள். துப்பாக்கி கட்டைகளோடு நிற்கும் இந்தியச் சிப்பாய்களை பழிவாங்கத் துடிக்கும் பார்வையோடு விழித்து “கனகத்தை மட்டுமில்லை நீ யாரைக் கொண்டாலும் நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டனடா” என்று கர்ஜிக்கிறாள். கனகம் மடியவில்லை, அவளின் நினைவை எம் தாய்ப் பூமி தன் நெஞ்சில் ஆறாத காயமாக சுமந்து கொண்டெழுகின்றது